You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை அரசியல்: ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கு அமைச்சர் பொறுப்பு - என்ன சொல்கிறது அரசியலமைப்பு?
- எழுதியவர், யூ.எல். மப்றூக்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையின் புதிய அரசாங்கத்துக்குரிய அமைச்சர்கள் நேற்று நியமிக்கப்பட்ட நிலையில், 'பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி கோட்டபாபய ராஜபக்ஷ தன்வசம் வைத்திருப்பார்' என, அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிகழ்வின் போது அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அரசியலமைப்பில் 19வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்குப் பின்னர், ஜனாதிபதியொருவர் அமைச்சுப் பதவியொன்றை தன்வசம் வைத்திருக்க முடியாது என்றும், அந்த வகையில் தற்போது பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி கோட்டபாபய ராஜபக்ஷ தன்வசம் வைத்திருப்பது - அரசியலமைப்புக்கு முரணான விடயம் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதேவேளை, ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் இவ்விடயம் தொடர்பில் வாதப் பிரதிவாதங்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றமையினையும் பரவலாகக் காண முடிகிறது.
எனவே, இவ்விடயத்தில் தெளிவைப் பெற்றுக் கொள்ளும் வகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரனிடம் பிபிசி தமிழ் பேசியது.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்து
"அரசியலமைபின் 19வது திருத்தத்தில், ஜனாதிபதியொருவர் அமைச்சுப் பதவியை தம்வசம் வைத்திருக்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குத்தான் அமைச்சுப் பதவியை வழங்க முடியும்.
அதேவேளை, 19ஆவது திருத்தத்தின் பின்னர் ஜனாதிபதி ஒருமுறை மட்டும் அமைச்சுப் பதவிகளை வைத்திருப்பதற்கும் அதே திருத்தத்தில் விதிவிலக்கு வழங்கப்பட்டும் இருந்தது.
அதாவது 19வது திருத்தம் அமுலுக்கு வரும்போது ஜனாதிபதியாகப் பதவி வகிப்பவர், அந்தப் பதவிக் காலத்தில் மட்டும் மூன்று அமைச்சுக்களைத் தன்வசம் வைத்திருக்க முடியும் என 19வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் ஆகியவைவே அந்த மூன்று அமைச்சுக்களுமாகும்.
ஆனால், அந்த ஜனாதிபதியின் பதவிக் காலத்துக்குப் பிறகு, எந்தவொரு அமைச்சுக்களையும் ஜனாதிபதியொருவர் தன்வசம் வைத்திருக்க முடியாது என, அரசியலமைப்பின் 19வது திருத்தம் தெளிவாகக் கூறுகிறது.
அந்த வகையில், தற்போது பாதுகாப்பு அமைச்சினை ஜனாதிபதி தன்வசம் வைத்திருக்கின்றமையானது அரசியலமைப்பு மீறலாகும்" என்று, சிரேட்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.
சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் விளக்கம்
இதேவேளை, பிபிசி தமிழிடம் பேசிய அரசியல் செயற்பாட்டாளர், சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட், "பாதுகாப்பு அமைச்சை மட்டும் ஜனாதிபதி தன்வசம் வைத்திருக்க முடியும் என்றும், அதற்கு எந்தவிதத் தடைகளும் கிடையாது எனவும்" தெரிவித்தார்.
"தனக்கு வேண்டிய அமைச்சுத் துறையை ஜனாதிபதி தன்வசம் வைத்திருக்க முடியும் என 19வது திருத்தத்துக்கு முன்னர், அரசியலமைப்பின் சரத்து 42(2)இல் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயினும், 19வது திருத்தத்தின் மூலம், அந்தச் சரத்து நீக்கப்பட்டு விட்டது. அதாவது ஜனாதிபதியொருவர் தனக்கு விரும்பிய அமைச்சுக்களை தன்வசம் வைத்திருக்க முடியும் என்கிற சட்ட ஏற்பாடு தற்போது இல்லை".
"ஆனாலும் 19ஆவது திருத்தில் பிரிவு 51 எனும் இடைக்கால ஏற்பாட்டின்படி பாதுகாப்பு, மஹாவலி மற்றும் சுற்றாடல் துறை ஆகிய மூன்று அமைச்சுக்களை ஜனாதிபதி தன்வசம் வைத்துக் கொள்ள முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த இடைக்கால ஏற்பாடானது மந்தைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மாத்திரமே செல்லுபடியாகும். மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் நிறைவடைந்தவுடன், பிரிவு 51 எனும் இடைக்கால ஏற்பாடுசெல்லுபடியற்றதாகி விட்டது.
இந்தப் பின்னணியில்தான், 19ஆவது திருத்தத்துக்கு இணங்க ஜனாதிபதியொருவர் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் தன்வசம் வைத்திருக்க முடியாது என்கிற வாதமொன்றினைய சிலர் முன்வைத்து வருகின்றனர். ஆனால், அந்தவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது" என்கிறார், சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட்.
அவர் தொடர்ந்து பேசுகையில்; "ஜனாதிபதி ஒருவர் தன்வசம் பாதுகாப்பு அமைச்சினை வைத்திருக்க முடியும். ஆனால், வேறு அமைச்சுக்களை வைத்திருக்க முடியாது" என்று கூறியதோடு, "அரசியலமைப்பின் 4(ஆ) சரத்து இதற்கானஅதிகாரத்தை வழங்குகிறது" எனவும் தெரிவித்தார்.
"அதாவது 'இலங்கையின் பாதுகாப்பு உள்ளிட்ட, மக்களது ஆட்சித்துறைத் தத்துவம், மக்களால் தெரிவு செய்யப்படும் குடியரசு ஜனாதிபதியினால் பிரயோகிக்கப்படுதல் வேண்டும்' என்று அரசியலமைப்பின் 4(ஆ) சரத்து குறிப்பிடுகிறது. அந்த வகையில், பாதுகாப்பு அதிகாரத்தை அரசியலமைப்பின் 4(ஆ) சரத்து - ஜனாதிபதிக்கு கொடுத்திருக்கிறது.
எனவே, பாதுகாப்புத் துறையை ஜனாதிபதி தன்வசம் வைத்திருக்கலாமா இல்லையா என்கிற வாதம் இங்கு எழவேண்டிய தேவையே இல்லை.
பாதுகாப்பு அமைச்சுடன் சேர்த்து, வேறு துறைகளையும் ஜனாதிபதி வைத்திருப்பதற்கான அதிகாரத்தைத்தான் 44(2) சரத்து வழங்கியது. ஆனால், அந்த சரத்து இப்போது நடைமுறையில் இல்லை.
மேலும், பாதுகாப்பு அமைச்சை வேறு யாருக்கும் ஜனாதிபதி வழங்கவும் முடியாது.
இந்த இடத்தில் சிலருக்கு ஒரு கேள்வி எழலாம். பாதுகாப்பு அமைச்சினை வைத்திருக்கும் அதிகாரத்தை 4(ஆ) சரத்து ஜனாதிபதிக்கு வழங்கியிருக்கும் போது, 19ஆவது திருத்தத்தின் 51ஆவது பிரிவான இடைக்கால ஏற்பாடானது ஜனாதிபதிக்கு சுற்றாடல் மற்றும் மஹாவலி அமைச்சுக்களுடன் பாதுகாப்பு அமைச்சினையும் வைத்திருக்க முடியும் என - ஏன் மீண்டும் குறிப்பிடுகின்றது என்று கேட்கக் கூடும்.
இதற்கான விளக்கம் என்னவென்றால், இடைக்கால ஏற்பாட்டின் படி ஜனாதிபதி வைத்திருப்பதற்கு முடியுமான அமைச்சுக்களாக சுற்றாடல் மற்றும் மஹாவலி ஆகியவற்றினை மட்டும் குறிப்பிட்டிருந்தால், அந்த இடத்தில் ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கும். 'சுற்றாடல் மற்றும் மஹாவலி அமைச்சுக்களை மட்டும்தான் ஜனாதிபதி வைத்திருக்க முடியுமா? பாதுகாப்பு அமைச்சை தன் வசம் வைத்திருக்க முடியாதா?' என்கிற கேள்விகள் உருவாகியிருக்கும்.
எனவே தெளிவுக்காகவே, சுற்றாடல் மற்றும் மஹாவலி அமைச்சுக்களைக் குறிப்பிட்டு, பாதுகாப்பு அமைச்சினையும் ஜனாதிபதி வைத்திருக்க முடியும் என்று, 19வது திருத்தத்தின் 51ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், 19ஆவது திருத்தத்துக்கு இணங்க தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சினை தன்வசம் வைத்திருக்க முடியும்" என்கிறார் சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட்.
நீதியமைச்சர் அலிசப்ரி
இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தன்வசம் பாதுகாப்பு அமைச்சை வைத்திருக்கின்றமை தொடர்பில் எழுந்துள்ள வாதப் பிரதிவாதங்கள் தொடர்பில், சிரேஷ்ட சட்டத்தரணியும் நேற்றைய தினம் நீதியமைச்சராக நியமிக்கப்பட்டவருமான அலிசப்றியை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியபோது, "பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி தன்வசம் வைத்திருப்பதற்கு, அரசியலமைப்பில் இடமுள்ளது" எனத் தெரிவித்தார்.
"அரசியலமைப்பின் 4ஆவது சரத்துக்கு இணங்க, நாட்டின் பாதுகாப்பு - ஜனாதிபதியினால் பிரயோகப்படுத்தப்படுதல் வேண்டும். அந்த வகையில் ஜனாதிபதியிடம்தான் பாதுகாப்பு அமைச்சு இருக்க வேண்டும்" என்றார்.
அதேவேளை, "ஜனாதிபதி விரும்பினாலும் கூட, பாதுகாப்பு அமைச்சை வேறு எவருக்கும் வழங்க முடியாது" எனவும் நீதியமைச்சர் அலி சப்றி மேலும் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: