You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அம்மோனியம் நைட்ரேட்: 22 கன்டெய்னர்களில் எஞ்சிய ரசாயனத்தை அனுப்பியது சென்னை சுங்கத்துறை
சென்னை சுங்கத்துறை சேமிப்புக் கிடங்கில் மீதமிருந்த அம்மோனியம் நைட்ரேட் அனைத்தும் 22 கன்டெய்னர்களில் ஹைதராபாதுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கரூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்துவதாகக் கூறி, 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை 2015ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது.
ஆனால், அந்த தனியார் நிறுவனத்திடம் தகுந்த உரிமம் இல்லை என்று கூறி, இறக்குமதி செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டை சுங்கத் துறை பறிமுதல் செய்தது.
பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட், மணலியில் உள்ள சுங்கத் துறையின் வேதிப் பொருட்களுக்கான சத்வா சிஎஸ்எஃப் கிடங்கில் 37 கன்டெய்னர்களில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சேமித்து வைக்கப்பட்டிருந்தது.
தங்களிடமிருந்து அம்மோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டதை எதிர்த்து தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சுங்கத் துறைக்குச் சாதகமாக தீர்ப்பு வெளிவந்தது.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. பல்வேறு காரணங்களால் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டில், 697 மெட்ரிக் டன் வேதிப் பொருள் மட்டுமே எஞ்சியிருந்தது.
இதற்கிடையே, லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் நகர வெடிச்சம்பவத்துக்குப் பிறகு, இந்தியா முழுவதும் அம்மோனியம் நைட்ரேட் இருப்பு வைத்திருக்கும் இடங்களில் அச்சம் பரவியது.
இதனால், சென்னையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் அம்மோனியம் நைட்ரேட்டை உரிய இடத்துக்கு கொண்டு செல்லும் பணிகள் கடந்த வாரம் துரிதப்படுத்தப்பட்டன.
அதன் முடிவில் தெலங்கானா மாவட்டம் ஹைதராபாதைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கு எஞ்சிய அம்மோனியம் நைட்ரேட் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு, ஞாயிற்றுக்கிழமை 10 கன்டெய்னர்களில் 181 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் தெலங்கானா மாநிலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதற்குப் பிறகு செவ்வாய்க்கிழமை 12 கன்டெய்னர்கள் ஹைதராபாதுக்கு அனுப்பப்பட்டன. மீதமிருந்த 300 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் முழுவதும் 22 கன்டெய்னர் லாரிகளில் இன்று அனுப்பி வைக்கப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: