You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னைக்கு அருகில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்: பாதுகாப்பு குறித்து எழுந்த கேள்விகள்
சென்னை நகருக்கு அருகில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருப்பதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்துவதாகக் கூறி 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை 2015ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது. ஆனால், அந்த தனியார் நிறுவனத்திடம் தகுந்த உரிமம் இல்லை என்றுகூறி இறக்குமதி செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டை சுங்கத் துறை பறிமுதல் செய்தது.
பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் தற்போது மணலியில் உள்ள சுங்கத் துறையின் வேதிப் பொருட்களுக்கான கிடங்கில் 35 கண்டெய்னர்களில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சுங்கத் துறைக்குச் சாதகமாகத் தீர்ப்பு வெளிவந்தது.
இதனால், பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டை ஏலம் விட முடிவுசெய்யப்பட்டது. அந்தப் பணிகள் துவங்காத நிலையில், தற்போதும் அம்மோனியம் நைட்ரேட் மணலியில் உள்ள சுங்கத் துறை கிடங்கில்தான் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று லெபனானில் உள்ள பெய்ரூட் துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
இந்தப் பின்னணியில் சென்னைக்கு அருகில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் குறித்து கவலைகள் எழுந்தன. இதையடுத்து இது தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ள சுங்கத் துறை அதிகாரிகள், அவை பாதுகாப்பான முறையிலேயே சேமித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த வேதிக் கிடங்கிற்கு அருகில் குடியிருப்புப் பகுதிகள் ஏதும் இல்லையென்றும் தெரிவித்தனர்.
அவை ஏலம் விடப்படாமல் சேமித்துவைக்கப்பட்டிருப்பது ஏன் எனக் கேட்டபோது, "2019 நவம்பரில்தான் இது தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏல நடைமுறைகளை துவங்கும் காலத்தில் கொரோனா காரணமாக, ஊரடங்கு விதிக்கப்பட்டதால் அந்தப் பணிகள் முடங்கியதாகவும் விரைவில் அவற்றை மின்னணு ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், அம்மோனியம் நைட்ரேட் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் கிடங்கை சுங்கத் துறை அதிகாரிகளும் தீயணைப்புத் துறை அதிகாரிகளும் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
பிற செய்திகள்:
- அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை : “அனைத்தும் ராமருக்கு உரியது, ராமர் அனைவருக்கும் உரியவர்”
- ராமர் கோயில் விழா: ஸ்பெயினில் இந்தியர்கள் கொண்டாடினார்கள் என்பது உண்மையா?
- நேரு முதல் நரேந்திர மோதி வரை: மதச்சார்பின்மை முதல் பிரதமர்களின் மத ஊர்வலங்கள் வரை
- பா.ஜ.க தலைவரை சந்தித்த திமுக எம்எல்ஏ கு.க. செல்வத்தின் பதவிகள் பறிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: