You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அயோத்தி ராமர் கோயில் விழா: ஸ்பெயினில் இந்தியர்கள் கொண்டாடினார்கள் என்பது உண்மையா?
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோதி.
கடந்த ஆண்டு இது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியதையடுத்து, ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழா இன்று நடைபெற்றது.
அடிக்கல் நாட்டு விழாவில் மோதி உரையை படிக்க: அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: நரேந்திர மோதியின் முழுமையான உரை
1992ஆம் ஆண்டு இந்துக் கும்பலால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்பதே உச்சநீதிமன்ற தீர்ப்பு. அந்தக் கலவரத்தில் சுமார் 2,000 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் தற்போது சமூக ஊடகங்களில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா குறித்தும், கோயில் வடிவமைப்பிற்கான திட்டங்கள் குறித்தும் பல்வேறு தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. அதில் அதிகம் பகிரப்பட்ட சிலவற்றை தற்போது பார்க்கலாம்.
இது புதிய கோயில் அமைப்பு கிடையாது
ராமர் கோயிலின் அமைப்பு தொடர்பான புகைப்படங்கள் இந்த வாரம் அரசாங்கத்தால் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே, ராமர் கோயிலின் வடிவமைப்பு என வேறு சில புகைப்படங்கள் இணையதளங்களில் பரவத் தொடங்கின.
2014ஆம் ஆண்டு சமண கோயில் கட்டுவதற்காக உருவாக்கப்பட்ட திட்ட வடிவமைப்புதான் அவை.
இந்த புகைப்படத்தைப் பதிவிட்டு, "இதுதான் ஸ்ரீராமர் கோயிலின் வடிவமைப்பு. இதுதான் எங்கள் ராமர் பிறந்த இடம். இந்தியா புதிய திசையை நோக்கி நகர்கிறது. உடனே கோயிலை கட்டுங்கள்" என பலரும் எழுதியிருக்கிறார்கள்.
எனினும், அந்த புகைப்படத்தை ஆராய்ந்து பார்த்ததில், அது மகாராஷ்டிராவில் உள்ள ஒரு நிறுவனம் வெளியிட்ட கட்டட வடிவமைப்பாகும்.
இது ராமர் கோயில் திறப்பு விழா இல்லை
பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட ஹால் ஒன்றில் மெழுகுவர்த்திகள் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் காணொளி ஒன்று வைரலாக பரவி வருகிறது.
அது ராமர் கோயில் திறப்பதற்கான ஏற்பாடுகள் என்று கூறப்பட்டு வருகிறது.
ஆனால் இதனை ஆராய்ந்ததில் இந்த காணொளிக்கும் ராமர் கோயில் அல்லது அதன் திறப்பு விழாவிற்கும் எந்த தொடர்புமில்லை என்று தெரியவந்துள்ளது.
அந்தக் காணொளி தெலங்கானாவில் நடைபெற்ற ஒரு திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட காணொளி. அதில் வரும் கடவுள் விஷ்ணு. ராமர் கிடையாது.
இவர்கள் அயோத்திக்கு தான் செல்கிறார்கள். ஆனால் இது கடந்த ஆண்டு
தலையில் செங்கற்களை சுமந்துகொண்டு காவி உடை அணிந்து மழையில் கால்நடையாக யாத்ரீகர்கள் அயோத்திக்கு நடந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.
ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்காக 1800 கிலோமீட்டர் தூரம் நடந்தே இவர்கள் அயோத்தி செல்வதாக கூறி இந்த காணொளி பகிரப்படுகிறது.
ட்விட்டரில் சுமார் ஒரு லட்சம் பேர் இந்த காணொளியை பார்த்துள்ளனர்.
இந்த யாத்திரிகர்கள் அயோத்திக்குதான் நடந்து செல்கிறார்கள். ஆனால் இது கடந்த ஆண்டு செப்டம்பரில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு காணொளி. இதில் நடந்து சென்ற ஒருவர்தான் இந்த காணொளியை பகிர்ந்துள்ளார்.
இந்த காணொளியில் இருக்கும் ஒரு நபர் கன்னட மொழி பேசுகிறார். கர்நாடகாவில் இருந்து ஒரு ஸ்ரீராம விழாவிற்காக கடந்தாண்டு இவர்கள் 1800 கிலோமீட்டர் நடந்து அயோத்திக்கு சென்றுள்ளனர்.
இவர்கள் சுமந்து செல்லும் செங்கற்களை புதிய ராமர் கோயில் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோதியிடம் அவர்கள் விடுத்திருந்தனர்.
ஸ்பெயினில் உள்ள இந்தியர்கள் புதிய ராமர் கோவில் கட்டுவதை கொண்டாடவில்லை
ஸ்பெயினில் உள்ள தெருவில் மக்கள் கூட்டம் வெள்ளை, ஆரஞ்சு மற்றும் பச்சை நிற உடைகள் அணிந்து மத்தளங்களை வாசித்துக்கொண்டு செல்லும் வீடியோ ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
ஸ்பெயினில் உள்ள இந்தியர்கள் புதிய ராமர் கோவில் கட்டுவதை கொண்டாடுகின்றனர் என்று அந்தக் காணொளியில் எழுதப்பட்டடிருக்கிறது.
இந்தக் காணொளியையும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
இதனை ஆராய்ந்ததில் இது 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இந்திய நடனக் குழு ஒன்று ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றிருந்த போது எடுக்கப்பட்ட காணொளி அது
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்