You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல்: சுகாதார கட்டுப்பாடுகளுடன் நடக்கிறது
இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்திற்காக 225 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களில் 20 அரசியல் கட்சிகள் மற்றும் 34 சுயாதீன குழுக்கள் இந்த முறை தேர்தலில் போட்டியிடுகின்றன.
இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலுக்காக 7,452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
2019ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம், ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
12 ஆயிரத்து 985 வாக்களிப்பு நிலையங்களில் இன்று மக்கள் வாக்களிக்கின்றனர்.
196 மக்கள் பிரதிநிதிகள் இந்த தேர்தலின் ஊடாக தெரிவு செய்யப்படவுள்ளதுடன், எஞ்சிய 29 வேட்பாளர்கள் தேசிய பட்டியலின் ஊடாக தெரிவாகவுள்ளனர்.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறுகின்றது.
அதிகபட்சமாக 17 லட்சத்து 85 ஆயிரத்து 964 பேர் வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்தில் உள்ளனர்.
மிகவும் குறைவான வாக்காளர்களைப் பெற்ற மாவட்டம் தமிழர் பகுதியிலேயே உள்ளது.
இதன்படி, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய வன்னி மாவட்டத்திலேயே குறைவான வாக்காளர்கள் உள்ளனர்.
வன்னி மாவட்டத்தில் 2 லட்சத்து 87 ஆயிரத்து 24 பேர் இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலுக்காக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெற்று வருவதாகவும் வாக்களிப்பு நிலையங்களுக்கு வெளியில் ஒரு சில வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் வன்முறைச் சம்பவம்
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பகுதியில் வாக்காளர் ஒருவர் மீது, வேட்பளர் ஒருவரின் ஆதரவாளர் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளானவர் தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாககுதலுக்குள்ளானவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரிடம் அக்கரைப்பற்று போலீஸார் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர்.
அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, கார் ஒன்றில் வந்த ஐவர் தன்னை கடுமையாகத் தாக்கி விட்டு சென்றதாக, பாதிக்கப்பட்டவர் பிபிசி தமிழிடம் கூறினார்.
தன்னைத் தாக்கியவர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் பயணித்த வாகனத்தின் இலக்கம் ஆகிய விவரங்களை போலீஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் கூறினார்.
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த கே.எல். நஜாத் என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
இவர் தொலக்காட்சிக் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா அச்சுறுத்தலும், நாடாளுமன்றத் தேர்தலும்
இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி நள்ளிரவு கலைத்திருந்தார்.
இதன்படி, ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் அன்றைய தினம் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டது.
எனினும், இலங்கையின் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்த பின்னணியில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி பிற்போடப்பட்டது.
இந்த நிலையில், இரண்டு முறை பிற்போடப்பட்ட தேர்தலை இன்றைய தினம் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்தது.
இதன்படி, இன்றைய தினம் முழுமையாக சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் தேர்தல் நடத்தப்படுகின்றன.
சுகாதார அமைச்சின் வழிக்காட்டலின் பிரகாரம் இந்த முறை தேர்தல் நடத்தப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
'வைரஸ் பரவுவதை தடுப்பதே தமது நோக்கம்'
இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்த பின்னணியில், முழுமையான சுகாதார ஏற்பாடுகளுக்கு மத்தியில் இந்த முறை தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலின் ஊடாக எந்த வகையிலும் கொரோனா தொற்று பரவுவதற்கான சாத்தியம் கிடையாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய தெரிவிக்கின்றார்.
கொரோனா தொற்று பரவாதிருப்பதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் சுகாதார ஒழுங்கு விதிகளை கடைப்பிடிப்பதற்காக சுமார் 8000திற்கும் அதிகமான சுகாதார அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.
இந்த தேர்தலின் ஊடாக கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதே தமது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்குள் வாக்களிப்பு இடம்பெறாது என கூறிய அவர், தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து வெளியேறி வீடுகளில் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்களுக்கு மாத்திரம் வாக்களிக்க இந்த முறை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வீடுகளில் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் பிற்பகல் 4 மணிக்கு பின்னர் தமது சொந்த போக்குவரத்து சேவையின் ஊடாக வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகைத் தந்து வாக்களித்ததன் பின்னர் அவ்வாறே வீடுகளுக்கு செல்லுமாறும் டாக்டர் அனில் ஜாசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
வாக்களிப்பு நடைபெறும் இடங்களுக்கு சுகாதார அதிகாரிகள் அடிக்கடி விஜயம் செய்து, கண்காணித்து வருகின்றனர்.
இதேவேளை, வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அனைத்திலும் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வாக்கு எண்ணிக்கை
இலங்கையில் இதற்கு முன்னர் தேர்தல் நடைபெறும் அன்றைய தினம் இரவே வாக்கெண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
எனினும், கொரோனா உள்ளிட்ட சில காரணங்களினால் வாக்கெண்ணும் நடவடிக்கைகளை நாளைய தினம் (06) காலை 7 மணி முதல் நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, நாளைய தினம் நள்ளிரவிற்கு முன்னர் முழுமையான தேர்தலை முடிவுகளை அறிவிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :