You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2020:“பெரியளவில் வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை” - இதுதான் கள நிலவரம்
இலங்கை வரலாற்றில் பெரியளவில் வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகாத தேர்தலாக இந்த தேர்தல் பதிவாகியுள்ளதாக இலங்கை போலீஸார் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் விடயங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நாளை (ஆகஸ்ட் 5) நடைபெற உள்ளது.
வன்முறை சம்பவங்கள் பதிவாகவில்லை
மனித படுகொலைகள், தீவைப்பு சம்பவங்கள், பாரதூரமான தாக்குதல்கள் உள்ளிட்ட எந்தவித பாரதூரமான வன்முறை சம்பவங்களும் இதுவரை பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் கடந்த 2ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பிரசாரங்கள் அற்ற அமைதி காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைதி காலத்திலும் பாரதூரமான வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள இந்த தருணத்தில் கூட சுமார் 69,000திற்கும் அதிகமான போலீஸார் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன், தேர்தல் நடைபெறும் நாளான நாளைய தினம் காவல்துறைக்கு மேலதிகமாக விசேட அதிரடி படையினரும் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தேர்தல் கடமைகளுக்கு இராணுவம் அழைக்கப்படவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.
தேர்தல் வன்முறைகள்
கிழக்கு மாகாணத்திலேயே இந்த முறை அதிகளவிலான தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவிக்கின்றார்.
அக்கரைப்பற்று, சாய்ந்தமருது, ஓட்டமாவடி, ஏறாவூர் ஆகிய பகுதிகளுக்கு போலீஸாருக்கு மேலதிகமாக விசேட அதிரடிபடையினரை கடமைகளுக்காக ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வன்முறை சம்பவங்கள் அதிகளவில் பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற சில பகுதிகளுக்கு கலகத் தடுப்பு போலீஸாரை ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஏதேனும், தேர்தல் வாக்களிப்பு நிலையமொன்றில் வன்முறை சம்பவம் பதிவாகும் என்றால், அந்த வாக்களிப்பு நிலையத்திற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு நிறுத்தப்படும் வாக்களிப்பு நிலையத்தின் வாக்களிப்பை மற்றுமொரு தினத்தில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
தேர்தல் கண்காணிப்பாளர்களின் கருத்து
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலம் முதல் இதுவரை வன்முறைகள் குறைவான அமைதியான சூழல் நிலவி வருவதாகத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள இந்த தருணத்தில், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தேர்தல் சட்ட விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
கிரிவுல்ல, திக்வெல்ல, மாத்தறை, கேகாலை ஆகிய பகுதிகளில் சட்டவிரோத பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பு தெரிவிக்கின்றது.
கேகாலை மாவட்டத்தின் பல பகுதிகளில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள இந்த தருணத்தில், வாகன பேரணிகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த அமைப்பு கூறுகின்றது.
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள தருணத்தில், சட்டவிரோத தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட வேண்டாம் என அந்த அமைப்பு கோரிக்கை விடுக்கின்றது.
கெபே அமைப்பு
2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் சட்டங்களை சரியான முறையில் பின்பற்றுமாறு தேர்தல் கண்காணிப்பு நிலையமான கெபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அனைத்து அரசியல் மற்றும் சுயாதீன குழுக்களிடம் இந்த கோரிக்கையை விடுப்பதாக அந்த அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவங்ச தெரிவிக்கின்றார்.
சில அரச ஊடகங்கள் சட்டவிரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊடகங்களைப் பயன்படுத்தித் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கும் நடவடிக்கையானது, அரச சொத்துக்களை நேரடியாகவே முறையற்ற விதத்தில் பயன்படுத்தும் நடவடிக்கை என அவர் கூறுகின்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: