வருமானவரி கணக்கை பிழையின்றி எளிதாக செலுத்த புதிய திட்டம்

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

இந்து தமிழ் திசை - வருமானவரி செலுத்த புதிய திட்டம்

வருமானவரி செலுத்துவோர் பிழையின்றியும், எளிதாகவும் வருமானவரி கணக்குத் தாக்கல் செய்வதற்காக புதிய முன்னோடி திட்டத்தை சோதனை அடிப்படையில் வருமானவரித் துறை அறிமுகப்படுத்தி உள்ளது என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.

இதுகுறித்து, தமிழகம், புதுச்சேரிக்கான முதன்மை தலைமை வருமானவரித் துறை ஆணையர் எம்.எல்.கார்மாகர், வருமானவரி முதன்மை ஆணையர் ஜஹான் ஷேப் அக்தர் ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வருமான வரி செலுத்துவோர் பிழையின்றியும், எளிதாகவும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்காக புது முன்னோடி திட்டம் ஒன்று சோதனை முறையில் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா மண்டலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வரு மானவரித் தாக்கல் செய்யும்போது தேவைப்படும் அனைத்து தகவல்களும், அதை தாக்கல் செய்பவர்களுக்கு வழங்கப்பட்டு அவ்வப்போது பிழைகள் சரி செய்யப்படும்.

நாடு முழுவதும் வாரம்தோறும் 5 ஆயிரம் வருமானவரி கணக்குகளை இந்த நடைமுறை மூலம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8,569 வருமானவரி கணக்குகளில் இதுவரை 1,900 கணக்குகள் இப் புதிய நடைமுறை மூலம் பரிசீலிக்கப்பட்டுள்ளன. நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் உள்ள வருமானவரி செலுத்துபவரின் கணக்கை, பிற எந்த பகுதியிலும் உள்ள அலுவலகமும் பரிசீலிக்க இயலும். இதன்மூலம், யாருடைய கணக்கு யாரால் எங்கு பரிசீலிக்கப்படுகிறது என்ற விவரம் தொடர்புடைய வருக்கு தெரியாமல் இருக்கும்.

இதன் காரணமாக, வருமானவரி கணக்குகள் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் பரிசீலிக்கப்படும். மேலும், ஒருவருடைய வருமானவரி கணக்கை ஒரே நபர் பரிசீலனை செய்யாமல் 4 பேர் கொண்ட குழு பரிசீலித்து மறுமதிப்பீடு செய்து இறுதி செய்யப்படும் என அவர்கள் கூறியதாகத் தெரிவிக்கிறது இந்த செய்தி.

தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா முக்கிய பங்கு - தினத்தந்தி

கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது என தெரிவிக்கிறது தினத்தந்தியின் செய்தி.

உலக சுகாதார அமைப்பின் அவசரகால சுகாதார திட்ட செயல் இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரயான் நேற்று ஜெனீவாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, இந்தியாவுக்கு புகழாரம் சூட்டினார்.

அவர் கூறியதாவது:-

கொரோனாவுக்கு சக்திவாய்ந்த தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முன்னணி இடம் வகிக்கிறது. அதுபோல், சக்திவாய்ந்த கொரோனா தடுப்பு மருந்துகளையும் தயாரித்து வருகிறது. எனவே, மொத்தத்தில் சர்வதேச அளவில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது உண்மைதான். ஆனால், இந்தியா பெரிய நாடு, அங்கு 130 கோடி மக்கள் வசிக்கிறார்கள் என்ற கண்ணோட்டத்தில் அதை பார்க்க வேண்டும்.

அதுபோல், கொரோனா பரிசோதனைகளையும் இந்தியா நன்கு செய்துள்ளது. ஏற்கனவே 2 கோடி மாதிரிகளை பரிசோதித்துள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 லட்சம் மாதிரிகளை பரிசோதித்து வருகிறது.

கடந்த சில நாட்களாக பரிசோதனைகளை அதிகரித்து வருகிறது. கொரோனாபரிசோதனை மையங்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், இந்தியாவில் கிராமப்புறங்களிலும் கொரோனா பரவி வருவது கவலை அளிக்கிறது. இளைஞர்களையும் தாக்கி வருகிறது. எனவே, நோய் பரவலை தடுப்பதுடன், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கிறது அச்செய்தி.

தினமணி - ஆன்லைன் வகுப்புகள் குறித்து புதிய உத்தரவு

ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களின் நலன் சம்பந்தப்பட்டது என்பதால், இந்த வகுப்பு குறித்து பள்ளி நிர்வாகங்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் வருகிற 19-ந்தேதி கருத்து தெரிவிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்கிறது தினமணியின் செய்தி.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சரண்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்க தடை விதிக்கப்பட்டது இதனால் நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன.

ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும்போது ஆபாச இணைய தளங்களால் அவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்படுகிறது. எனவே மாணவ மாணவியர் ஆபாச இணைய தளங்களை பார்ப்பதை தடுக்கும் வகையில் சட்டவிதிகளின்படி முறையான விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இதே போல ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால் 1-5 வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும், 6-12 வகுப்புகள் வரை இரண்டு மணி நேரம் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட வேண்டும் எனவும் விமல் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆன்லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குப்படுத்த விதிமுறைகளை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, இந்த வழக்குகளில் தங்களையும் இணைக்க கோரி தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். மேலும் இந்த வழக்கு மாணவர்களின் நலன் சம்பந்தப்பட்டது. ஆன்லைன் வகுப்புகள் அனைத்து தரப்பு மாணவர்களும் பயன்பெறும் வகையில் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்ற வேண்டும். எனவே, பெற்றோர்- ஆசிரியர் சங்கங்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :