You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: கொரோனாவுடன் நடக்கும் அரசியல் போர்
- எழுதியவர், மானிடரிங் பிரிவு
- பதவி, பிபிசி
இலங்கை பிற தெற்கு ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது குறைவான எண்ணிக்கையிலேயே கொரோனா வைரஸ் மரணங்களை சந்தித்துள்ளது.
ஜூலை 29ம் தேதி நிலவரப்படி இலங்கை முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 3 ஆயிரத்தை விடவும் குறைவு.
அவர்களில் 11 பேர் மட்டுமே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான ஊரடங்கு அமலாக்கம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளைத் தடமறிதல் ஆகியவற்றின் மூலம் இந்த வெற்றியை இலங்கை அடைந்துள்ளதாக கருதப்படுகிறது.
இந்த நடவடிக்கைகளில் பெரும்பாலும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.
மார்ச் மாதம் இலங்கையின் 8வது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழலுக்கு மத்தியில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேசிய அளவில் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நடத்த இலங்கை தயாராகி வருகிறது.
இலங்கையின் மொத்தமுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 196 பேர் சுமார் 1.6 கோடி மக்கள் மூலம் இந்தத் தேர்தலில் தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 29 பேர் கட்சிகளின் வாக்கு விகிதத்துக்கு ஏற்ப நியமனம் செய்யப்படுவார்கள்.
இலங்கை நாடளுமன்றம் கலைப்பு
தற்போது இலங்கை ஜனாதிபதியாக இருக்கும் கோட்டபாய ராஜபக்ஷ 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
அவர் தேர்வான மூன்று மாத காலத்துக்கு பிறகு, மார்ச் 2-ஆம் தேதி இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோது அதன் பதவி காலத்தில் ஆறு மாதங்கள் எஞ்சியிருந்தன.
ஏப்ரல் 25ஆம் தேதி நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று முதலில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் இதனை நடத்துவதை விட இலங்கை அரசுக்கு வேறு ஒரு முக்கியமான பணி இருந்தது.
கோவிட்-19 தொற்று பரவாமல் இருப்பதைத் தடுப்பதுதான் அது.
தேர்தலைத் தள்ளி வைத்து விட்டு நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டுமென்றும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் மார்ச் 16ஆம் தேதி தொடங்கி எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.
ஆனால் ஏப்ரல் 25ஆம் தேதி தேர்தலை நடத்துவது என்பதில் கோட்டாபய உறுதியாக இருந்தார்.
கொரோனா வைரஸ் ஊரடங்கு
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் மனுவைப் பெற ஆரம்பித்தது.
வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக மார்ச் 19ம் தேதி இருந்தது.
ஆனால் மார்ச் 20ஆம் தேதி முதலே நாடு முழுவதும் மூன்று மாத கால ஊரடங்கு அமலாகிறது என்று அரசு அறிவித்தது.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டது.
முதலில் ஜூன் 20ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அதுவும் தள்ளிவைக்கப்பட்டு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
ஒவ்வொரு முறையும் தேர்தல் தேதி அறிவிக்கும்போது கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்பதே இலங்கை எதிர்க்கட்சிகளின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.
இது மட்டுமல்லாமல் தேர்தல்களை தள்ளி வைப்பதன் காரணமாக இலங்கையில் அரசமைப்பு நெருக்கடி ஒன்றும் உருவானது.
இலங்கை அரசமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அடுத்த மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஆனால் இந்த தேர்தல் மூன்று மாதங்கள் கழித்தே நடக்கிறது. ஜூன் மாதத்தில் ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கத் தொடங்கிய இலங்கை அரசு ஜூன் 28-ஆம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வந்தது.
சமூகப் பரவல் - தேர்தல் விதிமுறைகள்
அப்போது கோவிட்-19 தொற்றுப் பரவ கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த இரண்டு மாத காலமாக சமூக பரவல் மூலம் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் யாரும் இலங்கையில் இல்லை.
இந்த காலகட்டத்தில் புதிதாக தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டு அவர்கள் அனைவரும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் அல்லது வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள்.
இத்தகைய சூழலில் கடுமையான சுகாதார விதிமுறைகளை அமல்படுத்தியது தேர்தலுக்கான வாக்குப்பதிவை சாத்தியமாக்கியதாக தோன்றுகிறது.
வாக்குப்பதிவின் போது எத்தகைய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று ஜூன் மாத தொடக்கத்தில் இலங்கை சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல்களை வெளியிட்டது.
தேர்தலுக்கான பிரசார பொதுக்கூட்டங்களில் 100 பேருக்கு மேல் கூடக் கூடாது, அனைவரும் முகக் கவசம் அணிந்து இருப்பது அவசியம், சமூக இடைவெளியை கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.
மாதிரி வாக்குப்பதிவு
இந்த விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படுகின்றனவா என்பதை அறிவதற்காக பல மாதிரி வாக்குப் பதிவுகளும் நடத்தப்பட்டன.
முதல் மாதிரி வாக்குப்பதிவு ஜூன் 7ம் தேதி நடந்தது.
வாக்களிப்பு மையங்களில் சுகாதாரத்தைப் பேணுவதற்கு மேலும் 15 ஆயிரம் அலுவலர்கள் தேவை என்பதை இந்த ஜூன் 7ஆம் தேதி வாக்குப்பதிவு மூலம் இலங்கை அரசு அறிந்தது.
வெற்றிகரமாக தேர்தல் நடத்துவதில் இருந்து தேர்தல்கள் ஆணைக்குழு பின்வாங்குவதாக இல்லை.
"கோவிட்-19 இன்னும் முழுமையாக தோற்கடிக்கப் பட வில்லை. ஆனால் தற்போது போதிய அளவு இயல்பு நிலை திரும்பியுள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போதோ, வாக்களிப்பு நாளன்றோ, தேர்தல் முடிவடைந்த பின்னரோ வைரஸ் தொற்று மீண்டும் பரவ தொடங்குவதற்கான வாய்ப்பு இல்லை," என்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்ததாக தி டெய்லி எனும் ஆங்கில ஊடகம் ஜூலை ஒன்றாம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தல் சமயத்தில் சானிடைசர்கள் மற்றும் முகக்கவசங்களை விநியோகம் செய்வதற்கு கூடுதல் மனிதவளம் தேவைப்பட்டது. இவை அனைத்தும் தேர்தல் நடத்துவதற்கான செலவை அதிகரித்தன.
இந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு சுமார் ஆயிரம் கோடி இலங்கை ரூபாய் செலவாகும் என்று ஜூன் 30-ஆம் தேதி தேசப்பிரிய தெரிவித்தார்.
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதிய சவால்
இந்த தேர்தலில் இருக்கும் இன்னொரு சவால் கொரோனா வைரஸ் தடுப்பு மையங்கள் அல்லது தங்களது வீடுகளில் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்பதுதான்.
அவர்களை வாக்களிப்பதற்காக ஆரம்பத்தில் நடமாடும் வாக்குச்சாவடிகளைப் பயன்படுத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.
அதன் பின்பு அவர்களுக்கு மட்டும் முன்கூட்டியே தேர்தல் நடத்தலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பிட்ட ஒரு சாராருக்கு மட்டும் முன்கூட்டியே வாக்களிப்பதற்கான நிலைமை இதற்கு முன்பு இலங்கையில் இருந்ததில்லை.
தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு மட்டும் ஜூலை 31 ஆம் தேதி தேர்தல் நடத்தலாம் என்று அப்போது ஆலோசிக்கப்பட்டது.
எனினும் அவ்வாறு தேர்தல் நடத்துவதற்கு சட்டத்தில் இடமில்லை என்பதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது என்று ஜூலை 28ஆம் தேதி இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
அவர்களுக்கு முன்கூட்டியே வாக்களிக்க வாய்ப்பு அளிப்பதை எதிர்த்து இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எண்ணற்ற கடிதங்கள் வந்ததாக திவைனா எனும் சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டது.
"இப்பொழுது எங்களுக்கு ஒரு பிரச்சனை வந்துள்ளது நாங்கள் இது குறித்து சட்ட வல்லுனர்களுடன் உடனடியாக ஆலோசிப்போம்," என்று தேசப்பிரிய தெரிவித்ததாக இலங்கை அரசு ஊடகம் தெரிவித்தது.
தேர்தல் விதிமீறல் புகார்கள்
இதுமட்டுமல்லாமல் தேர்தலில் போட்டியிடுபவர்கள் சுகாதார விதிமுறைகளை மீறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இலங்கையிலுள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பீப்பிள்ஸ் ஆக்சன் ஃபார் ஃபிரீ அண்ட் ஃபேர் எலக்சன்ஸ் இத்தகைய விதிமீறல்கள் குறித்து 207 வேட்பாளர்களுக்கு எதிராக தங்களிடம் புகார் வந்துள்ளது என்று தெரிவித்தது.
சுகாதார அமைச்சகத்தின் விதிமுறைகளை உடனடியாக அமல் படுத்தாமல் ஜூன் 17ஆம் தேதி வரை காத்து இருந்ததாக இலங்கை அரசும் விமர்சனத்துக்கு உள்ளானது.
அந்த விதிமுறைகள் அமலுக்கு வந்தால்தான் விதி மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இருக்கும்.
இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதை தடைபடக் கூடாது என்பதற்காகவே இந்த விதிமுறைகள் அமல் ஆக்கப்படுவது வேண்டுமென்றே தாமதப்படுகின்றது என்று ஜூன் 13ஆம் தேதி தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் அனுரகுமார திசநாயக்க குற்றம்சாட்டினார்.
சுகாதார அமைச்சகம் தொடக்கத்தில் வெளியிட்ட விதிமுறைகளும் இலங்கை அரசு அமலாக்கிய விதிமுறைகளும் வெவ்வேறாக உள்ளன என்று சென்டர் ஃபார் மானிட்டரின் எலக்சன் வயலேஷன்ஸ் எனும் இலங்கையில் உள்ள அரசு சாரா அமைப்பு ஒன்றும் குற்றம் சாட்டியது.
சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள்
சர்வதேச பார்வையாளர்களை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அழைக்காது என்றும் ஏசியா நெட்வொர்க் ஃபார் எலக்சன்ஸ் போன்ற சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் அவர்கள் சொந்த முயற்சியின் அடிப்படையில் தேர்தல்களைப் பார்வையிட வரலாம் என்றும் தி மார்னிங் எனும் இலங்கை ஊடகம் வெளியிட்ட செய்தி தெரிவித்தது.
எனினும் வெளிநாட்டு பார்வையாளர்கள் யாருமே எந்த வகையிலும் இலங்கை தேர்தலை கண்காணிக்க வரமாட்டார்கள் என்று தேர்தல் ஆணையாளர்களில் ஒருவரான ரட்னஜீவன் ஹூல் தெரிவித்ததாக இலங்கையில் உள்ள தமிழ் செய்தித்தாளான வீரகேசரி ஜூலை 26ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தல்களைப் பார்வையிட தங்களுக்கு அனுமதி வேண்டும் என்று ஐரோப்பாவை சேர்ந்த தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஒன்று இலங்கை வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதற்கு இன்னும் வழங்கப்படவில்லை என்றும் ரட்னஜீவன் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- தாய்மொழிக் கல்வியை உண்மையாகவே ஊக்குவிக்கிறதா புதிய கல்விக் கொள்கை?
- கிரண்பேடி vs நாராயணசாமி மோதல்: இடையில் சிக்கித் தவிக்கும் புதுவை அதிகாரிகள்
- கர்நாடக பள்ளிப் பாடங்களில் இருந்து திப்பு சுல்தான், மராத்தியர்கள் குறித்த வரலாறு நீக்கப்பட்டுவிட்டதா?
- ஆன் - லைன் வகுப்புகளுக்கு தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: