You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 70 பேர் பலி; 4000 பேர் காயம்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 70 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெய்ரூட்டில் துறைமுக பகுதியில் நடந்த வெடிப்பு சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஒரு கிடங்கில் 6 வருடங்களாக வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் இந்த வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அந்நாட்டு அதிபர் மைக்கேல் ஆன், 2750 டன் அமோனியம் நைட்ரேட்டை பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்தது "ஏற்கத்தக்கதல்ல" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெடிப்பு சம்பவத்தால் பல்வேறு கட்டடங்கள் சேதம் ஆகியுள்ள நிலையில் காயமடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து மூன்று நாட்கள் துக்கம் அனுசரித்துள்ள அந்நாட்டு அதிபர் மைக்கேல் அவசரகால நிதியிலிருந்து 100 பில்லியன் லிரா உடனடியாக விடுவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் உயிரிழந்தோரின் சடலங்கள் கிடப்பதாகவும் அப்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் சம்பவ இடத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
இந்த சம்பவத்தை பேரழிவு என்று குறிப்பிட்டுள்ள அந்நாட்டு அதிபர், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வெடிப்பால் இடிந்து விழுந்த கட்டடங்களுக்கு அடியில் பலர் சிக்கியிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிழக்கு மத்திய தரைக்கடலில் இருக்கும் சைப்ரஸ் தீவில் வெடிப்பு சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.
2005ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்புகள் வர இருக்கும் நிலையில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
கொலை வழக்கு
2005ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி கார் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட வழக்கை ஐ.நா தீர்ப்பாயம் விசாரித்தது.
இதன் தீர்ப்பு வர இருக்கும் சூழலில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த வழக்கில் இரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகின்றனர்.
அமோனியம் நைட்ரேட் என்றால் என்ன?
அமோனியம் நைட்ரேட்டுக்கு பல்வேறு பயன்பாடுகள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் இது இரண்டு விஷயங்களுக்கு பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. ஒன்று விவசாய உரம், மற்றொன்று வெடிபொருள்.
நெருப்புடன் தொடர்பு கொள்ளும்போது அமோனியம் நைட்ரேட் வெடிபொருளாக மாறுகிறது. அப்படி வெடிக்கும் போது நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் அமோனியா வாயு உள்ளிட்ட நச்சு வாயுக்களை இது வெளியிடும்.
எரிபொருளாக மாறும் தன்மை கொண்டதால் அமோனியம் நைட்ரேட்டை எவ்வாறு வைக்க வேண்டும் அல்லது சேமிக்க வேண்டும் என்பது குறித்து கடுமையான விதிகள் உள்ளன. அதில் முக்கியமானது அதனை சேமித்து வைக்கும் கிடங்கு தீப்பற்றிக் கொள்ளாத வகையில் இருக்க வேண்டும்.
மற்ற நாடுகளின் உதவியை நாடும் லெபனான்
வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் உதவியை லெபனான் நாடியுள்ளது.ங
லெபனான் மக்களுடன் துணைநின்று அவர்கள் காயங்களை ஆற்றுமாறு நட்பு நாடுகளை கேட்டுக்கொள்கிறேன் என அந்நாட்டு பிரதமர் ஹசன் டியப் கோரிக்கை விடுத்துள்ளார்.
"பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தின் புகைப்படங்களும் காணொளிகளும் அதிர்ச்சியை அளிக்கின்றன. இந்த சம்பவத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்காக பிரார்த்திக்கிறேன்" என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ட்வீட் செய்துள்ளார்.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் மக்கள் உட்பட அனைவருக்கும் உதவ தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெடிப்பு சம்பவத்தை "மோசமான தாக்குதல்" என்று விவரித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவருடைய அனுதாபங்களை வெளியிட்டுள்ளார்.
அங்கு நடக்கும் நிலைமையை கண்காணித்து வருவதாகவும் லெபனான் மக்களுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பையோ தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
தேவையான உதவி மற்றும் பொருட்களை லெபனானுக்கு அனுப்புவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
இரான், செளதி அரேபியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் லெபனானுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளன.
லெபனானின் நிலை என்ன?
1975-1990ல் நடந்த உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டதில் இருந்து ஏற்பட்ட, மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அந்நாட்டு அரசு தவறிவிட்டதாக போராட்டங்கள் நடக்கும் நிலையில், மோசமான அரசியல் சூழலை தறபோது அந்நாடு சந்தித்து வருகிறது.
சீர்திருத்தங்கள் கொண்டு வந்து நாட்டின் பிரச்சனையை சரிசெய்ய அரசு தவறிவிட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
தினமும் ஏற்படும் மின்தடை, சுத்தமான குடிநீர் கிடைக்காதது மற்றும் குறைந்த பொதுசுகாதாரம் உள்ளிட்ட சிக்கல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
- காஷ்மீரில் தலைவர்களின் செயல்பாடே இல்லாமல் ஜனநாயகம் எப்படி இருக்கிறது?
- புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய வல்லுனர் குழு: கே.ஏ. செங்கோட்டையன்
- “இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக பெரியளவில் வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை”
- “டிக் டாக் செயலியை வாங்குகிறீர்களா?” - மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் பணம் செலுத்த சொன்ன டிரம்ப்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: