You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எச்.ராஜா கேள்வி: "மதுக்கடைக்கு அனுமதி வழங்கிய அரசு, சதுர்த்தி விழாவுக்கு தடைவிதிப்பது ஏன்?"
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
"மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கும்போது, விநாயகர் சிலை வைத்து வழிபட தடை விதிப்பது ஏன்?" - இந்து தமிழ் திசை
மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கும் அரசு விநாயகர் சிலை வைத்து வழிபட தடை விதிப்பது ஏன்? என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா வினவியுள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சிவகங்கையில் பேசிய அவர், தமிழகத்தில் மதுக்கடைகளில் சமூக இடைவெளியின்றி ஆயிரக்கணக்கானோர் குவிகின்றனர் என்று கூறினார்.
"மதுக்கடைகளுக்கு வாரத்தில் 6 நாட்கள் அனுமதி அளித்துள்ள அரசு, ஆண்டிற்கு 6 நாட்கள் மட்டுமே இந்துக்களால் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்துள்ளது.
சமூக இடைவெளியுடன் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்த முடிவை உடனடியாக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும். அரசின் உத்தரவு மத சுதந்திரத்தில் தலையிடுகிற செயலாக உள்ளது. இது இந்துக்களை நசுக்கின்ற செயலாக நான் கருதுகிறேன்.
மதச்சடங்குகளில் தலையிடுவதற்கு, அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. போகப்போக அறநிலையத்துறை அதிகாரிகளின் போக்கு அராஜகப் போக்காக மாறி வருகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அதிகாரி ஆடித் திருவிழாவிற்கு அனுமதி மறுத்துள்ளார். அவரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்," என்று அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"ராஜஸ்தானில் பாஜகவின் சதித்திட்டம் தோல்வி: அசோக் கெலாட்" - தினமணி
சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் கிடைத்த வெற்றி ராஜஸ்தான் மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
"ராஜஸ்தான் மாநிலத்தில் அதிருப்தியில் இருந்த முன்னாள் துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருந்ததால் ராஜாஸ்தான் அரசியலில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குழப்பம் நீடித்து வந்தது. இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் அவரது ஆதரவாளர்களுடன் கலந்துகொண்டதால் சமரசம் ஏற்பட்டது.
இதனை அடுத்து நேற்று (வெள்ளிக் கிழமை) காலை ராஜஸ்தான் சட்டப்பேரவை கூடியபோது, அசோக் கெலாட் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் முதல்வர் அசோக் கெலாட் வெற்றி பெற்றார்.
இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றியால் மாநிலம் முழுவதும் மகிழ்ச்சி அலை பரவியுள்ளது. மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம், அருணாச்சலப் பிரதேசம், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக செய்த சதித்திட்டத்தை ராஜஸ்தானிலும் செயல்படுத்த முயன்றது. ஆனால், ராஜஸ்தானில் பாஜகவின் சதித்திட்டம் தோல்வியை தழுவியுள்ளது" என்று அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா" - தினத்தந்தி
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டேன் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டரில் தெரிவித்து உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"கடந்த 2ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு (வயது 55) கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
மத்திய அமைச்சரவையில் கொரோனா பாதிப்புக்கு ஆளான முதல் உறுப்பினர் இவர் ஆவார். அதன்பின் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனை தொடர்ந்து அமித் ஷா தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.
இந்த நிலையில், ஹரியாணாவின் குருகிராம் நகரில் உள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் அமித் ஷா, தனது ட்விட்டரில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டதாக நேற்று மாலை பதிவிட்டுள்ளார்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
- 74-ஆவது இந்திய சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோதி
- புகைப்பிடிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறதா? - எச்சரிக்கும் ஆய்வு முடிவு
- கோழிக்கோடு விமான விபத்து: கேரளாவில் நாளை சுதந்திர தின நிகழ்ச்சி நடக்குமா?
- இலங்கை நாடாளுமன்றம்: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய உத்தரவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :