முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: இலங்கை உள்நாட்டுப் போரின் 11ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, இலங்கையிலிருந்து பிபிசி தமிழுக்காக
இலங்கையில் மூன்று தசாப்தங்கள் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 11 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி, இன்று போன்றதொரு நாளிலேயே இலங்கையின் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்தது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சுதந்திரத்தின் பின்னர் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களே உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாக காரணமாக அமைந்திருந்தது.
இலங்கையில் சுமார் 1970ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே யுத்தம் ஆரம்பமாவதற்கான அடித்தளமாக அமைந்திருந்தது.
யாழ்ப்பாணம் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா 1975ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் வைத்து துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டார்.
இதுவே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் அரசியல்வாதி ஒருவர் கொல்லப்பட்ட முதலாவது சம்பவமாக வரலாற்றில் பதிவானது.

பட மூலாதாரம், Getty Images
அதன்பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழீழ தாயகம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் 1976ஆம் ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பின் தலைவராக வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமைத்துவம் ஏற்றதுடன், விடுதலைப் புலிகள் அமைப்புடன் பல இயக்கங்களும் கைக்கோர்த்திருந்தன.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

சாதாரண அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, 1987ஆம் ஆண்டுகளில் கரும்புலிகள் அணியை ஸ்தாபித்து தற்கொலை தாக்குதல்களை நடத்தும் அளவிற்கு வலுப் பெற்றது.
இந்த போராட்டத்தின் இடைநடுவில், அதாவது 1987ஆம் ஆண்டு, இந்திய அமைதிப்படை இலங்கைக்குள் வரவழைக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
அதனைத் தொடர்ந்து, 1987ஆம் ஆண்டு இந்திய - இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
இந்திய - இலங்கை உடன்படிக்கையை பல போராட்ட இயக்கங்கள் ஏற்றுக் கொண்டாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர்.
இதையடுத்து, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இந்திய அமைதிப்படைக்கும் 1987ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மோதல் ஆரம்பமானது.
சுமார் இரண்டு வருடங்கள் இந்திய அமைதிகாக்கும் படைக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல் வெடித்திருந்த நிலையில், 1989ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுக்கோளுக்கு அமைய இந்திய அமைதிகாக்கும் படை நாட்டை விட்டு வெளியேறியது.
இதையடுத்து. 1991ஆம் ஆண்டு தமிழகத்தின் ஸ்ரீபெரும்புத்தூரில் நடைபெற்ற பிரசார கூட்டமொன்றில் வைத்து முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
இந்த கொலையை தமிழீழ விடுதலைப் புலிகள் செய்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
அதன்பின்னர், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ, விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 1993ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
1994ஆம் ஆண்டு இலங்கையின் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பதவியேற்றதன் பின்னர், விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
அந்த பேச்சுவார்த்தைகளும் வெற்றியளிக்காத பின்னணியில், யுத்தம் தொடர்ந்தும் நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் நகரையும், யாழ். குடா நாட்டையும் இலங்கை இராணுவம் கைப்பற்றிய நிலையில், விடுதலைப் புலிகள் சற்று பின்னடைவை சந்தித்தது.
அதன்பின்னர் வன்னி நிலப்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம் பொருந்தியவர்களாக காணப்பட்டனர்.
இவ்வாறான நிலையில், 2002ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டதன் பின்னணியில், நார்வேயின் தலைமையில் யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.
சுமார் 2 வருடங்கள் வரை தொடர்ந்த யுத்த நிறுத்த காலப் பகுதியில் வெளிநாடுகளில் 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருந்தன.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு நார்வேயே நடுநிலையில் செயற்பட்டிருந்தது.
இதையடுத்து, யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியளிக்காத நிலையில், மீண்டும் யுத்தம் ஆரம்பமானது.
இதையடுத்து நான்காம் ஈழப்போர் ஆரம்பமானது.

பட மூலாதாரம், Getty Images
2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றார்.
வடக்கு கிழக்கு தமிழர்களை வாக்களிக்க வேண்டாம் என விடுதலைப் புலிகள் அறிவித்திருந்த பின்னணியில், வடக்கு கிழக்கு தமிழர்கள் வாக்களிப்பதில் இருந்து பின்வாங்கினர்.
இதனால் இலங்கையின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவானார்.
அதனையடுத்து, நடத்தப்பட்ட யுத்தம் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இதேநாளில் 2009ஆம் ஆண்டு சுமார் 3 தசாப்தங்களுக்கும் அதிக காலம் தொடர்ந்த உள்நாட்டு யுத்தத்தின் இறுதி காலப் பகுதி முல்லைத்தீவு - முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது.
இறுதி காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரச படைகளுக்கும் இடையிலான யுத்தம் கடும் வலுவடைந்ததை அடுத்து, மக்கள் அனைவரும் முள்ளிவாய்க்கால் பகுதியில் தஞ்சமடைந்திருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழர்கள் மீது இலங்கை படையினர் கடும் தாக்குதல்களை நடத்தியதாக கூறப்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
யுத்தம் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ, இறுதிக் கட்ட யுத்தம் நிறைவடைந்த அன்று சீனாவிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
விமானத்திலிருந்து நாட்டை வந்தடைந்த மஹிந்த ராஜபக்ஷ, விமான நிலையத்தில் பூமியை முத்தமிட்டு வணங்கியமை, சிங்கள மக்கள் மத்தியில் அவருக்கான செல்வாக்கை மேலும் அதிகரிக்க செய்தது.

இந்த நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்டு, 2010ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சியை தன்வசப்படுத்தினார்.
யுத்தம் நிறைவு பெற்ற தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், யுத்த வெற்றி கொண்டாட்டம் என்ற பெயரில் இலங்கை அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் இராணுவ அணிவகுப்புக்களுடன் நிகழ்வுகளை நடத்தியிருந்தது.
இந்தநிலையில், கடந்த மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் யுத்த வெற்றி கொண்டாட்டங்கள், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை போன்று கொண்டாடாத பட்சத்திலும், சிறு நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தன.
எனினும், இலங்கை யுத்தம் நிறைவடைந்து 11 ஆண்டுகள் பூர்த்தியாகும் இன்றைய சூழ்நிலையில், கொரோனா சூழல் காரணமாக யாரும் எந்த நிகழ்வுகளையும் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனினும் பல்வேறு தடைகளை மீறியும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையலேயே இந்த முறை யுத்த வெற்றி கொண்டாட்ட நிகழ்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












