கொரோனா வைரஸ்: ’இந்தியாவில் 13.5 கோடி வேலையிழப்பு ஏற்படும்; வறுமை அதிகரிக்கும்’

ஏழை மக்கள்

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

`இந்தியாவில் 13.5 கோடி வேலையிழப்பு ஏற்படும்’ - தினமணி

கொரோனாவின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனையின் காரணமாக, இந்தியாவில் 13.5 கோடி பேர் வேலையிழப்பார்கள் என சர்வதேச மேலாண்மை ஆலோசனை நிறுவனமான ஆர்தர் டி லிட்டில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகத் தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் வேலையிழப்பும் வறுமையும் அதிகரிக்கும், மேலும் தனிநபர் சராசரி வருவாயும் குறையும். இது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவுக்கு வழிவகுக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும் 12 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும், 4 கோடி பேர் மோசமான வறுமை நிலைக்கு செல்லக்கூடும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

காணொளி மூலம் வழக்குகளை விசாரிக்கும் உச்சநீதிமன்றம் - ’டைம்ஸ் ஆஃப் இந்தியா

உச்சநீதி மன்றம்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் பொது முடக்கம் காரணமாக அவசர வழக்குகளை மட்டுமே விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் இன்று(மே 18) முதல் ஜூன் 19 வரை அனைத்து வழக்குகளையும் காணொளி மூலம் விசாரிக்க உள்ளது என ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

இணையவழி மனு தாக்கல் செய்ய 1881 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். காணொளி மூலம் நடத்தப்படும் விசாரணை பதிவு செய்யப்படவோ அல்லது ஒளிபரப்பு செய்யப்படவோ மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 31ம் தேதி வரை விமான போக்குவரத்து இல்லை - தினமலர்

விமானம்

பட மூலாதாரம், Getty Images

உள்நாட்டு விமான போக்குவரத்தை மே 31ம் தேதி வரை துவக்கப் போவதில்லை' என 'ஏர் இந்தியா' விமான நிறுவனம் அறிவித்துள்ளது என தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

மார்ச் மாதம் முதல் இந்தியாவில் பொது முடக்கம் உள்ள நிலையில், சமீபத்தில் டெல்லியிலிருந்து நாடு முழுவதும் 15 நகரங்களுக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்தநிலையில், விமான சேவையும் தொடங்கப்படுமா என கேள்விகள் எழுந்தது. பல்வேறு மாநிலங்களில் நான்காம் கட்டமாக இன்று முதல் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் 'மே 31ம் தேதி வரை உள்நாட்டு விமான போக்குவரத்தைத் துவக்கப் போவதில்லை' என 'ஏர் இந்தியா' நிர்வாகம் அறிவித்துள்ளது.

தனிமைப்படுத்துதலை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ரயிலில் பயணிக்க அனுமதி - இந்து தமிழ் திசை

சிறப்பு ரயிலில் பயணிக்கும் பயணிக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அவர்கள் தாங்கள் சென்று சேரும் இடத்தில் தனிமைப்படுத்தும் முகாமுக்குச் செல்ல ஒப்புக்கொண்டால் மட்டுமே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று ஐஆர்சிடிசி அதிரடியாக அறிவித்துள்ளது.

கடந்த வாரம் பெங்களூருவில், சிறப்பு ரயிலில் வந்த 50 பேரைத் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தும்போது அவர்கள் மறுத்துவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தைக் கருத்தில்கொண்டு ஐஆர்சிடிசி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: