கொரோனா வைரஸ்: சீனா வுஹான் மக்கள் அனைவருக்கும் 10 நாட்களில் கொரோனா பரிசோதனை செய்ய முடியுமா?

கொரோனா பரிசோதனை

பட மூலாதாரம், China News Service/getty Images

உலகில் முதன் முதலாக கொரோனா தொற்று பரவ தொடங்கியதாகக் கருதப்படும் சீனாவின் வுஹான் நகரத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் பணியை சீனா தொடங்கியுள்ளது.

இந்நகரில் சமீபத்தில் ஆறு பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இங்கு வாழும் 1.10 கோடி மக்களுக்கும் பத்து நாட்களில் பரிசோதனை செய்ய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். ஆனால், இதை அவர்களால் செய்து முடிக்க முடியுமா?

சோதனைக்கு எவ்வளவு நேரம் ஆகும்?

கடந்த ஏப்ரல் பிற்பகுதியில், வுஹானில் ஒவ்வொரு நாளும் 63,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக அரசு கூறியிருந்தது. மே 10-ம் தேதி இந்த எண்ணிக்கை 40,000 ஆக குறைந்தது. இந்நகரில் 60க்கும் மேற்பட்ட பரிசோதனை மையங்கள் உள்ளது.

இந்த மையங்கள் மூலம் ஒரு நாளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் பரிசோதனைகளைச் செய்ய முடியும். இவற்றை வைத்து பார்க்கும்போது, வெறும் பத்து நாட்களில் முழு மக்கள் தொகைக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற இலக்கை எட்டுவது கடினமானதாக இருக்கும் என தோன்றுகிறது.

கொரோனா பரிசோதனை

பட மூலாதாரம், Getty Images

அனைத்து பகுதிகளுக்கு ஒரே 10 நாட்களுக்குள் பரிசோதனை தொடங்கி முடிக்கப்படாது என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

''எடுத்துக்காட்டாக வுஹானில் உள்ள சில மாவட்டங்களில் மே 12-ம் தேதியும், மற்ற மாவட்டங்களில் மே 17-ம் தேதியும் சோதனை தொடங்கும்'' என வுஹான் நோய் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

'' ஒவ்வொரு மாவட்டமும், சோதனையை தொடங்கிய நாளிலிருந்து பத்து நாட்களில் பரிசோதனையை முடிக்கும்'' எனவும் கூறுகிறது.

இந்நகரில் உள்ள 13 மாவட்டங்களில் இரண்டு மாவட்டங்களில் பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மே 13-ம் தேதி ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எவ்வளவு பேருக்கு ஏற்கனவே சோதனை செய்யப்பட்டுள்ளது?

இந்நகரில் உள்ள முன்று மில்லியன் மக்களுக்கு ஏற்கனவே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இங்கு 1.10 கோடி மக்கள் தொகை இருந்தாலும், இந்த எண்ணிக்கையில் எற்ற இறக்கம் இருந்துள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

இங்கு ஜனவரி 23-ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பு வந்த சீனப் புத்தாண்டின் போது ஐந்து கோடி பேர் இந்நகரத்தை விட்டு பல இடங்களுக்குச் சென்றதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஏப்ரல் 8-ம் தேதி வரை இங்கு ஊரடங்கு நீடித்த நிலையில் எத்தனை பேர் திரும்பியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அனைவரும் பரிசோதனை செய்யப்பட வேண்டுமா?

அதிக ஆபத்து உள்ள நபர்கள், குறிப்பாக வயதானவர்கள், நெருக்கடியான இடங்களில் வாழ்பவர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு முதலில் பரிசோதனை செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த ஏழு நாட்களில் பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்படாது.

கொரோனா வைரஸ்

சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் முதன்மை தொற்றுநோயியல் நிபுணர் வு சுன்யூ,'' பரிசோதனையின் போது ஒருவருக்கு தொற்று இல்லை என முடிவு வந்தாலும், அதன் பிறகு தொற்று ஏற்பட்டால் நமக்கு தெரியாது'' என கூறுகிறார்.

அத்துடன்,'' எதிர்காலத்தில், பொது இடங்களில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட இடங்களிலும் தொற்று பரவலாம் என்பதால், அதிகளவில் சோதனை செய்வது மட்டும் தீர்வாகாது'' என நிபுணர்கள் நம்புகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: