கொரோனா வைரஸ்: ஊரடங்கு எத்தனை நாள் நீட்டிப்பு? என்னென்ன தளர்வுகள்? - இன்று அறிவிப்பு

கொரோனா வைரஸ்: ஊரடங்கு எத்தனை நாள் நீட்டிப்பு? என்னென்ன தளர்வுகள்?

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: ஊரடங்கு எத்தனை நாள் நீட்டிப்பு?

புதிய வழிமுறைகளுடன் ஊரடங்கு எத்தனை நாள் நீட்டிக்கப்படும்? என்பது பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகிறது. 4-வது கட்ட ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று தெரிகிறது.

கட்டுப்பாடுகள் தளர்வு

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த ஊரடங்கு ஏற்கனவே 3 முறை நீட்டிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறது. இதற்கிடையே மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம், வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு அவ்வப்போது ஊரடங்கு தொடர்பான பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டனஎன்றாலும் முககவசம் அணிவது, சமூக விலகலை கடைப்பிடிப்பது போன்றவற்றை மக்கள் சரியாக பின்பற்றாததால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ்: ஊரடங்கு எத்தனை நாள் நீட்டிப்பு? என்னென்ன தளர்வுகள்?

பட மூலாதாரம், Getty Images

மாநிலங்கள் கோரிக்கை

இதனால் பீகார், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்கள் ஊரடங்கை இந்த மாதம் இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொண்டு உள்ளன. மராட்டிய மாநிலத்தில் கொரோனாவால் உயிர் இழந்தோரின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதனால் ஊரடங்கு நீட்டிக்கப்படவேண்டும் என்பதில் அந்த மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உறுதியாக உள்ளார்.

மேற்கு வங்காளமும் ஊரடங்கை நீட்டிப்பதற்கு ஆதரவாக இருந்த போதிலும், என்னென்ன கட்டுப்பாடுகளை தளர்த்தவேண்டும் என்பதை மாநிலங்களிடமே விட்டுவிட வேண்டும் என்று விரும்புகிறது.

ஊரடங்கை நீக்கினால் பாதிப்புகள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போய்விட வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத் துறை நிபுணர்களும் எச்சரித்து உள்ளனர்.

அமித்ஷா ஆலோசனை

இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 4-வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும், இது புதிய வழிமுறைகளுடன் முந்தைய ஊரடங்குகளை விட வித்தியாசமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

4-வது கட்ட ஊரடங்கு வழிமுறைகள் தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா தனது துறை அதிகாரிகளுடனும், பிரதமரின் ஆலோசகர் பி.கே.மிஸ்ரா, மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா ஆகியோருடனும் ஆலோசனை நடத்தி உள்ளார்.

கொரோனா வைரஸ்: ஊரடங்கு எத்தனை நாள் நீட்டிப்பு? என்னென்ன தளர்வுகள்?

பட மூலாதாரம், Getty Images

எத்தனை நாள் நீட்டிப்பு?

எனவே, 3-வது கட்ட ஊரடங்கு நீட்டிப்பு இன்றுடன் நிறைவடைவதால், 4-வது கட்டமாக ஊரடங்கை நீட்டிப்பது பற்றிய அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிடுகிறது.

அப்போது மேலும் எத்தனை நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும்? என்னென்ன கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்?, என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்? என்பது பற்றி அறிவிக்கப்படும்.

பஸ்கள் ஓடுமா?

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்றும், மற்ற பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரஞ்சு மண்டலத்தில் குறைவான கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும், பச்சை மண்டலத்தில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்து உள்ளனர்.

அத்துடன் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் பஸ், ஆட்டோ, மெட்ரோ ரெயில் மற்றும் சிறப்பு ரெயில்கள் குறைந்த அளவில் இயக்கப்படும் என்றும், வீட்டு உபயோக பொருட் கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட மேலும் பல கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் கருதப்படுகிறது.

மேலும் உள்நாட்டு விமான போக்குவரத்தை படிப்படியாக தொடங்கவும் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

Presentational grey line

இந்து தமிழ் திசை: நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பொருளாதார அறிவிப்புகள் என்னென்ன?

கொரோனா வைரஸ்: ஊரடங்கு எத்தனை நாள் நீட்டிப்பு? என்னென்ன தளர்வுகள்?

பட மூலாதாரம், Getty Images

ராணுவ தளவாட உற்பத்தியில் அந்நிய முதலீடு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் அறிவித்துள்ளார். யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப் படும். சுரங்கத் துறையில் தனியார் பங் கேற்பு உள்ளிட்ட அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

கடந்த 12-ம் தேதி நாட்டு மக்க ளிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, கரோனா ஊரடங்கால் முடங்கியுள்ள பொருளாதாரத்தை முடுக்கிவிட ரூ.20 லட்சம் கோடியில் 'சுயசார்பு பாரதம்' என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்த திட்டம் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 4 நாட்களாக விளக்கி வருகிறார். எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு தொகை செலவிடப்படும் என்பது குறித்து தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி, நான்காவது கட்ட அறிவிப்புகளை நேற்று வெளியிட்டார்.

அப்போது நிலக்கரி சுரங்கம், கனிம வளம், மின் விநியோகம், விமான போக்குவரத்து, வான்வழி பிராந்தியம், ராணுவ தளவாட உற்பத்தி, விண்வெளி, அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட உள்ள முக்கியமான சீர்திருத்தங்களை அமைச்சர் வெளியிட்டார். அவர் கூறியதாவது:

'மேக் இன் இந்தியா' திட்டம் 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதை வலுப்படுத்தி சுயசார்புடன் இருப்பதற்காக பல்வேறு கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் வகையில் கொள்கை முடிவுகள், சீர்திருத்தங்கள் செய்யப்படும்.

50 ஆயிரம் கோடி

நிலக்கரி சுரங்கங்களில் தனியாரும் ஈடுபடும் வகையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது. இதன்மூலம் நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளில் தனியாரும் ஈடுபட முடியும். சுரங்க நடவடிக்கைகளில் மறுகுடியமர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. 500 சுரங்க பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை வெளிப் படையாக ஏலம் விடப்படும்.

கனிம வளங்களில் தனியாரும் ஈடுபட வழிவகை ஏற்படுத்தப்படும். பாக்ஸைட் கனிம வளங்களைக் கண்டறிவதோடு, குறிப்பிட்ட நிறுவனம் நிலக்கரி சுரங்கத்துடன் பாக்ஸைட் கனிம சுரங்கத்தையும் இணைத்து ஏலம் எடுக்க வழியேற்படுத்தப் படும்.

மின் விநியோகத்தில் (டிஸ்ட்ரிபியூ ஷன்) உள்ள சிக்கலைத் தவிர்க்க, யூனியன் பிரதேசங்களில் உள்ள விநியோக அமைப்புகள் தனியார் மயமாக்கப்படும். இதன்மூலம் இவற்றின் செயல்திறன் மேம்படுத்தப்படும்.

6 விமான நிலையங்கள்

நாட்டில் வான் பிராந்தியத்தில் 60 சதவீத பரப்பு பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதை சிறப்பாகப் பயன் படுத்துவதன் மூலம் எரிபொருள் சேமிக்கப்படும். பைலட்டின் வேலை நேரம் குறையும். இதனால் விமான துறைக்கு ஆண்டுக்கு ரூ.1,000 கோடி மீதமாகும். நாட்டில் உள்ள மேலும் 6 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும்.

விமானங்கள் பராமரிப்பு, பழுது நீக்குதல், உதிரி பாகங்கள் மாற்றுவது (எம்ஆர்ஓ) அமைப் பதற்கு ஏற்ப விதிமுறைகளில் தளர்வு செய்யப்படும். இதில் உள்ள வரி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

ராணுவ தளவாட உற்பத்தியை அதிகரிக்க அந்நிய முதலீட்டு வரம்பு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதனால் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும்.

ராணுவ உற்பத்தி அமைப்புகள் சிறப்பாக செயல்பட உற்பத்தி வாரியத்துக்குத் தன்னாட்சி அதி காரம் அளிக்கப்படும். இந்த நடவடிக்கையால் அவற்றின் செயல்திறன் மேம்படும்.

விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ தனித்துவமாக செயல் பட்ட போதிலும் அதன் நிர்வாகத் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அரசு நிறுவனமாக இருந்தாலும் அது கார்ப்பரேட் நிறுவனமாக இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க முடியும். இதன் மூலம் இதை பங்குச் சந்தையில் பட்டியலிடவும், அப்பங்குகளை ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாங்கும் வகையில் செயல்திறன் அமையும்.

அணுசக்தி முழுக்க முழுக்க அரசு சார்ந்தது. இருப்பினும் மருத்துவம் சார்ந்த ஐசோடோப்பு உற்பத்தி யில் தனியாரும் ஈடுபட வகை செய் யப்படும். இத்தகைய ஐசோ டோப்புகள் புற்றுநோய் உள்ளிட்ட நோயைக் குணப்படுத்த பயன் படுத்தப்படுகிறது. அதேபோல ரேடியேஷன் தொழில்நுட்பம் மூலம் பழம், காய்கறிகள் கெடு வதைத் தடுக்க முடியும். அதற்கான தொழில்நுட்பங்களில் அரசுடன் இணைந்து தனியாரும் பிபிபி அடிப்படையில் ஈடுபட வகை செய்யப்படும்.

சமூக கட்டமைப்பு பணிகளுக்கான முதலீட்டு அளவு 20 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக உயர்த்தப் படுகிறது.

முதலீடுகளை ஈர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க செயலர்கள் அளவிலான அதிகாரம் பொருந்திய குழு உருவாக்கப் படும்.

மொத்தமுள்ள 3,376 தொழில் பூங்காக்கள், எஸ்டேட்கள் கண்டறியப் பட்டுள்ளன. இவற்றில் உபரியாக உள்ள 5 லட்சம் ஹெக்டேர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது

இவ்வாறு நிர்மலா சீதா ராமன் கூறினார். இந்த விவரங்கள் அனைத்தையும் இணையமைச்சர் அனுராக் தாகுர் இந்தியில் விவரித்தார்.

Presentational grey line
Banner image reading 'more about coronavirus'
Banner

தினமணி: பொறியியல் படிப்பு மாணவா் சோ்க்கை எப்போது?

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கான ஆன்லைன் பதிவு வரும் ஜூன் 10-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பொது முடக்கம் காரணமாக கல்வி சாா்ந்த பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வு தொடா்பான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.

முதலில் ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு செய்த பிறகு, கலந்தாய்வும் ஆன்லைனில் நடைபெறும். அந்த வகையில் அடுத்த கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான பணிகள் எப்போது தொடங்கும் என்று மாணவா்களும், பெற்றோரும் எதிா்பாா்த்து இருக்கின்றனா்.

இந்த நிலையில்பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு பணிகள் அனைத்தும் தயாராக இருக்கிறது என்றும், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க ஆரம்பித்ததும் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் அண்மையில் தெரிவித்தாா்.

இதன் தொடா்ச்சியாக தற்போது பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பவா்களுக்கான ஆன்லைன் பதிவு ஜூன் மாதம் 2-ஆவது வாரத்தில் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் ஜூன் 10-ஆம் தேதியில் இருந்து விண்ணப்பப் பதிவு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கலந்தாய்வுக்கான அனைத்துப் பணிகளும் தயாா்நிலையில் உள்ளன. அதற்கான அட்டவணைகளும் தயாரிக்கப்பட்டுவிட்டன. அதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றனா்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: