தமிழகத்துக்கு பிழைக்க வந்தவர்களை சொந்த ஊருக்கு துரத்தும் கொரோனா வைரஸ் ஊரடங்கு

- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
எந்த கிருஷ்ணன் வந்து காப்பாற்றுவான் என தெரியாது. 40 வயதான திரௌபதி எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் அவரது உயிர்மூச்சைக் கொடுத்து எடுத்துவைக்கும் அடியாகும். கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து, தமிழகத்தில் இருந்து தங்களது சொந்த மாநிலத்திற்கு நடைபயணமாக செல்லும் பல்லாயிரக்கணக்கான வடமாநிலத்தவர்களில் திரௌபதியும் ஒருவர்.
உத்தரபிரதேசத்தில் உள்ள சோன்பத்ரா நகரத்தில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் வந்தவர். இரண்டு மகன்கள் மற்றும் கணவருடன் தமிழகத்தில் பல ஊர்களில் சாலை சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு, கிடைக்கும் வருமானத்தில், தனது மகளின் எதிர்காலத்திற்காக ஒவ்வொரு ரூபாயையும் சேர்த்த தாய் திரௌபதி.
சென்னை மாதவரம் பகுதியில் இருந்து நடந்து சென்ற திரௌபதியின் குடும்பத்தினரை கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் சந்தித்தோம். சுமார் 50 வடமாநிலத் தொழிலார்கள் ஒரு குழுவாக சென்றார்கள். அதில் இவர்கள்தான் வயதில் மூத்தவர்கள் மற்றும் அதிகம் களைப்புற்றவர்கள்.
பாக்யபாரோவின் செருப்புகள் தேய்ந்துவிட்டன. ''ஊரடங்கு முடிந்துவிட்டாலும், அடுத்த மூன்று மாதத்திற்கு எந்த வேலையும் நடக்காது என கூறிவிட்டார்கள். எந்த நம்பிக்கையில் நாங்கள் இங்கே வசிப்போம்?,''என்கிறார் பாக்யபாரோ.

''நாங்கள் எப்போது ஊருக்கு சென்று சேர்வோம் என தெரியாது. உயிருடன் ஊர் திரும்புவோமா என தெரியாது. நம்பிக்கை மட்டுமே மிச்சம் இருக்கிறது. நடக்கிறோம்,'' என்கிறார் திரௌபதி.
கணவர் பாக்யபாரோவுடன் திருமணம் ஆகி கடந்த 33 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு சிரமமான காலத்தை தனது வாழ்நாளில் கண்டதில்லை என்கிறார் திரௌபதி. ''இங்கே வேலை செய்வதற்காக வந்தோம். எங்களிடம் இருந்த காசை வைத்து கடந்த இரண்டு மாதங்களாக உணவு உண்டோம்.இப்போது எங்களிடம் எதுவும் இல்லை. எங்களை வேலைக்கு அழைத்துவந்த முகவரோடு தொடர்பு கொள்ளமுடியவில்லை,'' எனக் கலங்குகிறார் திரௌபதி.
பிபிசி தமிழ் சந்தித்த பல தொழிலாளர்களும் அவர்களை காவல்துறையினர் நடந்துசெல்வதை தடுக்கிறார்கள் என்றும், அவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் கோருகிறார்கள். ''அரசாங்கம் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை. இனியும் எங்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. எங்கள் ஊருக்குப் போகிறோம். உங்கள் பஸ், ரயில் சேவையை நம்புவதைவிட நாங்கள் எங்கள் கால்களை நம்புகிறோம். என் வீட்டை நான் சென்றுசேரத் தடை போடாதீர்கள்,'' என கோபத்துடன் பேசுகிறார் ஜார்காண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் வினோத்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

நடந்து செல்வதை விடுத்து ஒரு சிலர் புதிதாக சைக்கிள் வாங்கி தங்களது ஊர்களுக்கு சைக்கிளில் செல்கிறார்கள். சென்னையில் இருந்து தனது சொந்த மாநிலமான ஒடிசாவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் 50 வயதான தோலா, ஆந்திரப்பிரதேசத்தின் தடா பகுதியில் இளைப்பாற உட்கார்ந்திருந்தார்.
''புது சைக்கிள் வாங்கினேன். ரூ.5,000 விலை சொன்னார்கள். என்னிடம் கடைசியாக இருந்த காசை கொடுத்து இந்த சைக்கிள் வாங்கிவிட்டேன். எத்தனை நாட்கள் ஆகும் எனத் தெரியாது. போகிற வழியில் உணவு, தண்ணீர் மட்டும் கிடைத்தால் போதும். நான் என் ஊருக்கு போய்விடுவேன், என் குடும்பத்தினரைக் காண வேண்டும். என்னிடம் எதுவும் இல்லை. கொரோனாவால் ஊரடங்கு கொண்டுவந்தார்கள். ஆனால் எங்களை போன்றவர்களுக்கு சாப்பிட எதுவுமில்லை என்பதை ஏன் அரசாங்கம் உணரவில்லை,'' என்று கண்ணீருடன் பேசினார் தோலா.

ஊரடங்கு முடிந்தவுடன் கட்டுமானப் பணிகள் தொடங்குமா என்பது கேள்விக்குறியாக இருப்பதால் சொந்த மாநிலத்திற்கு செல்வதாகவும் சில தொழிலாளர்கள் கூறுகிறார்கள். ''எங்களை கூட்டிவந்த முகவர்கள் உடனே வேலை தொடங்காது. மூன்று மாதம் ஆகும் எனச் சொல்லிவிட்டார்கள். ஊருக்குப் போய்விடுங்கள் என விரட்டிவிட்டார்கள். எங்களுக்கு உணவு கொடுப்பதில் மோசமாக நடந்துகொள்கிறார்கள். இங்கு இருப்பதைவிட, எங்கள் ஊருக்கு சென்றுவிட்டால் நிம்மதியாக இருப்போம். நடப்பது சிரமம்தான். ஆனால் அதைவிட, இங்கே இருப்பது இன்னும் அச்சப்படவைக்கிறது,''என்கிறார் 25 வயதாகும் கட்டுமானத் தொழிலாளி அசுதோஷ்.
மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பிகார், ராஜஸ்தான், ஒதிஷா, உத்தரப்பிரதேசம் என பல்வேறு மாநில தொழிலாளர்கள் தங்களது குடும்பங்களுடன் நடந்து செல்லும் காட்சி காண்பவர்களை கவலைகொள்ள வைக்கிறது. சிலர் குழந்தைகளை தொடர்ந்து சுமக்க முடியாமல், அவர்கள் கொண்டுவந்த ட்ராலி பெட்டியில் அமரவைத்து இழுத்துச்செல்கிறார்கள்.

பல்லாயிரக்கணக்கில் மக்கள் இடம்பெயர்வது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசியபோது வடமாநிலத் தொழிலாளர்கள் நடந்தே ஊர் செல்லும் முயற்சிகளுக்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக தெரிவித்தார்கள். பெயர் சொல்ல விரும்பாத உயரதிகாரி ஒருவர், ''இங்கு தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பலருக்கு அச்சத்தை ஏற்படுத்திவிட்டது. என்ன நடந்தாலும் பரவாயில்லை, எங்கள் ஊருக்கு போகவிடுங்கள் என பலர் கேட்கிறார்கள். அவர்களது குடும்பத்தோடு இருந்தால் நிம்மதியாக இருக்கும் என எண்ணுகிறார்கள். வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் இதே உணர்வோடுதான் இந்தியா திருப்புகிறார்கள் என்பதை பார்க்கிறோம். அதேபோலதான் இவர்களும்,'' என்றார்.
மேலும், ''ஒரு சிலருக்கு பணம் இல்லை, வேலை அடுத்து சில மாதங்களுக்கு கிடைக்காது என்பதால் ஊருக்கு போக வேண்டும் என்கிறார்கள். மாநகராட்சி பல இடங்களில் வடமாநிலத்தவர்களுக்கு முகாம் நடத்தி, தொடர்ந்து அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புகிறோம். ஆனால் உடனே எல்லோரையும் அனுப்புவது சிரமம். போக்குவரத்து முழுமையாக திறந்துவிடப்படவில்லை என்பதும் ஒரு காரணம். நாங்கள் பார்த்தவரையில், பலரும் குடும்பத்தை பிரிந்து இங்கே இருக்கிறார்கள் என்பது அவர்களை வாட்டுகிறது,'' என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













