தமிழக அரசு அலுவலகங்களில் மே 18 முதல் அமலாகும் மாற்றங்கள் என்னென்ன?

தமிழக அரசு

பட மூலாதாரம், WIKI

தமிழக அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அலுவலகங்கள் வாரத்திற்கு 6 நாட்கள் இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததையடுத்து தற்போது தமிழக அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை 33 சதவீதமாக இருந்துவந்தது. இந்த நிலையில் அரசு அலுவலகங்களின் செயல்திறனை அதிகரிக்க, எல்லா நாட்களிலும் குறைந்தது பாதி அளவு ஊழியர்களாவது பணியில் இருக்கும்படி செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

கொரோனா காலகட்டத்தில் இருந்த விடுமுறைகள், செயல்படாத நாட்களை ஈடுசெய்யும் விதமாக இனி அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு ஆறு நாட்கள் இயங்குமென உத்தரவிடப்பட்டுள்ளது. மே 18ஆம் தேதி முதல் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.

மே 18 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன?

1. சனிக்கிழமை உட்பட வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை நாட்களாக இருக்கும்.

2. எல்லா அரசு அலுவலகங்களும் பாதியளவு ஊழியர்களுடன் இயங்கும்.

3. ஊழியர்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, வாரத்தின் முதல் இரண்டு நாட்களில் அதாவது, திங்கள் - செய்வாய்க் கிழமைகளில் முதல் பிரிவினர் பணியாற்றுவார்கள். அடுத்த இரண்டு நாட்கள், அதாவது புதன் - வியாழக்கிழமைகளில் அடுத்த பிரிவினர் பணியாற்றுவார்கள். வெள்ளி - சனிக்கிழமைகளில் மீண்டும் முதல் பிரிவினர் பணியாற்றுவார்கள்.

Banner image reading 'more about coronavirus'
Banner

4. அதற்கு அடுத்த வாரம், இரண்டாவது பிரிவினர் திங்கள் - செவ்வாய்க் கிழமைகளில் பணியைத் துவங்குவார்கள். கடந்த வாரத்தைப் போலவே இந்த சுழற்சி தொடரும்.

5. பணியில் இல்லாத பிரிவினர், அலுவலக நேரத்தில் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டால் அவர்கள் வரவேண்டும்.

6. க்ரூப் - ஏ அதிகாரிகளும் எல்லா அலுவலகங்களின் தலைமை அதிகாரிகளும் எல்லா வேலை நாட்களிலும் பணிக்கு வரவேண்டும்.

7. எல்லா அதிகாரிகளும் அலுவலர்களும் எந்த நேரத்திலும் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும். எலெக்ட்ரானிக் ரீதியாக தொடர்பு கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.

8. இந்த முறை, தலைமைச் செயலகம் துவங்கி மாவட்ட மட்டத்தில் உள்ள எல்லா அரசு அலுவலகங்கள், வாரியங்கள், சொசைட்டிகளுக்கும் பொருந்தும்.

9. காவல்துறை, சுகாதாரத் துறை, மாவட்ட நிர்வாகம், கருவூலம், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவை மார்ச் 25ஆம் தேதி இடப்பட்ட ஆணையின்படியே இயங்கும்.

10. தேவையான பேருந்து வசதிகள் செய்துதரப்படும். அடுத்த ஆணை வரும்வரை இந்த உத்தரவுகள் முழுமையாகப் பின்பற்றப்படவேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: