இந்தியாவில் அதிகரிக்கும் மதுப்பழக்கம் : கருப்பு பக்கங்களும், சந்திக்கவுள்ள சவால்களும் - விரிவான அலசல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில வாரங்களாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்க நிலை சற்று தளர்த்தப்பட்டதும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதுபான கடைகளுக்கு வெளியே மிக நீண்ட தூரத்திற்கு மக்கள் வரிசையில் நிற்பதை பார்க்க முடிந்தது.
கொரோனா வைரஸின் ஹாட் ஸ்பாட்டாக உள்ள மும்பை போன்ற நகரங்களில், மதுபான பிரியர்கள் தனிநபர் இடைவெளி என்பதை கேலிக்கூத்தாக்கினர். இதன் காரணமாக மீண்டும் மதுபான கடைகளை மூடும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. கட்டுப்பாட்டை மதிக்காதவர்கள் மீது தடியடி நடத்த வேண்டி இருந்தது.
பெங்களூருவில் ஒரு நபர் 52,000 ரூபாய்க்கு மது வாங்கிய ரசீது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
பித்து பிடித்ததை போல மதுபானம் வாங்க கூடிய இந்த கூட்டம் அனைவரும் எதிர்பார்த்ததுதான். கடுமையான முடக்க நிலை, மதுபானங்களுக்கு எந்த அளவுக்கு தேவையை ஏற்படுத்திருக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். உலகம் முழுவதும் மதுபான விற்பனையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்தாண்டு மார்ச் மாதம் மட்டும் பிரிட்டனில் 22% விழுக்காடும், அமெரிக்காவில் 55 % விழுக்காடும் மதுபான விற்பனை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மதுபானங்கள் விற்பனை என்பது இந்தியாவில் எப்போதும் எளிதானதாக இருந்ததில்லை. மதுபான விற்பனையில் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் ஈடுபடுவது மற்றும் வீட்டிற்கே சென்று மதுபானம் டெலிவரி செய்வது ஆகியவை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.
தேர்தலில் தங்களுக்கு சாதகமாக ஓட்டுகள் விழ வேண்டும் என்பதற்காக, மதுவிலக்கை அமல்படுத்திய பல மாநிலங்களும் இருக்கின்றன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும், மதுபானங்களை பொறுத்தவரை உற்பத்தி, விலை, விற்பனை மற்றும் வரி ஆகியவற்றில் தங்களுக்கென தனி கொள்கைகளை கொண்டுள்ளன.
மதுபான நுகர்வில் முன்னணி வகிக்கும் இந்தியா
அளவை பொறுத்தவரை, IWSR டிரிங்ஸ் என்ற ஆய்வு நிறுவனத்தின் தரவுகளின்படி சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக மதுபான விற்பனை நடைபெறும் நாடாக இந்தியா உள்ளது. 2017-ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் ஆண்டுதோறும் மதுபான விற்பனையின் அளவு 11 % விழுக்காடு அதிகரித்து வருகிறது. தனிநபர் என்ற வகையிலும் மதுபானம் அருந்தும் அளவு அதிகரித்துள்ளது.
உலகிலேயே விஸ்கி வகை மதுபானம் அதிகம் விற்பனையாகும் நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவின் விஸ்கி விற்பனை அளவானது, அமெரிக்காவின் விற்பனை அளவை விட மூன்று மடங்கு அதிகம். உலகில் விற்கப்படும் விஸ்கியில் இரண்டில் ஒரு பாட்டில் இந்தியாவில்தான் விற்பனையாகிறது. 2018-ஆம் ஆண்டு உலக மதுபான விற்பனை குறைந்த போது, உலகளாவிய விஸ்கி சந்தையில் இந்தியா 7% வளர்ச்சியை ஈட்டியது.
மதுபான வருவாயை சார்ந்திருக்கும் மாநிலங்கள்
இந்தியாவின் மொத்த மதுபான விற்பனையில் 45 % விழுக்காடு, தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளாவில்தான் நடைபெறுகிறது. கிரிசில் என்ற ஆய்வு அமைப்பின் தரவுகளின்படி, அந்த மாநிலங்களின் மொத்த வருவாயில் 10 % விழுக்காட்டினை மதுவிற்பனைதான் பூர்த்தி செய்கிறது.
இதைத்தவிர இந்தியாவில் மதுவிற்பனை அதிகம் நடைபெறும் மாநிலங்களாக பஞ்சாப்,ராஜஸ்தான்,உத்தர பிரதேசம்,மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் மகராஷ்ட்ரா ஆகியவை உள்ளன. இந்த மாநிலங்களின் வருவாயில் மதுபானங்களின் பங்கானது, 5 % விழுக்காட்டுக்கும் குறைவாக தொடங்கி 10% விழுக்காடு வரையிலும் இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு சொட்டு மதுபானம் கூட விற்கப்படவில்லை. இதனால் மதுபான வருவாயை நம்பி இருந்த மாநிலங்கள் சிரமத்துக்கு உள்ளாகின. எனவே தங்கள் இழப்புகளை சரிகட்டும் வகையில், மதுபான விற்பனையை மீண்டும் தொடங்க அந்த மாநில அரசுகள் ஆர்வமாக இருந்தன என அந்த ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.
ஏற்கனவே முடக்கநிலை காரணமாக பணப்புழக்கம் குறைவாக காணப்பட்ட நிலையில், மதுவிற்பனை வருவாயும் கிடைக்காததால் சில மாநிலங்கள் திவாலாகும் சூழலுக்கு தள்ளப்பட்டன.
இந்தியாவை பின்னோக்கி இழுக்கும் மதுப்பழக்கம்
ஆனால் இந்தியாவில் வளர்ந்து கொண்டே வரும் இந்த ஆல்கஹால் நுகர்வு, தன்னுடைய கருப்பு பக்கங்களை முகமூடி அணிந்து மறைத்து வருகிறது.
இந்திய அரசின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவிலுள்ள ஆண்களில் மூன்றில் ஒருவருக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கிறது. 10 வயது முதல் 75 வயதுக்குட்பட்ட 14 % விழுக்காட்டுக்கும் அதிகமானோர் மது அருந்துகின்றனர். உலக சுகாதார நிறுவன கணக்கீட்டின்படி, உலக அளவில் அதீத குடிகாரர்களின் அளவு 16 % விழுக்காடாக இருக்கும் நிலையில், இந்தியாவில் அந்த அளவானது 17 % விழுக்காடாக உள்ளது.
துரதிஷ்டவசமாக, மூன்றில் ஒரு இந்தியர் தரம் குறைந்த, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட அல்லது நாட்டு சாராயத்தை அருந்துகின்றனர். இவை கள்ளச்சாராய சாவுகள் உட்பட பல சோக சம்பவங்கள் நடக்க காரணங்களாக அமைகின்றன. அந்த அறிக்கையின்படி, சுமார் 17 % விழுக்காடு நபர்கள், மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். சிலர் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அதீத அளவில் மது அருந்துகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் நுகரப்படும் மதுபானங்களில் பாதிக்கும் மேல் தரவுகளில் இடம்பெறாதவை என உலக சுகாதார அமைப்பின் கணக்கீடு கூறுகிறது. அதாவது, உள்ளூரில் தயாரிக்கப்படும் சில மதுபானங்களுக்கு சில மாநிலங்களில் வரி விதிக்கப்படுவதில்லை. 2014-ஆம் ஆண்டு பொறுப்பான குடிப்பழக்கத்திற்கான சர்வதேச கூட்டணி என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், மது அருந்தும் பழக்கமுள்ளவர்களில் பலர் உள்ளூர் மதுபானங்கள் அல்லது வீட்டில் தயாரிக்கப்படும் சாராயத்தை விரும்புவதாக கூறப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் மது விற்பனை
முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியர்கள் மதுபானம் அருந்துகிறார்கள். சுமார் 189 நாடுகளில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 1990-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் மதுபான நுகர்வானது 38 % விழுக்காடு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது ஓராண்டில் ஓர் இளைஞர் அருந்தும் மதுவின் அளவானது 4.3 லிட்டர் என்ற அளவிலிருந்து 5.9 லிட்டர் என உயர்ந்துள்ளது.
மதுபானங்கள் வாங்கும் அளவுக்கு மக்களிடையே வருமானம் அதிகரித்தது, அந்த பழக்கத்தை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக அமைந்துவிட்டதாக ஜெர்மனியை சேர்ந்த ஆய்வாளரான ஜேக்கப் மாந்தே கூறுகிறார்.
மதுபானங்களின் விலை தற்போது மலிவாகிவிட்டது. அதிக தனிநபர் வருமானம் கொண்ட நாடுகளை விட, நடுத்தர வருமானம் மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் பியரின் விலை குறைவாக உள்ளது என மாந்தே நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் தீவிர உடல்நல பிரச்சனை குடிப்பழக்கம்
இந்தியாவை பொறுத்தவரை குடிப்பழக்கத்தில் இருக்கும் பெரும் பிரச்சனை, அதனால் ஏற்படக்கூடிய கல்லீரல் மற்றும் இதயம் தொடர்பான தொற்று அல்லாத நோய்கள்தான் என மாந்தே கூறுகிறார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற மூன்றில் ஒரு சாலை விபத்துக்கு குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது காரணமாக இருந்துள்ளது. 2015-16 ஆண்டில் தேசிய மனநல அமைப்பு நடத்திய ஆய்வில், சுமார் 10 % விழுக்காடு ஆண்கள் மதுவுக்கு அடிமையாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கல்லீரல் நோய் தொடர்பான மரணங்களில் 60 % விழுக்காட்டுக்கும் அதிகமான மரணங்கள் மது அருந்துவதாலேயே நிகழ்ந்துள்ளது. குடிப்பழக்கம் இந்தியாவின் வளர்ந்து வரும் தீவிர உடல்நல பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. குடிப்பழக்கம் குடும்ப வன்முறைக்கும் முக்கிய காரணமாக திகழ்கிறது. எனவேதான் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான பெண்கள் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு ஆதரவாக உள்ளனர்.
மதுபானங்களின் விலையை அதிகரிப்பது எந்த பலனையும் தராது. பொருளாதார நிபுணரான சந்தோஷ் குமார் என்பவர் நடத்திய ஆய்வு ஒன்றில், மதுபானங்களின் விலையை அதிகரிப்பது, மதுபானங்கள் விற்பனையாகும் அளவில் குறைந்த மற்றும் சிறிய தாக்கத்தைத்தான் ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
மதுபான விலைகளை கட்டுப்படுத்துவது மற்றும் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவற்றை ஒருங்கே செய்வதன் மூலமே, இந்தியாவில் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் மதுபழக்கத்தை குறைக்க வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும் என சந்தோஷ் குமார் கூறுகிறார்.
மதுப்பழக்கத்திற்கு முடிவு கட்டுவது எளிதானதா?
இந்தியாவில் படிப்படியாக மது விற்பனையை குறைப்பதே இந்தியாவில் அந்த பழக்கத்தால் ஏற்படும் தாக்கத்தை குறைக்க உதவும் என ஸ்வராஜ் கட்சியின் தலைவரும், அரசியல் விமர்சகருமான யோகேந்திர யாதவ் தெரிவிக்கிறார்.
அரசுகள் மதுபான வருவாயை நம்பி இருப்பதை குறைப்பது, மதுபானங்கள் குறித்த தீவிரமான விளம்பரங்களை நிறுத்துவது, மதுபான விற்பனை மீது ஏற்கனவே இருக்கும் சட்டங்களை சரியாக அமல்படுத்துவது, மதுபான கடைகள் திறக்க அனுமதி அளிக்கும் முன்னர் அந்த பகுதியில் இருக்கும் குறைந்தபட்சம் 10 % விழுக்காடு மக்களிடம் கருத்து கேட்பது, மதுபானம் மூலம் கிடைக்கும் வருவாயை, அந்த பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க பயன்படுத்துவது என பல கட்ட நடவடிக்கைகள் மூலமே இது சாத்தியப்படும் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.

பட மூலாதாரம், Getty Images
மக்களின் விருப்பம் தொடர்பான உரிமைகளுக்கு தடை விதிப்பதால், அது கருப்பு சந்தையின் வளர்ச்சிக்கே வழிவகுக்கும். ஆனால் உண்மையில் நாம் சுதந்திரத்தை விரும்பினால், மதுபானத்தின் மீதான அரசியல் வர்த்தகம் குறித்தும் நாம் கேள்வி எழுப்ப வேண்டும். அதன் மூலம் இந்த சிக்கலான பிரச்சனைக்கான அறிவார்ந்த தீர்வுகளை கண்டறிய முயல வேண்டும் என முன்னணி ஆய்வாளரான பிரதாப் மேத்தா கூறுகிறார்.
ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












