Paatal Lok- வெப் சீரிஸ் விமர்சனம்

பட மூலாதாரம், Amazon prime IN/ twitter
ஒரு நவீன க்ரைம் த்ரில்லருக்குத் தேவையான எல்லாமே இதில் இருக்கிறது. ஏகப்பட்ட கொலைகளைச் செய்த ஒரு கூலிப் படையினர், சூழ்ச்சிகரமான கணக்குகளைப்போடும் அரசியல்வாதிகள், அவர்களது கைப்பாவையாக இயங்கும் போலீஸ்காரர்கள், எல்லா சந்தர்ப்பங்களிலும் தனக்கான வாய்ப்புகளைத் தேடும் மீடியா அரசர்கள், இதற்கிடையில் உண்மையைத் தேடியலையும் சில காவலர்கள்... இதுதான் அமெஸான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் 'பாதாள் லோக்'.
சஞ்சய் மெஹ்ரா (நீரஜ் கபி) என்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரை கொலைசெய்ய முயலும் நான்கு பேரைக் கைதுசெய்கிறது தில்லி காவல்துறை. இந்த வழக்கின் விசாரணை ஹாதிராம் சௌத்ரி (ஜெய்தீப் அலவத்) என்ற ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவருக்கு உதவியாக வருகிறான் கான்ஸ்டபிள் அன்சாரி. தன் மீதான கொலை முயற்சியைப் பயன்படுத்தி, தனக்குத் தேவையானவற்றைச் செயல்படுத்த முயல்கிறார் சஞ்சய் மெஹ்ரா. ஹாதிராம் சௌத்ரி துப்புதுலக்க ஆரம்பித்து, இந்த கொலை முயற்சி புதிரை நெருங்கும் நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்.

பட மூலாதாரம், Amazon prime IN/twitter
இருந்தபோதும் தொடர்ந்து அவர் மேற்கொள்ளும் விசாரணை, அவரை உத்தரப்பிரதேசத்தின் பல சிறு நகரங்களுக்கு அழைத்துச் செல்கிறது. அங்கு யாரோ ஒரு அரசியல்வாதியின் கணக்குகள், எப்படி எங்கெங்கோ சென்று, எப்படியெல்லாமோ திசைமாறி, யார் யாரையோ பாதிக்கிறது என்பதே இந்த முதல் சீஸனின் கதை.
இந்த முதல் சீஸனில் மொத்தம் 9 எபிசோடுகள். எல்லா எபிசோடுகளும் கிட்டத்தட்ட 42-45 நிமிடங்கள். ஆகவே கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் ஓடும் இந்த தொடரின் எந்த ஒரு காட்சியிலும் சிறு தொய்வுகூட இல்லை. முதல் எபிசோடை பார்த்த பிறகு, ஒன்பது பாகங்களையும் மொத்தமாகப் பார்க்க வைக்கிறது திரைக்கதை.
சமீப காலமாக வெளிவந்த பல neo-noir த்ரில்லர்கள், non - linear பாணியில் கதை சொல்வதாகச் சொல்லி, கிட்டத்தட்ட என்ன பார்க்கிறோம், இதற்கு முன்பு என்ன கதை என்பதே புரியாத அளவுக்கு கொண்டுவந்துவிட்டார்கள். Sacred Gamesன் இரண்டாவது பாகத்தில் இதுதான் நடந்தது.

பட மூலாதாரம், Amazon prime In/twitter
ஆனால், Paatal Lokல் அதில் கவனமாக இருக்கிறார்கள். எந்த இடத்தில் ஃப்ளாஷ் - பேக் இருக்க வேண்டுமோ, அந்த இடத்தில் மட்டுமே ஃப்ளாஷ்பேக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. சீரான, ஒரே நேர்கோட்டில் இருக்கும் கதை, விறுவிறுப்பை முழுமையாகத் தக்கவைக்கிறது.
இந்த வெப் சீரிஸின் மற்றொரு முக்கியமான அம்சம், பிரச்சார தொனியின்றி சமகால இந்தியாவின் அரசியல்போக்குகளை சொல்லிக்கொண்டே போவதுதான். மாட்டுக் கறி வைத்திருந்தவர்கள் என்ற பெயரில் இஸ்லாமியர்கள் அடித்துக்கொல்லப்படுவது, இந்துத்துவத்தின் எழுச்சி, இந்தியா முழுவதுமே ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக தொடர்ந்து நடத்தப்படும் வன்முறைகள், யார், யாரோ போடும் அரசியல் கணக்குகளில் சின்னாபின்னமாகும் அப்பாவிகளின் வாழ்க்கை ஆகியவை இந்தத் தொடரின் பல இடங்களில் தொடர்ந்து சொல்லப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.

பட மூலாதாரம், Amazon prime IN/ twitter
ஊடகங்கள் தொடர்பான கதைகளில், அந்த அலுவலகங்கள் காட்டப்படும்விதத்திற்கும் உண்மையான ஊடக உலகிற்கும் தொடர்பே இருக்காது. ஆனால், இந்தப் படத்தில் நிஜத்தை நெருங்கியிருக்கிறார்கள்.
தொடரின் ஹீரோவாக வரும் ஜெய்தீப், அட்டகாசம் செய்திருக்கிறார். மதிக்கப்படாத காவலராக, மகனுக்கு முன்னால் தன்னை நிரூபிக்க விரும்பும் தந்தையாக வரும் ஜெய்தீப்புக்கு இந்தத் தொடர் நிச்சயமாகவே ஒரு பெரிய break ஆக அமையக்கூடும். இவரது மனைவியாக நடித்திருக்கும் குல் பனாகிற்கு கதையில் முக்கிய பங்கு ஏதும் இல்லை. ஆனால், அவரில்லாமல் தொடரை நினைத்துப் பார்க்க முடியவில்லை. சஞ்சய் மெஹ்ராவாக வரும் நீரஜ் கபி சில இடங்களில் சோபிக்கிறார்.
ஒளிப்பதிவும் பின்னணி இசையும் தொடரின் ஆன்மாவுக்கு நெருக்கமாக இருக்கின்றன. நெட்ஃப்ளிக்ஸில் வெளிவந்த Sacred Gamesஐப் போல அமேஸானுக்கு ஒரு தொடர் அமையவில்லை என்று சொல்லிவந்தார்கள். ஆனால், இந்த சீரிஸ் Sacred Gamesயும்விட சிறப்பாக வந்திருக்கிறது.
பிற செய்திகள்:
- ஆன்லைன் வழிக் கல்வி, தனியார்மயம், கம்பெனி சட்டம் - நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் என்னென்ன?
- கொரோனா வைரஸ்: ஊரடங்கு எத்தனை நாள் நீட்டிப்பு? என்னென்ன தளர்வுகள்?
- உலக பொருளாதாரத்தில் 8.8 ட்ரில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் - அதிர்ச்சி தரும் தகவல்
- ஹாஜி மஸ்தான்: சுமை தூக்கும் தொழிலாளி நிழல் உலக மன்னன் ஆன கதை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












