டிரம்பின் கிரீன்லாந்து திட்டம் சீனா மற்றும் ரஷ்யாவுக்கு லாபமாக மாறுமா?

பட மூலாதாரம், Getty Images/BBC
- எழுதியவர், பவுலா எட்மோ இடோயிட்டா
- பதவி, பிபிசி உலக சேவை
டென்மார்க்கின் சுயாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை ரஷ்யாவும் சீனாவும் கைப்பற்றுவதைத் தடுக்க, அமெரிக்கா அந்த தீவை கையகப்படுத்த வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.
இந்த மாதம் டொனால்ட் டிரம்ப், "நாம் கிரீன்லாந்தைப் பாதுகாக்க வேண்டும். நாம் அதைச் செய்யவில்லை என்றால், சீனா அல்லது ரஷ்யா அதை கைப்பற்றிவிடும். கிரீன்லாந்தில், அண்டை வீட்டார்கள் போல அவர்கள் இருப்பதை நான் விரும்பவில்லை, அது ஒருபோதும் நடக்காது," என்று கூறியிருந்தார்.
விளாடிமிர் புதினும் ஷி ஜின்பிங்கும் டிரம்பின் கிரீன்லாந்து தொடர்பான லட்சியங்களை (மற்றும் அவற்றை அடைய அவர் விடுக்கும் பலப்பிரயோக அச்சுறுத்தல்கள் மற்றும் வர்த்தக வரி எச்சரிக்கைகளை) வரவேற்கலாம் என்று பலரும் நம்புகின்றனர்.
ஐரோப்பிய கொள்கை மைய ஆய்வாளர் மரியா மார்ட்டிசியூட், "ரஷ்யாவும் சீனாவும் தங்கள் அதிர்ஷ்டத்தை நம்ப முடியாத சூழலில் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்", என்று கூறுகிறார்.
"ஐரோப்பிய நாடுகளும் நேட்டோ (NATO) கூட்டணியும் தங்களின் மிக சக்திவாய்ந்த கூட்டாளியாலேயே (அமெரிக்கா) அச்சுறுத்தப்படுவது சீனா மற்றும் ரஷ்யாவின் நலன்களுக்குச் சாதகமாக உள்ளது. ஏனெனில் இது யுக்ரேனில் ரஷ்யாவின் செயல்பாடுகளுக்கும் தைவான் தொடர்பான சீனாவின் லட்சியங்களுக்கும் சட்டபூர்வத்தன்மையை வழங்கலாம்", என்றும் மரியா கூறுகிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் தனது எக்ஸ் தள பதிவில், "சீனாவும் ரஷ்யாவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நட்பு நாடுகளிடையேயான பிளவு அவர்களுக்கு மட்டுமே நன்மை பயக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் உண்மை சற்று சிக்கலானதாக இருக்கலாம். கிரீன்லாந்து தொடர்பாக ஐரோப்பாவுடனான டிரம்பின் பிரச்னையை ரஷ்யாவும் சீனாவும் உண்மையில் எவ்வாறு பார்க்கின்றன என்பதை பிபிசி நிபுணர் டோனி ஹான் ஆராய்கிறார்.
ரஷ்யாவின் பார்வை என்ன?
செர்ஜி கோரியாஷ்கோ, பிபிசி ரஷ்ய சேவை

பட மூலாதாரம், EPA/Shutterstock
கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதில் டிரம்ப் காட்டும் ஆர்வம் ஒரு அசாதாரண முயற்சி. அவரது தொனியும் வாதமும் கிரைமியாவை இணைத்ததற்காக விளாடிமிர் புதின் முன்வைத்த நியாயங்களை நினைவூட்டுகின்றன.
டிரம்ப் கிரீன்லாந்தை அமெரிக்கா ஒரு காலத்தில் டென்மார்க்கிற்கு வழங்கிய பரிசு என்ற வாதத்தை முன்வைக்கிறார். இது கிரைமியா யுக்ரேனுக்கு 'பரிசாக' வழங்கப்பட்டது என்ற சோவியத் கால கதையை நினைவூட்டுகிறது. "எப்படியாவது அதை மீண்டும் எடுத்துக் கொள்வோம்" என்ற டிரம்பின் வலியுறுத்தல் யுக்ரேன் மீதான புதினின் தொனியை பிரதிபலிக்கிறது.
இந்த விஷயத்தில் ரஷ்யா இதுவரை கவனமாகவே பதில் கொடுத்துள்ளது. புதின் இந்த விவகாரத்தை ஒரு பலகை விளையாட்டுடன் (Board game) ஒப்பிட்டு கிண்டல் செய்துள்ளார். "கிரீன்லாந்தை வாங்க டிரம்பிடம் பணம் இருக்கிறது" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்ட அவர், இதில் ரஷ்யாவிற்கு நேரடித் தொடர்பு இல்லை என்றார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ், கிரைமியா ரஷ்யாவுக்கு எவ்வளவு முக்கியமோ கிரீன்லாந்து அமெரிக்க பாதுகாப்புக்கு அவ்வளவு முக்கியம் என்று கூறியுள்ளார், ஆனால் டிரம்பின் கூற்றை ஆதரிப்பதில் இருந்து அவர் விலகி நிற்கிறார்.
உண்மையில், டிரம்ப் ரஷ்யாவிடமிருந்து எந்தத் தெளிவான ஆதரவையும் பெறவில்லை, இந்த மௌனம் பல விஷயங்களைக் கூறுகிறது.
மேற்கத்திய நட்பு நாடுகளிடையேயான பதற்றம் யுக்ரேனில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பி ரஷ்ய நலன்களுக்கு உதவக்கூடும் என்ற நிலையில், ரஷ்யா ஏன் இதில் இவ்வளவு கவனமாக உள்ளது?
பிரச்னை என்பது, இரான் மற்றும் வெனிசுவேலா போன்ற ரஷ்யாவின் நட்பு நாடுகள் மீதான டிரம்பின் தாக்குதல்களில் மட்டும் இல்லை; அதேசமயம், கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் கோரிக்கைகளை நியாயப்படுத்த ரஷ்யாவை ஒரு அச்சுறுத்தலாக சித்தரிப்பதில் உள்ள அவரது கோபத்திலும் அது இல்லை.
கார்னகி ரஷ்யா யூரேசியா மைய ஆய்வாளர் அலெக்சாண்டர் பாவ்னோவ் கூறுகையில், டிரம்பின் கணிக்க முடியாத தன்மை ரஷ்யாவை மகிழ்விப்பதை விட தொந்தரவு செய்யலாம். அமெரிக்க அதிபரின் "ஆபத்தான போக்குகள்" குறித்து ரஷ்யாவில் பதற்றம் உள்ளது.
புதினைப் போலவே டிரம்பும் தற்போதுள்ள உலக ஒழுங்கின் மீது தாக்குதல் நடத்துகிறார். ரஷ்யாவும் இந்த ஒழுங்கை வெறுக்கிறது, ஆனால் இந்த அமைப்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டால், ரஷ்யாவுக்கு எதிர்க்க என்ன மிச்சம் இருக்கும், எந்த அடிப்படையில் அது அதன் லட்சியங்களை நியாயப்படுத்தும்?
இப்போதைக்கு, களத்தில் நடக்கும் அனைத்து மாற்றங்களையும் ரஷ்யா மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது.
சீனாவின் எதிர்வினை என்ன?
டோனி ஹான், பிபிசி குளோபல் சீனா யூனிட்

பட மூலாதாரம், Getty Images
கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் லட்சியத்திற்குப் பதிலளிக்கும் வகையில், சீன அதிகாரிகள் அமெரிக்காவை ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கொள்கைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளனர். இந்த சாசனம் நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அரசியல் சுதந்திரத்திற்கான மரியாதையை உள்ளடக்கியது.
ஐரோப்பா எதிர்கொள்ளும் மூலோபாய இக்கட்டான நிலை குறித்து சீன ஊடக நிறுவனங்கள் தங்கள் கருத்துகளைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன. சீனாவின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான சிஜிடிஎன் (CGTN) கிரீன்லாந்தை 'கைப்பற்ற' அமெரிக்க அச்சுறுத்தல்கள் நேட்டோ உறுப்பு நாட்டிற்கு அமெரிக்கா செய்யும் "கடுமையான துரோகம்" மற்றும் கூட்டணியின் "கிட்டத்தட்ட சிதைவு" என்று அழைத்துள்ளது.
ஐரோப்பிய கவுன்சில் ஆன் ஃபாரின் ரிலேஷன்ஸ் (ECFR) உறுப்பினர் ஜோஸ் இக்னாசியோ டார்ரெப்லாங்கா பிபிசியின் குளோபல் சீன பிரிவிடம் பேசுகையில், "அட்லாண்டிக் கூட்டணியின் முறிவு அல்லது பலவீனம் சீனாவுக்கு நல்ல செய்தி," என்றார்.
மேலும், "ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுடன் எவ்வளவு அதிகமாக மோதுகின்றனவோ, அவ்வளவு எளிதாக புதினுக்கு (சீனாவின் மூலோபாய கூட்டாளி) தனது இருப்பைத் தக்கவைக்க முடியும். ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராகத் தனியாகத் தற்காத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்பது நிச்சயம். இந்தச் சூழ்நிலையில், பசிபிக் பகுதியில் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவை ஆதரிப்பதில் தயக்கம் காட்டலாம் என்பதும் சாத்தியமாகும்," என அவர் விளக்கினார்.
கிரீன்லாந்து மீதான அமெரிக்க திட்டங்கள் தொடர்பாக, சீனாவின் ஆர்க்டிக் செயல்பாடுகளை அச்சுறுத்தலாக சித்தரிக்கும் அமெரிக்காவின் முயற்சிகளை சீன ஆய்வாளர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். அதன் "துருவ பட்டுப்பாதை" (Polar Silk Road) முயற்சியின் கீழ், சீனா ஆர்க்டிக்கில் அறிவியல், பொருளாதார மற்றும் மூலோபாய வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது.
அக்டோபர் 2025 இல், புதிய ஆர்க்டிக் கப்பல் போக்குவரத்து பாதை வழியாக சீனாவிலிருந்து ஐரோப்பாவிற்குப் பயணிக்கும் முதல் கப்பல் பிரிட்டனின் ஃபெலிக்ஸ்டோ துறைமுகத்தில் வந்து சேர்ந்தது.
சீன நிறுவனங்கள் கிரீன்லாந்தில் ஆர்வம் காட்டியுள்ளன. இருப்பினும், ஹார்வர்டின் பெல்ஃபர் சென்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் இன்டர்நேஷனல் அஃபேர்ஸின் படி, இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் அந்தத் தீவில் காலூன்றுவதில் தோல்வியடைந்துள்ளன.
2018 இல், ஒரு சீன அரசு நிறுவனம் கிரீன்லாந்தின் விமான நிலைய உள்கட்டமைப்புக்கான ஒப்பந்தத்தைப் பெற முயன்றது. ஆனால் அமெரிக்காவின் கவலைகளுக்குப் பிறகு, டேனிஷ் அரசாங்கம் தலையிட்டதால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

கிரீன்லாந்தின் மற்றொரு முக்கியமான மூலோபாயச் சொத்து அதன் கனிம வளம். குவேனெஃபெல்ட் (Kvanefjeld) மற்றும் டான்ப்ரீஸ் (Tanbreez) என்று அழைக்கப்படும் இரண்டு இடங்களில் சர்வதேச அளவிலான கவனம் குவிந்துள்ளது, அங்கு அரிய கனிம வளங்கள் இருப்பு (Rare earth minerals) உள்ளன.
அரிய கனிமங்கள் ஒலிபெருக்கிகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் முதல் மின்சார வாகனங்கள் மற்றும் விமானங்கள் வரை அனைத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. சீன நிறுவனங்கள் ஏற்கனவே அரிய கனிமங்களுக்காக சுரங்கம் தோண்டுதல் மற்றும் அதன் செயலாக்கத்தில் முன்னணியில் உள்ளன.
கிரீன்லாந்தின் கனிம இருப்புகளில் பங்குகளைப் பெற சீன நிறுவனங்கள் முயற்சி எடுத்துள்ளன, ஆனால் விமான நிலைய மேம்பாட்டுத் திட்டங்களைப் போலவே, இவையும் அரசியல் தடைகளில் சிக்கியுள்ளன.
சீனாவின் ஷெங்ஹே ரிசோர்சஸ் நிறுவனம் குவேனெஃபெல்ட் திட்டத்தில் இரண்டாவது பெரிய பங்கைப் பெற்றிருந்தது. ஆனால் கிரீன்லாந்து யுரேனியம் சுரங்கத்தைத் தடை செய்யும் சட்டத்தை இயற்றியது. இதைத் தொடர்ந்து, அந்த நிறுவனம் அதன் உற்பத்தியை நிறுத்திவிட்டது.
இதற்கிடையில், டான்ப்ரீஸ் சுரங்கம் நியூயார்க்கைத் தளமாகக் கொண்ட கிரிட்டிகல் மெட்டல்ஸ் கார்ப் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு சீன நிறுவனத்திற்கும் நிறுவனத்தை விற்க வேண்டாம் என்று முந்தைய உரிமையாளருக்கு அமெரிக்க அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாகச் செய்திகள் உள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












