'அவர்கள் இருந்தால் நல்லது': ராமதாஸை கூட்டணியில் சேர்ப்பது பற்றி திமுக, விசிக கூறுவது என்ன?

திமுக கூட்டணியில் ராமதாஸ் இடம்பெறுவாரா? திமுக, விசிக என்ன சொல்கின்றன?, தமிழக அரசியல் களம்,

பட மூலாதாரம், Ramadoss/FB

படக்குறிப்பு, ராமதாஸ் (கோப்புப் படம்)

"திருமாவளவனுக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. ராமதாஸ் பெறாத பிள்ளையாக அவர் இருக்கிறார். வன்னியர்களையும் பட்டியல் சாதியினரையும் இரு தண்டவாளங்களாக ராமதாஸ் பார்க்கிறார்."

பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ அருள் கூறியுள்ள இந்த வார்த்தைகள் அரசியல் ரீதியாகப் பேசுபொருளாக மாறியுள்ளன.

அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பா.ம.க அங்கம் வகிக்கும் நிலையில், தி.மு.க கூட்டணியை நோக்கி ராமதாஸ் நகர்வதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

'கூட்டணியில் ராமதாஸ் இருப்பது நல்லது' என்று கூட்டணிக் கட்சிகளுக்கு எடுத்துக் கூறி சேர்த்துக் கொள்வோம் என்று தி.மு.கவின் செய்தி தொடர்புத்துறை தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

'பா.ம.கவை சேர்க்கும் முடிவை தி.மு.க தலைமை அறிவித்தால் எங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிப்போம்" என வி.சி.க கூறுகிறது.

தி.மு.க கூட்டணிக்குள் பா.ம.க இணைய வாய்ப்புள்ளதா? இதனால் வட மாவட்டங்களில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும்?

தி.மு.க.வுடன் பா.ம.க கூட்டணியா?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. அன்புமணி தலைமையிலான பா.ம.க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்கனவே இணைந்துவிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை ஏற்கவே முடியாது என்று கூறிவந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் அந்த கூட்டணியில் ஓர் அங்கமாகிவிட்டார்.

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் இடம் பெறாத, புதிய கட்சியாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

ராமதாஸ் தலைமையிலான பா.ம.கவும் தே.மு.தி.கவும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தங்களுடைய கூட்டணி நிலைப்பாடு தொடர்பாக இன்னும் அறிவிக்கவில்லை. "தி.மு.க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டும்" என பா.ம.க நிறுவனர் ராமதாஸின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருவதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது.

ஜனவரி 21-ஆம் தேதி தைலாபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தி.மு.கவுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பது குறித்து ஜி.கே.மணி, ஸ்ரீகாந்தி ஆகியோர் ராமதாஸிடம் வலியுறுத்தியதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியானது.

"பா.ம.க அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டோம்" என்பது வி.சி.கவின் நிலைப்பாடாக உள்ளதால், அவரைச் சமாதானப்படுத்துவது தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.

திமுக கூட்டணியில் ராமதாஸ் இடம்பெறுவாரா? திமுக, விசிக என்ன சொல்கின்றன?, தமிழக அரசியல் களம்,

பட மூலாதாரம், Arul MLA/FB

படக்குறிப்பு, ராமதாஸ் பெறாத பிள்ளையாக திருமாவளவன் இருப்பதாக பா.ம.க. எம்.எல்.ஏ அருள் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்

'திருமாவுடன் எந்தப் பிரச்னையும் இல்லை'

இதை உறுதிப்படுத்தும் வகையில் நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க எம்.எல்.ஏ அருள், "திருமாவளவனுக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. ராமதாஸ் பெறாத பிள்ளையாக அவர் இருக்கிறார்" எனக் கூறினார்.

தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் ஏழு அம்பேத்கர் சிலைகளை ராமதாஸ் திறந்து வைத்துள்ளதாகக் கூறிய அருள், "அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவிகித இட ஒதுக்கீட்டை ராமதாஸ் பெற்றுத் தந்தார். வன்னியர்களையும் தலித் மக்களையும் இரு தண்டவாளங்களாக அவர் பார்க்கிறார்" எனத் தெரிவித்தார்.

"எங்களுக்கு யாரும் எதிரிகள் இல்லை. எதிரியாக இருந்தால்தான் சமாதானப்படுத்த வேண்டும். எங்கள் அண்ணனாக திருமாவளவன் இருக்கிறார். அவர் எங்களுக்கு எப்படி எதிரியாக இருக்க முடியும்?" எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

கூட்டணி குறித்துப் பதிலளித்துப் பேசிய எம்.எல்.ஏ அருள், "அரசியலில் எதுவும் நடக்கும். மருத்துவர் மீது எந்த வழக்கும் இல்லை. யாருடைய மிரட்டலுக்கும் எந்தக் காலத்திலும் அவர் பயப்பட மாட்டார். மக்கள் நலனை அடிப்படையாக வைத்து முடிவை எடுப்பார். விரைவில் நல்லது நடக்கும்" எனப் பதில் அளித்தார்.

கடந்த 2023ஆம் ஆண்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "பா.ஜ.க, பா.ம.க அங்கம் வகிக்கும் கூட்டணியில் ஒருபோதும் இடம்பெற மாட்டோம். அரசியல் ரீதியாக எவ்வளவு பின்னடைவு ஏற்பட்டாலும் அவர்களுடன் இருக்க மாட்டோம்" என அறிவித்திருந்தார்.

திமுக கூட்டணியில் ராமதாஸ் இடம்பெறுவாரா? திமுக, விசிக என்ன சொல்கின்றன?, தமிழக அரசியல் களம்,

பட மூலாதாரம், Ravikumar/FB

படக்குறிப்பு, கூட்டணியில் பா.ம.க.வை சேர்த்துக் கொள்வது குறித்து திமுக முடிவு செய்த பின்னரே தங்களது பிரச்னைகள் குறித்துப் பேச முடியும் என்கிறார் வி.சி.க. எம்.பி ரவிக்குமார்

'முதலில் தி.மு.க முடிவெடுக்கட்டும்' - வி.சி.க

பா.ம.க எம்.எல்.ஏ அருள் அளித்த பேட்டி குறித்து, விழுப்புரம் தொகுதி வி.சி.க எம்.பியும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான ரவிக்குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது.

"அருள் கூறியுள்ள கருத்துகள் உண்மையானவை. தனிப்பட்ட முறையில் ராமதாஸ் மீது எங்களுக்கு அன்பு உள்ளது. அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் உடல்நலமின்றி இருந்தபோது தொலைபேசியில் திருமாவளவன் நலம் விசாரித்தார்" எனக் கூறுகிறார்.

"மருத்துவமனைக்கு நேரில் சந்திக்க வருவதாக ராமதாஸிடம் திருமாவளவன் கூறினார். ஆனால், அன்றைய நாளில் சிகிச்சை முடிந்து அவர் டிஸ்சார்ஜ் ஆனதால் சந்திக்க முடியவில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"ஆனால், இவை வேறு விஷயம்" எனக் கூறும் ரவிக்குமார் எம்.பி, "கூட்டணிக்கு தி.மு.க தலைமை வகிக்கிறது. ஒரு கட்சியை சேர்த்துக் கொள்வது குறித்து முடிவு செய்ய வேண்டியது தி.மு.க.தான்" என்கிறார்.

"கூட்டணியில் ராமதாஸை சேர்த்துக் கொள்வது குறித்து தி.மு.க முடிவு செய்த பின்னரே எங்களுக்கான பிரச்னைகள் பற்றிப் பேச முடியும்" என்கிறார் அவர்.

தொடர்ந்து பேசிய ரவிக்குமார் எம்.பி, "தன்னுடைய முடிவை தி.மு.க தெரிவிப்பதற்கு முன்னதாகவே கூட்டணியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என நாங்களாகச் சென்று தடுக்க முடியாது. முதலில் தி.மு.க முடிவெடுக்கட்டும். பிறகு எங்கள் முடிவைத் தெரிவிப்போம்" எனக் கூறினார்.

திமுக கூட்டணியில் ராமதாஸ் இடம்பெறுவாரா? திமுக, விசிக என்ன சொல்கின்றன?, தமிழக அரசியல் களம்,

பட மூலாதாரம், FB

படக்குறிப்பு, ராமதாஸ், 2026 சட்டமன்றத் தேர்தலில் பிரதான கூட்டணிகளில் இருந்து தனித்துவிடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன்

தி.மு.க கூட்டணியில் பா.ம.க இணையுமா?

ஆனால், தி.மு.க கூட்டணிக்கு ராமதாஸ் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் மாலன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வி.சி.கவை தவிர்த்துவிட்டு வேறு முடிவை தி.மு.க எடுப்பதற்கு வாய்ப்பில்லை. பா.ம.க அளவுக்கு வி.சி.க பேரம் பேசுவதில்லை" என்கிறார் அவர்.

2019 மக்களவைத் தேர்தலில் வி.சி.கவுக்கு சிதம்பரம், விழுப்புரம் என இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் சிதம்பரம் தொகுதியில் தனிச் சின்னத்திலும் விழுப்புரம் தொகுதியில் உதய சூரியன் சின்னத்திலும் அக்கட்சி போட்டியிட்டது.

இதைக் குறிப்பிட்டுப் பேசும் மாலன், "கூட்டணியில் சமரசம் செய்து கொள்வதற்கு வி.சி.க தயாராக உள்ளது. ஆகவே, அவர்களைத் தவிர்ப்பதற்கு தி.மு.க விரும்பாது. அவ்வாறு தவிர்த்தால் பட்டியல் சமூக மக்களின் வாக்குகள் மடைமாற வாய்ப்புகள் உள்ளன" என்கிறார்.

பா.ம.க இரு அணிகளாகப் பிரிந்துள்ளது குறித்துப் பேசும் மாலன், "பா.ம.க உடைந்துபோன கட்சியாக உள்ளது. வன்னியர் சமூக மக்களில் பெரும்பகுதியினர் எந்த அணியின் பக்கம் உள்ளனர் என்பது முக்கியமானது. அது தற்போது வரை தெரியாத ஒன்றாக உள்ளது" என விவரித்தார்.

"தொண்டர்கள் தனது பக்கம் உள்ளதாக ராமதாஸ் கூறுகிறார். இது அ.தி.மு.க பிளவுபட்டபோது ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்தைப் போன்று உள்ளது."

திமுக கூட்டணியில் ராமதாஸ் இடம்பெறுவாரா? திமுக, விசிக என்ன சொல்கின்றன?, தமிழக அரசியல் களம்,

பட மூலாதாரம், X

படக்குறிப்பு, தி.மு.க கூட்டணியில் பா.ம.க வருவதாக இருந்தால் அனைத்துக் கட்சிகளிடமும் இதுகுறித்துப் பேசுவோம் என்கிறார் தி.மு.க செய்தித் தொடர்புத் துறை தலைவரும் முன்னாள் எம்.பியுமான டி.கே.எஸ்.இளங்கோவன்

ராமதாஸ் 2026 சட்டமன்றத் தேர்தலில் பிரதான கூட்டணிகளில் இருந்து தனித்துவிடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறும் மாலன், அரசியல் ரீதியாக பா.ம.க செய்த தவறுகளே இதற்குக் காரணமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

இதே கருத்தை முன்வைக்கும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, "அ.தி.மு.க கூட்டணிக்கு அன்புமணி சென்றதால் தி.மு.க கூட்டணி தங்களுக்கு ராமதாஸ் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை எடுக்கவே வாய்ப்புகள் உள்ளன. தி.மு.க அணியில் திருமாவளவன் முக்கிய நபராக இருப்பதுதான் காரணம்" என்கிறார்.

ராமதாஸ், அன்புமணி ஆகியோர் இணைந்து செயல்பட்ட காலத்தில் பா.ம.கவை தி.மு.க கூட்டணி தோற்கடித்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

'அவர்கள் இருந்தால் நல்லது' - டி.கே.எஸ்.இளங்கோவன்

இதுகுறித்து தி.மு.க செய்தித் தொடர்புத் துறை தலைவரும் முன்னாள் எம்.பியுமான டி.கே.எஸ்.இளங்கோவனிடம் பிபிசி தமிழ் பேசியது.

"தி.மு.க கூட்டணியில் பா.ம.க வருவதாக இருந்தால் அனைத்துக் கட்சிகளிடமும் இதுகுறித்துப் பேசுவோம். அனைவரின் ஒப்புதலுடனும் ராமதாஸை ஏற்றுக் கொள்வோம்" என்றார் அவர்.

அதோடு, "கூட்டணியில் ஒருவரை மீறி எதையும் செய்ய மாட்டோம். அதேநேரம், அரசியல் ரீதியான காரணங்களை எடுத்துக் கூறுவோம். 'அவர்கள் இருந்தால் நல்லது' எனக் கூறி சேர்த்துக் கொள்வோம். அந்த ஒற்றுமையே இந்தக் கூட்டணியை மேலும் வலுவாக்கும்" எனத் தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் ராமதாஸ் இடம்பெறுவாரா? திமுக, விசிக என்ன சொல்கின்றன?, தமிழக அரசியல் களம்,

பட மூலாதாரம், FB

படக்குறிப்பு, கோப்புப் படம்

வட மாவட்ட மக்களின் ஆதரவு கிடைக்குமா?

"தி.மு.க கூட்டணியில் பா.ம.க, வி.சி.க அங்கம் வகித்தால் வட மாவட்ட வாக்கு வங்கியில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா?" என, மூத்த பத்திரிகையாளர் மாலனிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"பா.ஜ.க, பா.ம.க இடம்பெறும் கூட்டணியில் அங்கம் வகிக்க மாட்டோம் எனத் தொடர்ச்சியாக திருமாவளவன் கூறி வருகிறார். வட மாவட்டங்களில் அடிமட்டத்தில் வன்னியர் சமூகத்திற்கும் பட்டியல் சமூகத்திற்கும் இடையே பல்வேறு மோதல்கள் உள்ளன" என்கிறார் அவர்.

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குத் தொண்டர்கள் பலம் இருக்கலாம். ஆனால், வி.சி.கவுக்கு வாக்கு செலுத்தும் பட்டியல் சாதி மக்களின் நிலைப்பாட்டில் மாறுதல் வரலாம். இது தி.மு.கவுக்கு சரிவைக் கொடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன" எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதை மறுத்துப் பேசும் தி.மு.க செய்தித் தொடர்புத் துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், "இரு கட்சிகளின் தலைவர்களும் அரசியல் காரணங்களுக்காக ஒத்துப் போவதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். இதனால் எந்தப் பாதிப்பும் வரப் போவதில்லை" என்கிறார்.

"பா.ம.கவில் ராமதாஸ் - அன்புமணி இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது. யார் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளார்களோ அவர்களை ஆதரிப்பார்கள். பா.ம.க, வி.சி.க ஆகிய கட்சிகளின் தலைவர்கள் அமர்ந்து பேசும்போது, அது தேர்தலில் நல்ல முடிவுக்கு இட்டுச் செல்லும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

திமுக கூட்டணியில் ராமதாஸ் இடம்பெறுவாரா? திமுக, விசிக என்ன சொல்கின்றன?, தமிழக அரசியல் களம்,
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அன்புமணியின் குற்றச்சாட்டு என்னவாகும்?

கடந்த ஜூன் மாதம் பா.ம.க நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அன்புமணி, "பா.ம.கவில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தி.மு.க.தான் காரணம்" எனக் குற்றம் சுமத்தியிருந்தார்.

ஆனால், "இது கடைந்தெடுத்த பொய்" என செய்தியாளர்களிடம் ராமதாஸ் பதில் அளித்திருந்தார்.

இதைக் குறிப்பிட்டுப் பேசும் ரவீந்திரன் துரைசாமி, "தி.மு.க கூட்டணிக்கு ராமதாஸ் சென்றால், பிளவுக்குக் காரணம் தி.மு.க என அன்புமணி கூறி வரும் குற்றச்சாட்டுகள் உண்மையாகிவிடும். இதையே தேர்தல் நேரத்தில் பிரசாரமாக அன்புமணி முன்வைக்கவும் வாய்ப்புகள் உள்ளன" என்கிறார்.

ஆனால், "இது எடுபடப் போவதில்லை" எனக் கூறும் தி.மு.க செய்தித் தொடர்புத் துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், "அவர்கள் முன்வைக்கும் கருத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள். அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியால் ஏற்படப் போகும் பாதிப்புகளை மக்கள் அறிவார்கள். அந்த வகையில், எங்கள் கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு