இரான் நன்றி கூறும் அளவுக்கு இந்தியா செய்தது என்ன?

2016 ஆம் ஆண்டு இரானுக்கு பயணம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி தெஹ்ரானில் சந்தித்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2016 ஆம் ஆண்டு இரானுக்கு பயணம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி தெஹ்ரானில் சந்தித்தார்.

இரானில் சமீபத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களை அந்நாட்டு அரசு ஒடுக்கியதற்கு எதிராக, வெள்ளிக்கிழமை அன்று ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது.

இரானிய அரசால் மேற்கொள்ளப்படும் "கொடூரமான அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு" முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 47 உறுப்பினர் நாடுகள் அடங்கிய இந்த கவுன்சிலில் இத்தீர்மானம் நிறைவேறியது.

இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 25 நாடுகள் வாக்களித்தன, 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்தியா, சீனா, பாகிஸ்தான், இந்தோனீசியா, இராக், வியட்நாம் மற்றும் கியூபா ஆகிய நாடுகள் இத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.

இத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்ததற்காக இந்தியாவுக்கான இரானின் தூதர் முஹம்மது ஃபதாலி இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சாபஹார் துறைமுகம் மீதான தடையை மீண்டும் அமல்படுத்த அமெரிக்கா எண்ணியுள்ள நிலையில், இரானுக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா எதிராக வாக்களித்துள்ளது.

முஹம்மது ஃபதாலி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இரானின் இஸ்லாமிய குடியரசுக்கு கொள்கை ரீதியான, உறுதியான ஆதரவை வழங்கியதற்காக நான் என்னுடைய உளபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நியாயமற்ற மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்ததும் இதில் அடங்கும். இந்த நிலைப்பாடு நீதி, பன்மைத்துவம் மற்றும் தேசிய இறையாண்மை ஆகியவற்றின் மீது இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது." என பதிவிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் அதிகரித்துவரும் பணவீக்கத்திற்கு எதிராக டிசம்பர் 28ம் தேதி இரானில் போராட்டங்கள் தொடங்கின. ஆனால், பின்னர் அப்போராட்டங்கள் மதரீதியான ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டக்காரர்கள் திரண்டு போராடினர்.

வெள்ளிக்கிழமை ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "அமைதியாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான வன்முறையான ஒடுக்குமுறைகள் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு வழிவகுத்துள்ளதாக" கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "மனித உரிமைகள் தொடர்பான தங்களின் கடமைகளை மதித்து, பாதுகாத்து அவற்றை நிறைவேற்ற வேண்டும்" என இரான் அரசையும் அத்தீர்மானம் வலியுறுத்துகிறது.

மேலும், சட்டத்திற்கு புறம்பான கொலைகள், காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் தன்னிச்சையான கைதுகள் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வர இரான் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அத்தீர்மானம் வலியுறுத்துகிறது.

இரானை இந்தியா ஆதரிப்பது ஏன்?

கடந்த ஆண்டு இறுதியில் இரானில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்தன, ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த ஆண்டு இறுதியில் இரானில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்தன, ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்பட்டது.

இந்தியாவின் நிலைப்பாடு குறித்து வெளியுறவு முன்னாள் செயலாளர் நிரூபமா ராவ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இரானுக்கு எதிரான தீர்மானத்தில் தான் எதற்காக எதிராக வாக்களித்தோம் என்பதை இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட, அரசியல் உள்நோக்கம் கொண்ட மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலை ஊக்குவிக்க வாய்ப்பில்லாத தீர்மானம் என தெரிவித்துள்ளது" என பதிவிட்டுள்ளார்.

"குறிப்பிட்ட நாடு சார்ந்த தீர்மானங்கள் பெரும்பாலும் மனித உரிமை விளைவுகளை மேம்படுத்துவதற்கு பதிலாக நிலைப்பாடுகளை கடினப்படுத்துகின்றன என்றும் பொது கண்டனத்தை விட உரையாடல், தேசிய செயல்முறைகள் மற்றும் திறன் மேம்பாட்டுக்கு அழைப்பு விடுத்தன என்றும் புது தில்லி வாதிட்டது."

"இரானில் துன்புறுத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த செய்திகளை இந்தியா ஆதரிக்கவும் இல்லை, அதற்கு உடன்படவும் இல்லை. வாக்கெடுப்பு செயல்முறை மற்றும் கொள்கையின் அடிப்படையில் அமைந்தது: இறையாண்மை மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நாட்டின் பெயரை அவமதிக்கும் வழிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் அது அமைந்தது," என நிரூபமா ராவ் பதிவிட்டுள்ளார்.

"சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடமிருந்து இந்தியாவின் வாதம் வேறுபடுகிறது. சீனா அமைப்பு ரீதியான மட்டத்தில் வெளிப்புற ஆய்வை நிராகரிக்கிறது. பாகிஸ்தான் பெரும்பாலும் சீனா மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புடன் (OIC) மூலோபாய ரீதியாக இணைந்து செயல்படுகிறது. இந்தியாவின் அணுகுமுறை மிகவும் நடைமுறை ரீதியானது, நாடு சார்ந்த தீர்மானங்கள் குறித்த நீண்டகால சந்தேகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது."

"இந்தியாவின் நிலைப்பாடு உத்தி சார்ந்ததும் கூட: வேறுபட்ட அரசியல் சூழலில், காஷ்மீர் அல்லது உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்னைகளில் இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய வழிமுறைகளை சட்டப்பூர்வமாக்குவது குறித்த எச்சரிக்கை. ஒட்டுமொத்தமாக, இந்த வாக்கெடுப்பு இரான் மீதான இந்தியாவின் பரந்த கொள்கையுடன் ஒத்துப்போகிறது: அதாவது அந்நாட்டுடன் உறவுகளை நிர்வகித்தல், தார்மீக தோரணையை தவிர்ப்பது மற்றும் பெரியளவிலான பொது கண்டனத்தை விட அமைதியான ராஜீயத்திற்கு முன்னுரிமை அளித்தல்."

தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது என்ன?

ஐநா மனித உரிமைகள் கவுன்சில்

பட மூலாதாரம், AFP via Getty Images

இந்த தீர்மானத்தை அறிமுகம் செய்துவைத்து பேசிய ஐஸ்லாந்து தூதர் ஐனா குன்னர்சன், "குற்றங்களுக்கு பயம் மற்றும் முறையான தண்டனையின்மை நிறைந்த சூழலை பொறுத்துக்கொள்ள முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர்பிழைத்தவர்கள் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தேவை." என தெரிவித்தார்.

நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தின்படி, இரான் தொடர்பான சிறப்பு அறிக்கையாளரின் (Special Rapporteur) பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் திட்டம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இரானில் குர்திஷ் இன பெண்ணான மாசா அமினி போலீஸ் காவலில் உயிரிழந்ததையடுத்து நடைபெற்ற போராட்டங்கள் ஒடுக்கப்பட்டபோது அதற்கு எதிர்வினையாக இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டது.

மேலும், சமீபத்திய போராட்டங்கள் தொடர்பாக நடைபெற்ற "மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் கொடுமைகள் மற்றும் குற்றச்சாட்டுகள்" குறித்து விசாரிக்க விசாரணை குழுவுக்கு இத்தீர்மானத்தின்படி அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன், ஜெர்மனி, ஐஸ்லாந்து, மால்டோவா மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகியவற்றின் கோரிக்கைக்கு ஏற்ப நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் அவசர கூட்டத்தின் முடிவில் இத்தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த நாடுகளை இரான் கடுமையாக விமர்சித்தது.

ஐநா மனித உரிமைகள் தலைவர் கூறியது என்ன?

'அடக்குமுறை' எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது என்று ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டுர்க் கூறினார்.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, 'அடக்குமுறை' எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது என்று ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டுர்க் கூறினார்.

ஐநா மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் வோல்கர் டுர்க் பேசுகையில், போராட்டக்காரர்களை நோக்கி பாதுகாப்புப் படையினர் "நேரடியாக சுட்டதாக" தெரிவித்தார். மேலும், குழந்தைகள் உட்பட "ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும்" அவர் கூறினார்.

"இரானிய அதிகார்க்ள் மறுபரிசீலனை செய்யவும், பின்வாங்கவும், அவசர சோதனைகள் மற்றும் அளவுக்கதிகமான மரண தண்டனைகள் உட்பட கொடூரமான அடக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டு வரவும் நான் கேட்டுக்கொள்கிறேன்," என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "தன்னிச்சையாக காவலில் வைக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் மரண தண்டனைக்கு முழுத் தடை விதிக்க வேண்டும் என்றும் நான் வலியுறுத்துகிறேன்." என தெரிவித்தார்.

"கடந்த வாரங்களில் நடைபெற்ற பயங்கரமான நிகழ்வுகளுக்கு பொறுப்பேற்கப்பட வேண்டும். தங்கள் மனித உரிமைகளைப் பயன்படுத்துவதற்கும் நியாயமான கோரிக்கைகளை வைப்பதற்கும் காயமடைந்தவர்கள் அல்லது தடுப்புக் காவலில் உள்ளவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும்," என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதியான மிச்செல் செர்வொனே டி'உர்சோ கூறினார்.

போராட்டங்கள் இப்போது பெருமளவில் தணிந்துவிட்டன, ஆனால் "இரானின் தெருக்களில் கொலைகள் குறைந்திருக்கலாம், ஆனால் மிருகத்தனம் தொடர்கிறது" என்று ஐநா மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் வோல்கர் டுர்க் எச்சரித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு எந்தவிதமான தளர்வும் அளிக்கப்படாது என்று இரானின் நீதித்துறைத் தலைவர் இந்த வாரம் கூறியது "பயமுறுத்தும் நிகழ்வு" என்று அவர் விவரித்தார்.

மேலும், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள போராட்டங்களுடன் தொடர்புடைய நபர்கள் தூக்கிலிடப்படுவார்களா என்பது குறித்து இரானிய அதிகாரிகள் முரணான தகவல்களை வழங்குவதாகவும் அவர் மிகுந்த கவலை தெரிவித்தார்.

மேலும், "உலகளவில் மிக அதிகமானவர்களை தூக்கிலிடும் நாடுகளுள் இரானும் உள்ளது," என அவர் கூறினார். கடந்தாண்டு அந்நாட்டில் குறைந்தது 1,500 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இரானின் விமர்சனம்

இரான் வெளியுறவு அமைச்சர் செயெத் அப்பாஸ் அராக்சி

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இரான் வெளியுறவு அமைச்சர் செயெத் அப்பாஸ் அராக்சி

இரானிய தூதர் அலி பஹ்ரைனி ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் அவசர கூட்டத்தை "போலியானது" என்றும் "இரானுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கான ஆயுதம்" என்றும் தெரிவித்தார்.

இரானின் பிரதிநிதியான சோமயே கரிம்டூஸ்ட் அத்தீர்மானம், "முற்றிலும் சமமற்றது, பாரபட்சமானது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது" என தெரிவித்தார்.

இரானுக்கு ஆதரவாக சில நாடுகள் பேசியுள்ளன, அவை ஐநா மனித உரிமைகள் கவுன்சில் "அரசியல்மயமாகிவருவதாகவும்" "இரட்டை நிலைப்பாடுடன்" செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளன.

கியூபாவின் தூதர் ரொடோல்ஃபோ பென்க்டெஸ் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டம் "மிகவும் கண்டிக்கத்தக்க கபட நாடகம்" என்று கூறியுள்ளார். அதேவேளையில் சீனாவின் தூதர் ஜியா கைட் "எந்தவொரு நாட்டின் உள்விவகாரங்களிலும் மனித உரிமைகள் எனும் பெயரில் தலையிடுவதை பெய்ஜிங் எதிர்ப்பதாக" தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் வோல்கர் டுர்க்கின் அலுவலகம் மற்றும் இரானில் கொல்லப்பட்டவர்கள் குறித்த தரவுகளை சேகரித்துவரும் அரசு-சாரா அமைப்புகள், இரண்டு வார இணைய முடக்கத்தால் தங்களின் பணிகள் தடைபட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

போராட்டங்கள் தொடர்பாக வெளியான முதல் அதிகாரபூர்வ எண்ணிக்கையின்படி, இரானியஅதிகாரிகள் கடந்த புதன்கிழமை கூறுகையில், டிசம்பர் மாத இறுதியில் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியதிலிருந்து 3,117 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆனால், அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்பட்டு வரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் செய்தி முகமை (Human Rights Activists News Agency) கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டதன்படி, 5,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளது, மேலும் உண்மையான எண்ணிக்கையைவிட இது மிகவும் குறைவானதாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

நார்வேயை தளமாக கொண்டு செயல்பட்டுவரும் இரான் மனித உரிமைகள் (Iran Human Rights) அமைப்பு, இறுதி எண்ணிக்கை 25,000-ஐ தாண்டக்கூடும் என எச்சரித்துள்ளது.

இதனிடையே, துருக்கியின் வெளியுறவு அமைச்சர் ஹகான் ஃபிடான் கூறுகையில், இரானை தாக்குவதற்கான வாய்ப்புகளை இஸ்ரேல் இன்னும் தேடிக்கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், அது நிகழ்ந்தால் அப்பிராந்தியத்தில் மேலும் நிலையின்மை ஏற்பட வழிவகுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

"அவர்கள் (இஸ்ரேலிய அதிகாரிகள்) வேறு வழியை நாடுவார்கள் என நான் நம்புகிறேன். ஆனால், இரானை தாக்குவதற்கான வாய்ப்பை இஸ்ரேல் தேடிவருகிறது என்பதுதான் யதார்த்தம்," என அவர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியுள்ளதாக பிபிசி பாரசீக சேவை தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு