வங்கதேசத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு - டி20 உலகக்கோப்பையை புறக்கணிக்குமா?

பட மூலாதாரம், Getty Images
அடுத்த மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவில் விளையாட வங்கதேசம் மறுத்ததைத் தொடர்ந்து, அந்த அணிக்குப் பதிலாக ஸ்காட்லாந்து பங்கேற்கும் என்பதை ஐசிசி சனிக்கிழமை (ஜனவரி 24) உறுதிப்படுத்தியது .
வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி ஐசிசி டி20 உலகக் கோப்பையில் விளையாடும் என்று ஐசிசி தனது சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளது. இதன் மூலம், வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்தை ஐசிசி தனது போட்டி அட்டவணையில் சேர்த்துள்ளது.
மறுபுறம், வங்கதேசம் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து அரசே முடிவெடுக்கும் என்றும் கூறியுள்ளது.
இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு, இந்தியாவில் இருந்து தங்கள் போட்டிகளை மாற்றியமைக்க வேண்டும் என்று வங்கதேசம் ஐசிசியிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்தியாவுக்குப் பதிலாக, இலங்கையில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கேட்டிருந்தனர்.
டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடைபெறுகின்றன.
இந்த வார தொடக்கத்தில், வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்திருந்தது. பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த உறுதியான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று ஐசிசி கூறியது. இதன்பிறகு, வங்கதேச கிரிக்கெட் வாரியம் தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியது.
வங்கதேசத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆதரவு
பிபிசி உருது சேவையின்படி, ஐசிசி அறிவிப்புக்கு சிறிது நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மோசின் நக்வி, இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் வங்கதேசத்துக்கு ஆதரவாக நிற்கிறது என்றும், ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் அணியை அனுப்பலாமா வேண்டாமா என்பதை அரசாங்கம் தீர்மானிக்கும் என்றும் கூறியிருந்தார்.
சனிக்கிழமை லாகூரில் உள்ள கடாஃபி ஸ்டேடியத்தில் ஊடகங்களிடம் பேசிய அவர், ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், "பாகிஸ்தான் அரசு எங்களுக்கு என்ன உத்தரவிடுகிறதோ, அதையே நாங்கள் செய்வோம். பிரதமர் தற்போது பாகிஸ்தானில் இல்லை, அவர் திரும்பிய பிறகுதான் இறுதி முடிவைப் பற்றி எங்களால் சொல்ல முடியும்" என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
"நாங்கள் ஐசிசியைக் காட்டிலும் பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில்தான் அதிகமாக இருக்கிறோம். அதனால் அரசு சொல்வதையே நாங்கள் செய்ய வேண்டியிருக்கிறது" என்றும் அவர் தெரிவித்தார்.
மோசின் நக்வி, வங்கதேசம் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளதாகத் தான் உணர்வதாக கூறினார். "ஒரு நாடு விரும்பும் போது அதற்கேற்ற முடிவு எடுக்கலாம், மற்றொரு நாடு முற்றிலும் வேறொரு முடிவு எடுக்க வேண்டும் என்று இரட்டை நிலைப்பாடு இருக்க முடியாது என்று ஐசிசி நிர்வாகக் குழு கூட்டத்திலேயே நான் இதைச் சொன்னேன்" என்றார்.
வங்கதேசம் உலகக் கோப்பையில் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். "அவர்கள் ஒரு முக்கிய பங்குதாரர்கள்; இவ்வளவு அநியாயமாக நடத்தப்படக் கூடாது" என்றும் மோசின் நக்வி கூறினார்.
பாகிஸ்தான் - இந்தியா போட்டிகளுக்கு ஹைப்ரிட் முறையை (Hybrid system) பயன்படுத்த முடிந்தால், வங்கதேசத்திற்கும் ஏன் அதையே பயன்படுத்தக் கூடாது என்று அவர் கேள்வியெழுப்பினார்.
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை அவர் குறிப்பிட்டார். அப்போது, பாகிஸ்தானில் விளையாட இந்தியா மறுத்ததால், இந்தியாவின் அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப்பட்டன.
யாரும் யாருக்கும் கட்டளையிட முடியாது என்று மோசின் நக்வி தெரிவித்தார். "பாகிஸ்தானுக்கு தனது சொந்த நிலைப்பாடு உள்ளது; அதிலேயே நாங்கள் உறுதியாக இருப்போம்" என்று அவர் கூறினார்.
ஒரு கேள்விக்குப் பதிலளித்தபோது, புறக்கணிப்பு செய்யும் முடிவு எடுக்கப்பட்டால், அதற்காக எங்களிடம் பல்வேறு மாற்றுத் திட்டங்கள் உள்ளன என்றும் அவர் கூறினார்.
ஸ்காட்லாந்துக்கு அவகாசம் குறைவு

பட மூலாதாரம், Getty Images
ஐசிசி நிர்வாகக் குழுவிற்கு நெருக்கமான ஒருவரின் கூற்றுப்படி, இந்தியாவில் விளையாடுவது தொடர்பாக உறுதிப்படுத்துவதற்காக வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு 24 மணி நேர அவகாசம் வழங்கப்பட்டது.
அந்த காலக்கெடு முடிவடைந்ததையடுத்து, டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க ஸ்காட்லாந்தை அழைக்கும் மாற்றுத் திட்டத்தை முன்னெடுக்க ஐசிசி அதிகாரிகள் முடிவு செய்தனர்.
கடந்த சில வாரங்களாக ஏற்பட்டுவரும் முன்னேற்றங்களை கிரிக்கெட் ஸ்காட்லாந்து அதிகாரிகள் நெருக்கமாக கவனித்து வந்ததாகவும், இதற்கான தயாரிப்பாக சில நடவடிக்கைகளை அவர்கள் ஏற்கனவே எடுத்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.
மார்ச் மாதத்தில் நமீபியா மற்றும் ஓமன் அணிகளுடனான சர்வதேச முத்தரப்பு ஒருநாள் தொடரை முன்னிட்டு, ஸ்காட்லாந்து வீரர்கள் ஏற்கனவே மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளனர்.
ஆனால், ஸ்காட்லாந்து வீரர்களுக்கு இந்தியாவுக்குள் நுழைய விசா பெறுவது கடினமாக இருக்கலாம். ஏனெனில், அவர்களின் முதல் போட்டியே பிப்ரவரி 7-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரானது. அதுவே இந்தத் தொடரில் முதல் நாள் நடக்கும் போட்டியாகும்.
ஸ்காட்லாந்து, பிப்ரவரி 14-ஆம் தேதி கொல்கத்தாவில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும். அவர்கள் இருக்கும் பிரிவில் இத்தாலி மற்றும் நேபாளம் ஆகிய அணிகளும் உள்ளன.
முன்பு நடைபெற்ற ஐரோப்பிய தகுதிச்சுற்றில் நான்காவது இடம் பெற்றதால், 2026 டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதற்கு ஸ்காட்லாந்து தவறியது. அந்தப் போட்டிகளில் ஐரோப்பாவுக்காக ஒதுக்கப்பட்ட இரண்டு இடங்களை நெதர்லாந்து மற்றும் இத்தாலி அணிகள் பிடித்தன.
2009-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில், அரசியல் காரணங்களுக்காக ஜிம்பாப்வே அணி விலகியது. அதையடுத்து, அதற்கு முன் நடைபெற்ற உலகளாவிய தகுதிச்சுற்றுப் போட்டியில் அடுத்த சிறந்த இடத்தைப் பெற்ற அணியாக ஸ்காட்லாந்து அந்தத் தொடரில் இடம் பெற்றது.
2024 முதல் டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள் பங்கேற்கின்றன.
ஐசிசி அறிக்கை

பட மூலாதாரம், Getty Images
ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் எழுப்பிய பிரச்னைகளைத் தீர்க்க மேற்கொள்ளப்பட்ட நீண்ட செயல்முறைக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
வங்கதேச கிரிக்கெட் வாரியம் முன்வைத்த கவலைகளை ஐசிசி விரிவாகப் பரிசீலித்து, உள்ளக மற்றும் வெளிப்புற நிபுணர்களை கொண்டு ஒரு சுயாதீன பாதுகாப்பு மதிப்பீட்டை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வங்கதேச அணிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பயணத் திட்டங்கள் குறித்த விரிவான தகவல்கள் வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு வழங்கப்பட்டதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் இந்தியாவில் வங்கதேச தேசிய அணி, அதிகாரிகள் அல்லது ஆதரவாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று ஐசிசியின் ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
பங்கேற்கும் அனைத்து அணிகளின் மற்றும் ரசிகர்களின் நலன்களை பாதுகாக்கவும், போட்டிகளில் நியாயம் மற்றும் சமநிலையை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஐசிசி கூறியுள்ளது.
இந்தியாவுடன் தொடரும் பதற்ற நிலையைத் தொடர்ந்து, பாதுகாப்புக் காரணங்களை முன்வைத்து உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்றுமாறு வங்கதேசம் கோரிக்கை வைத்திருந்தது.
இதுகுறித்து, அனைத்து பாதுகாப்பு மதிப்பீடுகளையும் ஐசிசி மேற்கொண்டதாகவும், இவ்வளவு குறுகிய காலத்திற்குள் மாற்றங்கள் செய்வது சாத்தியமில்லை என முடிவு செய்யப்பட்டதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.
ஜனவரி 22-ஆம் தேதி வங்கதேச இடைக்கால அரசின் விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் உடன் நடந்த சந்திப்புக்குப் பிறகு, டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இந்தியாவுக்கு வங்கதேசம் செல்லாது என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல் தெரிவித்தார்.

இந்த நிலை ஏன்?
விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசின் முடிவு தெளிவானது - இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பையில் வங்கதேச அணி விளையாடாது என்றார்.
மேலும், "ஐசிசியிடமிருந்து எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இந்த கவலை கற்பனையானது அல்ல. அது ஒரு உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. எங்கள் நாட்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான முஸ்தஃபிசுர் ரஹ்மானின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை" என்று கூறினார்.
மற்றொரு புறம், வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல், "உலக கிரிக்கெட்டின் பிரபலத்தன்மை குறைந்து வரும் இந்த நேரத்தில், பல கோடி மக்களைக் கொண்ட ஒரு நாட்டை இவ்வாறு புறக்கணிப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது" என்று கூறினார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை விடுவிக்க உத்தரவிட்டது என்பது பெரும் திருப்பமாக அமைந்தது.
ஐபிஎல் 2026 ஏலத்தில் ரூ.9.2 கோடிக்கு முஸ்தஃபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
முஸ்தஃபிசுரை அணியிலிருந்து நீக்கியது குறித்து, வங்கதேச இடைக்கால அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு விவகாரங்களுக்கான ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், "வங்கதேச கிரிக்கெட் வீரர்களுக்கும் நாட்டிற்கும் செய்யப்படும் அவமதிப்பை எந்தச் சூழ்நிலையிலும் பொறுத்துக் கொள்ள முடியாது" என்று தெரிவித்திருந்தார்.
வங்கதேசம் தனது நாட்டில் ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்புக்கு தடை விதித்தது.
ஜனவரி 4-ஆம் தேதி அரசு ஆலோசனைக்குப் பிறகு, பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்காக வங்கதேச அணி இந்தியாவுக்கு பயணம் செய்யாது என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்கு கடிதம் எழுதியது. ஆனால், அந்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












