'பிரிட்டன் சூப்பர் மார்க்கெட்டில் கோவில்பட்டி கடலை மிட்டாய்' - புவிசார் குறியீட்டால் தமிழ்நாடு சாதித்தது என்ன?

- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவில் புவிசார் குறியீடு (Geographical Indication) பெறுவதில் உத்தர பிரதேசத்துக்கு அடுத்த இடத்தை தமிழ்நாடு பிடித்துள்ளது. இரு மாநிலங்களும் முறையே 77 மற்றும் 74 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
நாடு முழுவதற்குமான புவிசார் குறியீடு பதிவகம், சென்னையில் இருப்பது தமிழ்நாடு முன்னணி இடம் பிடிக்க ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்பே, பலவிதமான பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ள நிலையில், அவற்றில் பல பொருட்கள் ஏற்றுமதியால் பெரும் பலன் அடைந்திருப்பதாக புவிசார் குறியீடு பதிவக அதிகாரிகள் கூறுகின்றனர்.
உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான புவிசார் குறியீட்டை, தமிழகத்தைச் சேர்ந்த பலரும் சரியாகப் பயன்படுத்தாததால் போதிய அளவு வர்த்தக பலன் கிடைக்கவில்லை என்று புவிசார் குறியீடு நிபுணர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாடு இரண்டாவது இடம்
தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள சில புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் பாரம்பரியமான, தனித்துவமான பொருட்களுக்கு வழங்கப்படும் புவிசார் குறியீடு பெறுவதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
கைவினைப் பொருட்கள், வேளாண் பொருட்கள், உணவுப்பொருட்கள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் மற்றும் இயற்கையாக கிடைக்கும் பொருள் என புவிசார் குறியீடுக்கான பொருட்கள் வகைப்படுத்தப்படுகின்றன.
இதன்படி தமிழகத்தில் இதுவரை 38 கைவினை மற்றும் கைத்தறிப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதில் காஞ்சிபுரம் பட்டு, ஆரணி பட்டு, பவானி ஜமுக்காளம், தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சாவூர் தட்டு, கோவை கோரா காட்டன் சேலை, நெகமம் காட்டன் சேலை, மதுரை சுங்கிடி சேலை, சிவகங்கை கண்டாங்கி சேலை, பத்தமடை பாய், மானாமதுரை மட்பாண்டங்கள், கருப்பூர் களம்காரி ஓவியங்கள், நரசிங்கப்பேட்டை நாதஸ்வரம் உள்ளிட்ட பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

பட மூலாதாரம், TN Tourism Department
வேளாண் பொருட்களில், மதுரை மல்லிகை, விருதுநகர் சம்பா வத்தல், சிறுமலை, விருப்பாச்சி வாழைப்பழங்கள், கொடைக்கானல் மலைப்பூண்டு, ஈரோடு மஞ்சள், கம்பம் பன்னீர் திராட்சை, நீலகிரி ஆர்த்தோடக்ஸ் தேயிலை, வேலூர் முள்ளு கத்தரிக்காய், புளியங்குடி எலுமிச்சை, பண்ருட்டி முந்திரி உள்ளிட்ட 24 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
உணவுப் பொருட்களில் சேலம் ஜவ்வரிசி, மணப்பாறை முறுக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய், முட்டைகளின் வெண்கருவில் தயாரிக்கப்படும் தூத்துக்குடி மக்ரோனி, உடன்குடி பனங்கருப்பட்டி, கன்னியாகுமரி மார்த்தாண்டம் தேன், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, பழனி பஞ்சாமிர்தம், ஊட்டி வர்க்கி, கவுந்தப்பாடி நாட்டுச்சர்க்கரை ஆகிய 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
இவற்றைத் தவிர்த்து, உற்பத்திப் பொருட்கள் என்ற வகைப்பாட்டில், திண்டுக்கல் தோல் பொருட்கள், கோவை வெட்கிரைண்டர் மற்றும் திண்டுக்கல் பூட்டு ஆகிய 3 பொருட்களுக்கும் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இன்னும் பல பொருட்களுக்கான புவிசார் குறியீடு விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது. தூத்துக்குடி முத்து, தூத்துக்குடி உப்பு, காரமடை செங்காம்பு கறிவேப்பிலை உட்பட நூற்றுக்கணக்கான பொருட்களின் விண்ணப்பங்கள் ஆண்டுக்கணக்கில் பரிசீலனையில் உள்ளன.
புவிசார் குறியீடு என்றால் என்ன?
புவிசார் குறியீடு பெறுவதில் 4 பிரிவுகளில் 74 பொருட்கள் இடம் பிடித்து, தமிழ்நாடு தேசிய அளவில் அதிகளவு புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்களில் முன்னணியில் இருக்கிறது.
இதுபற்றி பிபிசி தமிழிடம் விரிவாக விளக்கிய புவிசார் குறியீடு நிபுணர் ரவி சுவாமி, ''ஒரு குறிப்பிட்ட பகுதியின் வளம், காலநிலை, சூழல் சார்ந்து சில பொருட்கள் இயற்கையாகக் கிடைக்கும் அல்லது விளைவிக்கப்படும். அதேபோல ஒரு பகுதியில் இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களை வைத்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் கைவினைத்திறமையால் சில பொருட்களைத் தயாரிப்பார்கள். அதன் தரமும், உழைப்பும் இணையற்றதாக இருக்கும். அந்த தனித்துவத்துக்கும், தரத்துக்கும் மத்திய அரசால் வழங்கப்படும் அங்கீகாரம்தான் புவிசார் குறியீடு.'' என்கிறார்.
ரவி சுவாமி, அறிவுசார் சொத்துரிமைக்கான பட்ட மேற்படிப்பு படித்தவர். சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் நாடுகளில் உலக அறிவுசார் சொத்துரிமை மையத்தில் (World Intellectual Property Organisation) புவிசார் குறியீடு குறித்து பயிற்சி பெற்றவர்.
ஹைதராபாத் ஹலீம், புவிசார் குறியீடு பெற்றிட பெரும்பங்காற்றி, அதற்காக 2022 ஆம் ஆண்டில் மத்திய அரசின் தேசிய விருது பெற்றுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் கீழ் செயல்படும் காப்புரிமை, வடிவமைப்பு மற்றும் வர்த்தகக் குறியீடு கட்டுப்பாட்டு அலுவலகம்தான், புவிசார் குறியீடு வழங்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. நாடு முழுவதற்குமான புவிசார் குறியீடு பதிவகம், சென்னை கிண்டியிலுள்ள அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தில்தான் இயங்கி வருகிறது. அனைத்து மாநிலங்களிலிருந்தும் இந்த பதிவகத்தில்தான் புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிப்பது பற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய புவிசார் குறியீடு பதிவகத்தின் துணைப்பதிவாளர் அபிபுல்லா, ''இதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றாலும், விண்ணப்பிக்கப்படும் பொருளின் சிறப்புத்தன்மை, தனித்துவம், வரலாற்றுப் பாரம்பரியம், அதற்கான தரவுகள் போன்றவற்றுடன் ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களுடன் சமர்ப்பிக்க வேண்டுமென்பதால் பெரும்பாலும் நேரடியாகவே விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அவை பல கட்டங்களாக பரிசீலிக்கப்படுகின்றன.'' என்றார்.
பதிவகம் கோரிய அனைத்து ஆவணங்களையும், சான்றுகளையும் சமர்ப்பித்த பின்பு, 7 பேர் கொண்ட ஆலோசனைக்குழு (Consultative Group) அதைப் பரிசீலிக்கும் என்கிறார் பதிவகத்தின் துணைப்பதிவாளர் அபிபுல்லா. விண்ணப்பதாரரை அழைத்துப் பேசிய பின்பு (pre hearing) அவர்கள் தரும் ஆவணங்கள் மற்றும் தரவுகளின்படி புவிசார் குறியீடு வழங்கப்படும் என்றார் அவர்.
புவிசார் குறியீடு கோரி இதுவரை சுமார் 1800 பொருட்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டிருப்பது, மத்திய அரசின் அறிவுசார் சொத்துரிமை அலுவலக இணையதளத்திலுள்ள பட்டியல் மூலமாகத் தெரியவந்துள்ளது. இதுவரை 700–800 பொருட்களுக்கு மட்டுமே புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மற்ற விண்ணப்பங்கள், இன்னும் பரிசீலனையில் உள்ளதாகச் சொல்கின்றனர் புவிசார் குறியீடு பதிவக அலுவலர்கள்.
அறிவுசார் சொத்துரிமைகளாக (Intellectual property Rights) கருதப்படும் காப்புரிமைகள் (Patents), பிரத்யேக வடிவங்கள் (Designs), வர்த்தகக் குறியீடுகள் (Trade marks) ஆகியவற்றுக்கும், புவிசார் குறியீடுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை பெரும்பாலான மக்கள் புரிந்துகொள்வதில்லை என்கிறார் புவிசார் குறியீடு நிபுணர் ரவி சுவாமி.
''காப்புரிமை, வர்த்தகக் குறியீடு போன்றவை, ஒரு தனி நபர் அல்லது நிறுவனத்துக்கு அறிவுசார் உரிமையாக வழங்கப்படும். ஆனால் புவிசார் குறியீடு என்பதை, எந்த ஒரு தனி நபரும் பெறமுடியாது. பாரம்பரியமாக ஒரு பொருளை விளைவிப்பவர்கள் அல்லது தயாரிப்பவர்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபடும் ஓர் அமைப்பு அல்லது சங்கம் மட்டுமே புவிசார் குறியீடு பெறுவதற்கு உரிமை கோரமுடியும்.'' என்கிறார் அவர்.

காஞ்சிபுரம் பட்டு, கோவில்பட்டி கடலை மிட்டாய் ஏற்றுமதியில் அசத்தல்
புவிசார் குறியீடு பெறும் பொருட்களுக்கு உலகளாவிய வர்த்தக வரவேற்பு கிடைக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் ரவி சுவாமி.
தமிழ்நாட்டில் கடந்த 2004-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 74 பொருட்கள், புவிசார் குறியீடு பெற்றிருந்தாலும் குறிப்பிட்ட சில பொருட்கள் மட்டுமே பெரியளவில் வர்த்தக வாய்ப்புகளைப் பெற்றுள்ளன என்கிறார் புவிசார் குறியீடு பதிவகத்தின் முன்னாள் இணைப்பதிவாளர் சின்னராஜா நாயுடு. தற்போது டில்லியில் மத்திய சட்டத்துறையின் ஆலோசகராக இருக்கும் இவர், புவிசார் குறியீட்டைப் பயன்படுத்தி, உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம் என்கிறார்.
''காஞ்சிபுரம் பட்டு தயாரிப்பாளர்கள் இந்த புவிசார் குறியீட்டைப் பயன்படுத்தி, உலகளவில் ஏற்றுமதி செய்து சிறப்பாக வர்த்தகம் செய்கிறார்கள். தஞ்சாவூர் ஓவியங்களுக்கும் புவிசார் குறியீடு பெற்ற பின்பே பல்வேறு நாடுகளிலும் அமோகமான வரவேற்பு கிடைத்தது. பிரிட்டனில் உள்ள முக்கியமான சூப்பர் மார்க்கெட் அனைத்திலும் இன்றைக்கு கோவில்பட்டி கடலை மிட்டாய் கிடைப்பதற்கும், அதனால் அதன் தயாரிப்பாளர்கள் பயன் பெற்றதற்கும் புவிசார் குறியீடு முக்கியக் காரணம்.'' என்கிறார் சின்னராஜா.
இந்தியாவில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்குக் கிடைத்துள்ள வர்த்தக வரவேற்பு அல்லது ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து எந்த புள்ளிவிவரங்களும் ஆவணப்படுத்தாதது பெரிய குறை என்கிறார் அவர்.
ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வில், புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கு அப்பொருட்களின் தயாரிப்புச் சங்கிலியில் உள்ளோரின் ஒட்டு மொத்த பொருளாதாரம் 10 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது உறுதியாகியுள்ளதாகத் தெரிவிக்கிறார் புவிசார் குறியீடு முகவர் ரவி.
நீலகிரி மாவட்டம் உதகையில் தயாராகும் ஊட்டி வர்க்கிக்கு கடந்த 2023-ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு கிடைத்தது. அதன்பின்பு அங்கு தயாராகும் வர்க்கி பாக்கெட்களில் புவிசார் குறியீடுடன் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாக ஊட்டி வர்க்கி தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஃபரூக் தெரிவித்தார். இதனால் வேறு பகுதிகளில் தயாரித்து ஊட்டி வர்க்கி என்ற பெயரில் விற்பனை செய்வதை தங்களால் சட்டரீதியாகத் தடுக்க முடிவதாகவும் அவர் மேலும் தகவல் பகிர்ந்தார்.
பிபிசி தமிழிடம் பேசிய ஃபரூக், ''புவிசார் குறியீடு வாங்கியதன் முதல் நோக்கம், ஊட்டி வர்க்கி என்ற பெயரில் வெளியூரில் வர்க்கி தயாரித்து விற்பதைத் தடுப்பதுதான். தற்போது வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இதைத் தடுத்து வருகிறோம். துபையிலும் போலியான ஊட்டி வர்க்கி விற்கப்படுகிறது. அதையும் தடுக்க முயன்று வருகிறோம். அடுத்ததாக புவிசார் குறியீடு பெற்றுள்ள அங்கீகாரத்தை வைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.'' என்றார்.
இதேபோன்று கர்நாடகா மாநிலம் குல்பர்கா துவரை பருப்புக்கு ஏற்கெனவே ஒரு பாரம்பரியப் பெருமை இருந்த நிலையில், புவிசார் குறியீடு பெற்ற பின்பு சர்வதேச அங்கீகாரம் கிடைத்ததாகச் சொல்கிறார் கல்புர்கி (குல்பர்கா) துவரை விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகியான குமார். தற்போது பிரிட்டன், அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளுக்கும் துவரை புவிசார் குறியீட்டுடன் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Farooq
இந்தியாவிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களில் போலியைக் கண்டறிவதற்கான தொழில் நுட்பங்கள் இன்னும் மேம்பாடு அடையவில்லை என்கிறார் மத்திய சட்டத்துறையின் ஆலோசகர் சின்னராஜா.
இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய அவர், ''மேலைநாடுகளில் உற்பத்தியாகும் பொருட்களில் பார்கோடு வைத்து, அது எங்கே எந்த நாளில் தயாரானது, அதிலுள்ள உள்ளடக்கம் என்னென்ன என்பதை தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் நம்நாட்டில் உற்பத்தியாகும் இத்தகைய பாரம்பரியப் பொருட்களில் இதுபோன்ற விவரங்களைக் கண்டறிவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளன.'' என்றார்.
புவிசார் குறியீடு பெறுவதற்கான பொருள் 200 ஆண்டுகள் பழமையான ஒன்று என்பதற்கான சான்றுகள் இருக்க வேண்டும் என்ற நிலையில், அவையில்லாத சில பொருட்களுக்கும் புவிசார் குறியீடு தரப்பட்டுள்ளது என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அறிவுசார் சொத்துரிமை அலுவலக அதிகாரி ஒருவர்.
''உதாரணமாக புவிசார் குறியீடு பெற்றுள்ள திண்டுக்கல் பூட்டு 200 ஆண்டுகளுக்கு முன்பே பிரபலமாக இருந்தது என்பதற்கான சான்று உள்ளது. கோவை வெட்கிரைண்டருக்கு அவ்வளவு பழமையான சான்று இருக்காது. இருப்பினும் உற்பத்திப் பொருட்கள் என்பதன் அடிப்படையில் அதற்கான தொழில்நுட்பப் பழமையையும், பாரம்பரியத்தையும் வைத்து அந்த அங்கீகாரம் தரப்பட்டுள்ளது.'' என்றார் அவர்.

போலியான பொருட்கள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது?
புவிசார் குறியீடு பெற்ற ஒரு பொருளைப் போலவே, போலியான பொருளைத் தயாரித்து, அதே பெயரில் வர்த்தகம் செய்வதாகவும் பரவலான புகார்கள் எழுகின்றன. அவ்வாறு போலியான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றியும் பலருக்குத் தெரிவதில்லை என்பதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய புவிசார் குறியீடு பதிவகத்தின் துணைப்பதிவாளர் அபிபுல்லா, ''புவிசார் குறியீடு பெற்ற பொருளின் பெயரில் போலியான பொருள் விற்கப்படும்போது, அதற்கான உரிமை பெற்றுள்ள அமைப்புதான் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அப்படி புகார் தரும்போது, உண்மையான பொருள், போலியான பொருள் இரண்டையும் ஆதாரமாகத் தரவேண்டும்.'' என்றார்.
''அவ்வாறு தரப்படும் புகாரையும் பொருட்களையும் காவல்துறையினர் பதிவகத்துக்கு அனுப்பி, அதன் உண்மைத்தன்மை, சான்று பெற்ற விவரங்களைக் கோரி, புகாரின் முகாந்திரம் குறித்து கருத்து (Opinion) கேட்பார்கள். நாங்கள் அவற்றைப் பரிசீலித்து உரிய பதிவுதாரர் யார், உண்மையான புவிசார் குறியீடு பொருள் எது என்பதற்கான தகவல்களைத் தெரியப்படுத்துவோம். அதன் அடிப்படையில் புவிசார் குறியீடு சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார் அபிபுல்லா.
ஆனால் போலி பொருட்கள் சந்தையில் இருந்தாலும், பலரும் காவல் நிலையத்தில் புகார் தருவதில்லை என்கிறார் சட்ட ஆலோசகர் சின்னராஜா. ஏனெனில் புவிசார் குறியீடு சட்டப்படி, கிரிமினல் குற்றத்தை நிரூபிப்பதில் பல சிரமங்கள் இருப்பதாக அவர் கூறுகிறார். அதனால், புகார் கொடுப்பதற்குப் பதிலாக பலரும் நீதிமன்றங்களில் சிவில் வழக்குகளைத் தொடுக்கிறார்கள் என்கிறார் அவர்.

பட மூலாதாரம், M A Majeed
புவிசார் குறியீடு பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, மத்திய அரசின் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் அறிவுசார் சொத்துரிமை அலுவலகம் சார்பில் கடந்த 2022 ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் சிறந்த பொருட்களுக்கான 'ஆன்லைன்' வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 5 பிரிவுகளிலும் ஒவ்வொரு பொருள் தேர்வு செய்யப்பட்டது.
உணவுப்பிரிவில் போட்டியிட்ட தெலங்கானாவின் பிரபலமான அசைவ உணவுப்பொருளான ஹைதராபாத் ஹலீம்தான், அனைத்துப் பிரிவுகளிலும் நாட்டிலேயே பிரபலமான புவிசார் குறியீடு பெற்ற பொருள் என்று அதிகவாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றது. கைவினைப் பொருட்களுக்கான பிரிவில், தஞ்சாவூர் தட்டு அதிக வாக்குகளைப் பெற்று விருது பெற்றது.
வேளாண் பொருட்களில், ஒடிஷா மாநிலத்தில் பழங்குடியினரால் பயிரிடப்படும் கந்தமால் மஞ்சள் தேர்வு பெற்றது. உற்பத்திப் பொருட்கள் பிரிவில், கர்நாடகா மாநிலத்தின் மைசூரு சந்தன சோப்பும், இயற்கையாக பூமியிலிருந்து கிடைக்கும் பொருட்கள் பிரிவில், வாரணாசி பகுதியில் கிடைக்கும் ஒரு வித சிவப்புக்கல்லும் விருதுக்குத் தேர்வு பெற்றன. டில்லியில் இந்திய அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்த விருதுகளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழங்கினார்.
''வளர்ந்த நாடுகளில் அறிவுசார் சொத்துரிமையை தங்கள் உயிராக நினைக்கிறார்கள். நம்நாட்டில் அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வு சமீபகாலமாக அதிகமாகி வந்தாலும் இன்னும் இதில் கடக்க வேண்டிய துாரம் அதிகமிருக்கிறது. இதைச் சரியாகப் புரிந்து கொண்டால் தமிழகப் பாரம்பரிய பொருட்களுக்கான சந்தை உலகளவில் விரியும். '' என்கிறார் ரவி சுவாமி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












