அணு ஆயுத சூட்கேசை செயல்படுத்திய ரஷ்ய அதிபர் - உலகம் பேரழிவின் விளிம்பு வரை சென்ற திகில் நிமிடங்கள்

அணு ஆயுத போர், யெல்ட்சின், ரஷ்யா, நார்வே, அமெரிக்கா

பட மூலாதாரம், Alamy

    • எழுதியவர், கிரெக் மெக்கெவிட்

வடதுருவ ஒளியை ஆய்வு செய்வதற்காக 1995-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி நார்வே ஏவிய ஒரு ராக்கெட், மாஸ்கோவை நோக்கி வரும் அணு ஆயுத ஏவுகணை என ரஷ்யாவால் தவறாகக் கருதப்பட்டது.

ஒரு புதன்கிழமை மதிய வேளையில், அந்த உறைபனி குளிர்கால நாளில், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உலகம் ஒரு பயங்கரமான பனிப்போர் கால கனவை நேருக்கு நேர் சந்தித்தது.

வடக்கு ரஷ்யா முழுவதும் இருந்த ரேடார் நிலையங்களில் பணியில் இருந்த ராணுவ தொழில்நுட்ப வல்லுநர்கள், தங்கள் திரைகளில் ஒரு அச்சுறுத்தும் புள்ளியைக் கவனித்தனர்.

நார்வே கடற்கரைக்கு அப்பால் எங்கோ ஒரு ராக்கெட் ஏவப்பட்டு, அது அதிவேகமாக மேலே எழுந்து கொண்டிருந்தது. அது எங்கே சென்றுகொண்டிருந்தது? அது ஒரு அச்சுறுத்தலா? என்ற கேள்விகள் எழுந்தன.

எல்லாவற்றிற்கும் மேலாக, பெர்லின் சுவர் இடிந்து விழுந்தபோதே இத்தகைய அணு ஆயுதப் பதற்றங்கள் மறைந்துவிட்டதாகப் பெரும்பாலானோர் நம்பியிருந்தனர்.

வான்வெளியைக் கண்காணித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, அதன் விளைவுகள் அச்சமூட்டுவதாக இருந்தன.

அந்தப் பகுதியில் உள்ள ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் ஒரு ஏவுகணை, அடுத்த 15 நிமிடங்களுக்குள் மாஸ்கோ மீது எட்டு அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்க முடியும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.

இந்தச் செய்தி உடனடியாக ரஷ்ய அதிபர் போரிஸ் யெல்ட்சினுக்கு அனுப்பப்பட்டது.

அணுகுண்டுகளை வெடிக்கச் செய்வதற்கான அறிவுறுத்தல்கள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்ட "அணு ஆயுத சூட்கேசை" செயல்படுத்திய உலகின் முதல் தலைவர் இவர் தான்.

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததிலிருந்து, அணு ஆயுத நாடுகளுக்கிடையே ஒரு தாக்குதல் நடந்தால் அது இரு தரப்பினரின் முழுமையான அழிவிற்கே வழிவகுக்கும் என்ற கருத்தின் அடிப்படையில் அணு ஆயுதம் ஏந்திய நாடுகள் தடுப்புக் கொள்கையை செயல்படுத்தி வருகின்றன.

அந்தப் பதற்றமான தருணத்தில், இதற்குப் பதிலடி கொடுக்க வேண்டுமா வேண்டாமா என்பதை யெல்ட்சினும் அவரது ஆலோசகர்களும் அவசரமாகத் தீர்மானிக்க வேண்டியிருந்தது.

ஆனால் இந்த அபாயகரமான நிகழ்வுகள் பெரும் பேரழிவில் முடியவில்லை.

அணு ஆயுத போர், யெல்ட்சின், ரஷ்யா, நார்வே, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யெல்ட்சின் (கோப்புப் படம்)

இவ்வளவு பதற்றங்களுக்கு மத்தியிலும், அன்றிரவு செய்திகளின் இறுதியில் இந்தத் தகவல் ஒரு நகைச்சுவையான செய்தியாகவே முடிந்தது. டாம் லெரரின் நகைச்சுவைப் பாடலுடன் (We Will All Go Together When We Go) அந்தச் செய்தி வாசிக்கப்பட்டது.

பிபிசியின் நியூஸ்நைட் தொகுப்பாளர் ஜெரமி பேக்ஸ்மேன் இது குறித்துக் குறிப்பிடுகையில், "நாங்கள் விடைபெறுவதற்கு முன், ஒரு செய்தியைப் பதிவு செய்ய வேண்டும். ஒரு ரஷ்ய செய்தி நிறுவனத்தின் தீவிரமான முயற்சிகளையும் மீறி, இன்று அணு ஆயுதப் போர் வெடிக்கவில்லை. மதியம் 1:46 மணியளவில், ரஷ்யா ஒரு ஏவுகணையைச் சுட்டு வீழ்த்தியதாக மாஸ்கோவின் 'இன்டர்ஃபாக்ஸ்' செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி தகவல்கள் வரத் தொடங்கின."

"உலகம் அழியப்போவதை நேரில் பார்க்கப் போகிறோம் என்று நினைத்த செய்தியாளர்கள், உடனடியாக பாதுகாப்பு அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டனர். ஒரு செய்தித் தொடர்பாளர் சற்றும் பதற்றமின்றி, 'பிரிட்டன் ரஷ்யா மீது எந்த ஏவுகணையையும் ஏவவில்லை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்' என்று உறுதியாகத் தெரிவித்தார்."

இதுகுறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளரும், "எங்களிடம் இருப்பவை எல்லாம் தகவல்களைப் பற்றிய செய்திகள் மட்டுமே" என்று ஒன்றும் அறியாதவராகக் கூறினார்.

உலக நாணயச் சந்தைகள் தடுமாறின. அதே நேரத்தில் அரசியல்வாதிகள், ராணுவத் தளபதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் தகவல்களைத் திரட்டுவதற்காக ஒரு மணி நேரம் தீவிரமாகப் போராடினர். கிரீன்விச் நேரப்படி மதியம் 02:52 மணியளவில், இந்த சாத்தியமான நெருக்கடியைப் பற்றி அறிந்திருந்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ரஷ்யாவின் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு ஒரு ஏவுகணை ஏவப்பட்டதைப் பதிவு செய்திருந்தாலும், அந்த ராக்கெட் நார்வே எல்லைக்குள்ளேயே விழுந்ததாக இன்டர்ஃபாக்ஸ் தனது செய்தியைத் திருத்தியது.

பின்னர், நார்வே பாதுகாப்பு அதிகாரி ஒருவர், இந்த ராக்கெட் அமைதியான நோக்கத்திற்காக ஏவப்பட்டது என்பதை உறுதிப்படுத்தினார்.

இது பொதுமக்களுக்கான ராக்கெட் ஏவுதளத்தில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான அறிவியல் ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். அரோரா பொரியாலிஸ் என்று அழைக்கப்படும் தனித்துவமான வானிலை நிகழ்வான வடதுருவ ஒளியைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதே இதன் நோக்கமாக இருந்தது.

அணு ஆயுத போர், யெல்ட்சின், ரஷ்யா, நார்வே, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரோரா பொரியாலிஸ் பற்றிய அறிவியல் தகவல்களைச் சேகரிப்பதற்காகவே ராக்கெட் ஏவப்பட்டது என்பது தெரியவந்தது

அந்த ராக்கெட் திட்டமிட்டபடி ஆர்க்டிக் தீவான ஸ்பிட்ஸ்பெர்கனுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் விழுந்தது. இது ரஷ்ய வான் எல்லைக்கு மிகத் தொலைவிலேயே அமைந்திருந்தது.

இந்தச் செய்தி தவறு என்று தெரிந்து பல மணிநேரத்திற்குப் பிறகு, பெயர் குறிப்பிட விரும்பாத ரஷ்ய பாதுகாப்புத் துறையினர், தங்கள் முன்கூட்டிய எச்சரிக்கை ரேடார் அமைப்பைச் சோதிக்கவே இந்த ஏவுதல் நடத்தப்பட்டதா என்பது பற்றிச் சொல்ல "இன்னும் சற்று நேரம் தேவை" என்று இன்டர்ஃபாக்ஸிடம் தெரிவித்தனர்.

1987-ஆம் ஆண்டு, மத்தியாஸ் ரஸ்ட் என்ற மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த பதின்ம வயது இளைஞன், ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய விமானத்தில் சோவியத் ஒன்றியத்தின் அனைத்து பாதுகாப்பு வளையங்களையும் மீறி 500 மைல் (750 கி.மீ) பறந்து சென்று கிரெம்ளின் மாளிகையின் வாசலிலேயே தரையிறங்கினார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ரஷ்யா தனது வான் பாதுகாப்புத் திறன்கள் குறித்து மிகவும் கவனமாகவே இருந்து வந்தது.

அப்போது பனிப்போர் முடிவுக்கு வந்திருந்தாலும், சில ரஷ்ய அதிகாரிகள் அணு ஆயுத அச்சுறுத்தல் குறித்து இன்னும் பதற்றத்துடனேயே இருந்தனர் என்பதற்கு இது ஒரு அறிகுறியாக அமைந்தது.

"எங்களுடைய வழக்கமான ஏவுதல் முயற்சிக்கு இவ்வளவு பெரிய கவனம் கிடைத்ததை அறிந்தபோது நான் பயந்துவிட்டேன் " என்று நார்வே விஞ்ஞானி கோல்பியர்ன் அடோல்ஃப்சென் கூறினார். தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கியபோது அவர் ஒரு கூட்டத்தில் இருந்தார்.

இதில் மிகவும் விசித்திரமான விஷயம் என்னவென்றால், பல வாரங்களுக்கு முன்பே நார்வே இந்த ராக்கெட் ஏவுதல் திட்டம் குறித்து ரஷ்யாவிடம் தெரிவித்திருந்தது.

வடதுருவ ஒளி ஆராய்ச்சி ராக்கெட் 908 மைல் உயரத்தை எட்டும் வகையில் ஏவப்பட்டது இதுவே முதல் முறை என்பதால் ரஷ்யர்கள் இவ்வாறு எதிர்வினை ஆற்றியிருக்கலாம் என்று அடோல்ஃப்சென் குறிப்பிட்டார்.

இருப்பினும், இது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கக் கூடாது என்று அவர் கூறினார். "டிசம்பர் 14 அன்று வெளியுறவு அமைச்சகம் மூலம் சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் நாங்கள் ராக்கெட் ஏவப்போகிறோம் என்ற செய்தி அனுப்பப்பட்டது," என்று அவர் தெரிவித்தார்.

இருந்தும் ஏதோ ஒரு காரணத்தால், அந்த எச்சரிக்கைச் செய்தி சரியான அதிகாரிகளின் மேசைக்கு சென்றடையவில்லை. ஒரு தகவல் தவறிப்போவது எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதற்கான ஒரு கசப்பான நினைவூட்டலாக இச்சம்பவம் அமைந்தது.

அணு ஆயுத போர், யெல்ட்சின், ரஷ்யா, நார்வே, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யெல்ட்சினுடன் இன்றைய ரஷ்ய அதிபர் புதின் (1999-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம்)

அணுசக்தி யுகம் தோன்றியதிலிருந்து, ஒருவர் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகமான ஆபத்தான நெருக்கடியான தருணங்கள் ஏற்பட்டுள்ளன.

இது 1962ஆம் ஆண்டு நடந்த கியூபா ஏவுகணை நெருக்கடி பனிப்போர் காலத்தில் அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் முழுமையான அணு ஆயுதப் போரில் இறங்குவதற்கு மிக அருகில் சென்ற தருணமாக இருந்தது.

2020-ஆம் ஆண்டு, பிபிசி ஃப்யூச்சர் வெளியிட்ட செய்தியில், இடம்பெயரும் அன்னப்பறவைகள், நிலவு, கணினி கோளாறுகள் மற்றும் விண்வெளி வானிலை போன்றவற்றால் கூட தவறான எச்சரிக்கைகள் எழுந்ததாக குறிப்பிடப்பட்டது.

1958-ஆம் ஆண்டு, ஒரு விமானம் தவறுதலாக ஒரு குடும்பத்தின் தோட்டத்தில் அணுகுண்டை வீசியது. அதிர்ஷ்டவசமாக அதில் அவர்களின் கோழிகள் மட்டுந்தான் உயிரிழந்தன. 1966-ஆம் ஆண்டு, ஒரு ஸ்பெயின் கிராமத்தின் மீது இரண்டு அமெரிக்க ராணுவ விமானங்கள் மோதிக் கொண்டன. அவற்றில் ஒன்று நான்கு அணு ஆயுதங்களை எடுத்துச் சென்றது.

2010-ஆம் ஆண்டில்கூட, அமெரிக்க விமானப்படை தற்காலிகமாக 50 ஏவுகணைகளுடன் தொடர்பை இழந்தது. இதனால் தானியங்கி ஏவுதலைக் கண்டறியவோ தடுக்கவோ எந்த வழியும் இல்லாத நிலை ஏற்பட்டது.

ஆபத்தான தருணம்

அக்காலகட்டத்தில் ரஷ்யாவிலிருந்த பலரும், தான் முதன்முறையாக அணு ஆயுத சூட்கேசை பயன்படுத்தியதாக யெல்ட்சின் கூறிய அறிவிப்பை வெறும் பேச்சாகக் கருதி நிராகரித்தனர்.

அப்போது தீவிரமடைந்து கொண்டிருந்த செச்னியா போரிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே அவர் அவ்வாறு கூறியதாக அவர்கள் கருதினர்.

"நேற்று நான் முதன்முறையாக என் 'கருப்பு' சூட்கேஸைப் பயன்படுத்தினேன், அது எப்போதும் என்னுடன் எடுத்துச் செல்லப்படும் பொத்தானைக் கொண்டது" என்று அவர் மறுநாள் இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

மேலும் "எங்கள் ராணுவம் பலவீனமாக இருப்பதாக ஊடகங்கள் எப்போதும் கூறிக் கொண்டிருப்பதால், யாரோ எங்களைச் சோதிக்க முடிவு செய்திருக்கலாம்," என்றும் அவர் கூறினார்.

நார்வே ராக்கெட் பீதி குறித்த 'நியூஸ்நைட்' அறிக்கை மேலோட்டமானதாகவோ அல்லது கேலியாகவோ இருந்திருக்கலாம்,

ஆனால் இந்தச் சம்பவத்தின் தீவிரம் குறித்து கருத்துகள் மாறுபடுகின்றன. ஒரு முன்னாள் சிஐஏ அதிகாரியின் கூற்றுப்படி, இது "அணு ஆயுத காலத்தின் மிகவும் ஆபத்தான தருணம்" ஆகும்.

ராணுவ ஆலோசகர் பீட்டர் ப்ரை இதுகுறித்து கூறுகையில், "உண்மையான அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்பட்ட சூழ்நிலையில், உடனடியாக உலகமெங்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதத் தாக்குதலைத் தொடங்க முடிவு எடுக்கக்கூடிய நிலையில், எந்த அணு சக்தி நாட்டின் தலைவரும் இதற்கு முன் ரஷ்யாவின் 'அணு ஆயுத சூட்கேசுக்கு இணையான தனது கருவியை இவ்வளவு தீவிரமாக திறந்ததில்லை"என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையின் அணு ஆயுதக் குறைப்பு ஆராய்ச்சியாளர் பாவெல் போட்விக் இதுகுறித்துக் கூறுகையில், "இந்தச் சம்பவங்களை நான் வரிசைப்படுத்தினால்... இதற்கு 10-க்கு 3 மதிப்பெண்களை மட்டுமே கொடுப்பேன். பனிப்போர் காலத்தில் இதைவிட மிகவும் தீவிரமான சம்பவங்கள் நடந்துள்ளன." என்றார்.

அணு ஆயுத சூட்கேஸ் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சூழல், யெல்ட்சினுக்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு நாடகமாகக்கூட இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

ரஷ்ய அணு ஆயுத நிபுணர் விளாடிமிர் டிவோர்கின் கூறுகையில், நார்வே ராக்கெட் எச்சரிக்கையினால் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை, "நிச்சயமாக இல்லை" என்றார்.

அவர் 1998-இல் வாஷிங்டன் போஸ்ட் இதழுக்கு அளித்த பேட்டியில், "எச்சரிக்கை அமைப்பு ஒரு மிகப்பெரிய தாக்குதல் குறித்து சமிக்ஞை கொடுத்தாலும் கூட, ஒரு ஏவுகணை ஏவப்பட்டதைக் கண்டு பதற்றமடையும் ஒரு பகுத்தறிவற்ற தலைவர்கூட உடனடியாக (தாக்குதலுக்கான) முடிவை எடுத்துவிட மாட்டார். இது ஒரு வெறும் வீண் எச்சரிக்கை என்றே நான் நினைக்கிறேன்." என்று தெரிவித்தார்.

சம்பவம் நடந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு, பிபிசி வானொலி செய்தி அறிவிப்புகளில், அந்த எச்சரிக்கையை ரஷ்யா "ஒரு தவறான புரிதல்" காரணமாக ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டியதாகவும், அது மீண்டும் நடக்கக் கூடாது என்று தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

வெளியுறவுத் துறை பேச்சாளர், நார்வே வழக்கமான நடைமுறைகளின் படி செயல்பட்டதாகவும், அவர்கள் மீது எந்தவித விரோத உணர்வும் இருக்கக் கூடாது என்றும் கூறினார்.

பேரழிவு தவிர்க்கப்பட்டிருந்தாலும், சாதாரண வானிலை ஆய்வு ராக்கெட் ஒன்றால் இவ்வளவு பெரிய பதற்றத்தை ஏற்படுத்த முடிந்தது என்பது இன்னும் அச்சமளிப்பதாகவே உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு