சங்கர மடத்துக்கு சொந்தமான பெண் யானைகள்: திரும்ப ஒப்படைக்க வனத்துறை எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், Facebook/EleFriends101ECF
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
காஞ்சி சங்கர மடத்துக்குச் சொந்தமான மூன்று பெண் யானைகளை மீண்டும் மடத்திடம் ஒப்படைக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ஜனவரி 23 அன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உறுதி செய்தது.
அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த பின்னர் உரிய காரணத்துடன் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறி, வனத்துறையின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
'சங்கர மடத்திடம் யானைகளை ஒப்படைக்காமல் வனத்துறை பிடிவாதம் காட்டுவது ஏன்?' எனவும் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
யானைகளை ஒப்படைக்கும் விவகாரத்தில் வனத்துறை எதிர்ப்பு காட்டியது ஏன்?
காஞ்சிபுரத்தில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்து, சந்தியா, ஜெயந்தி என்ற பெயரில் மூன்று பெண் யானைகள் வளர்க்கப்பட்டு வந்தன.
'சங்கர மடம், தனது மதரீதியிலான பணிகளை முன்னெடுக்கும் வகையில் யானைகளைப் பராமரித்து வந்தது. இதற்கு 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின்கீழ் உரிமைச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளது' - சென்னை உயர் நீதிமன்றத்தில் மடத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
மூன்று யானைகளையும் சடங்குகள், திருவிழாக்கள் ஆகிய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாகக் கூறியுள்ள சங்கர மடம், 'இந்து மதத்தில் ஆன்மிகம் மற்றும் சடங்குரீதியாக யானைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன' எனத் தெரிவித்தது.
அதிர்ச்சி கொடுத்த ஆர்.டி.ஐ தகவல்
2015 ஆம் ஆண்டு யானைகளின் பாகன் இறந்ததால் அவற்றை தனியார் வனவிலங்கு மீட்பு மற்றும் மையத்தின் கட்டுப்பாட்டுக்கு மாற்றுவதற்கு வனத்துறையிடம் மடத்தின் நிர்வாகம் அனுமதி பெற்றதாகவும் வழக்கின் மனுவில் சங்கர மடம் கூறியிருந்தது.
"மூன்று யானைகளையும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணத்தில் ஓர் இடத்தைத் தேர்வு செய்து அங்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் வளர்க்கத் தொடங்கியது" எனக் கூறுகிறார், சமூக ஆர்வலர் முரளிதரன்.
'மரக்காணத்தில் அவை உரிய முறையில் வளர்க்கப்படவில்லை' எனக் கூறி 2019 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் முரளிதரன் வழக்கு தொடர்ந்தார். இதைப் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மரக்காணத்தில் சட்டப்பூர்வமாக அவை பராமரிக்கப்படுகிறதா என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேள்வி எழுப்பினேன்" என்கிறார்.
'அவ்வாறு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை' என வனத்துறையிடம் இருந்து பதில் கிடைத்ததாகக் கூறும் முரளிதரன், "அதை அடிப்படையாக வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்" எனக் கூறுகிறார்.
வழக்கின் முடிவில், வனத்துறை முகாமில் வைத்து யானைகளைப் பராமரிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் மடத்தின் மூன்று யானைகளும் பராமரிக்கப்பட்டு வந்தன.

பட மூலாதாரம், Facebook/Muralidharan
வனத்துறை சொன்ன குறைகள்
'காஞ்சிபுரம், கோனேரிகுப்பத்தில் 2.94 ஏக்கர் நிலத்தில் யானைகளை பராமரிப்பதற்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆகவே, யானைகளை தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்' என, ரிட் மனுவில் சங்கர மடம் தெரிவித்திருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், சங்கர மடம் கூறும் இடத்தை ஆய்வு செய்யுமாறு வனத்துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலர் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஆய்வை மேற்கொண்டது.
மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, யானைகளைப் பராமரிக்கும் இடத்தில் கான்கிரீட் கொட்டகைகள் இல்லாதது உள்பட சில குறைகளை நீதிமன்றத்தில் வனத்துறை தெரிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மடத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், "வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள யானை பராமரிப்பு மையங்களில் கான்கிரீட் கொட்டகைகள் இல்லை. ஆனால், தனியார் உரிமையாளர்களை மட்டும் வற்புறுத்துகின்றனர்" என வாதிட்டார்.
கோனேரிகுப்பத்தில் மூன்று யானைகளுக்கும் நல்ல காற்றோட்ட வசதியுடன் கூடிய ஸ்டீல் கூரை கொட்டகைகளை அமைத்துள்ளதாக சங்கர மடம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
யானைகள் குளிப்பதற்கு குளம், உணவு மற்றும் மருந்து தயாரிக்கும் அறைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் மடத்தின் வழக்கறிஞர் கூறினார். யானைகளுக்கு தினசரி உணவாக 200 கிலோ தீவனத்தை வழங்கும் அளவுக்கு அருகில் புல்வெளி இருப்பதாகவும் நீதிபதியிடம் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Facebook/Srikamakoti
தனி நீதிபதி அளித்த உத்தரவு என்ன?
இதையடுத்து, கோனேரிகுப்பம் யானைகள் பராமரிப்பு மையத்தை மீண்டும் ஆய்வு செய்யுமாறு தமிழ்நாடு அரசின் தலைமை வனப் பாதுகாவலருக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் உத்தரவிட்டார்.
"முதல் ஆய்வின்போது கண்டறியப்பட்ட குறைகளை சங்கர மடம் நிவர்த்தி செய்துள்ளதா என்பதை இதன்மூலம் கண்டறிய முடியும்" எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 7 ஆம் தேதியன்று வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி லட்சுமி நாராயணன், 'சங்கர மடத்துக்குச் சொந்தமான மூன்று பெண் யானைகளையும் மீண்டும் மடத்தின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டும்' எனக் கூறி வனத்துறைக்கு உத்தரவிட்டார்.
'இந்து மத சடங்குகளில் யானைகளைப் பயன்படுத்துவதும் கஜ பூஜை நடத்துவதும் அரசியலமைப்பின் 26வது பிரிவின் (மத விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம்) வரம்புக்குள் வரும்' எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டார்.
மேலும், 'யானைகளின் உடல்நிலையை அவ்வப்போது மருத்துவக் குழு ஆய்வு செய்ய வேண்டும்' எனவும் தீர்ப்பில் நீதிபதி தெரிவித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு வனத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
'மறுப்பு தெரிவிக்க முடியாது' - தலைமை நீதிபதி அமர்வு
ஜனவரி 23 ஆம் தேதியன்று தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறையின் சார்பாக ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் டி.சீனிவாசன் சில தகவல்களைத் தெரிவித்தார்.
அவர் வாதிடும்போது, "திருச்சியில் உள்ள முகாமுக்கு 2019 ஆம் ஆண்டு இந்த யானைகள் மோசமான நிலையில் கொண்டு வரப்பட்டன. அவற்றுக்கு வயதாகிவிட்டதால் மீண்டும் மடத்துக்கு அனுப்பி வைத்தால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்" எனக் கூறினார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், "கடந்த ஆறு ஆண்டுகளாக வனத்துறையின் பராமரிப்பில் தானே அந்த யானைகள் இருந்தன?" எனக் கேள்வி எழுப்பினர். "அவற்றைப் பராமரிக்கத் தேவையான வசதிகளை காஞ்சி மடம் செய்துவிட்ட நிலையில் அவற்றை ஒப்படைப்பதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாது" எனவும் கூறினர்.
"மூன்று பெண் யானைகளுக்கும் மருத்துவ பரிசோதனைகளை நடத்தி மீண்டும் சங்கர மடத்தின் நிர்வாகிகளிடம் அவற்றை ஒப்படைக்க வேண்டும்" எனக் கூறி தனி நீதிபதியின் உத்தரவை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உறுதி செய்தது.

பட மூலாதாரம், Facebook/EleFriends101ECF
"வனத்துறை எதிர்ப்பு காட்டுவது ஏன்?" - அரசு வழக்கறிஞர் விளக்கம்
"யானைகளைத் திரும்ப ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு காட்டுவது ஏன்?" என, வனத்துறை சார்பாக ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.சீனிவாசனிடம் பிபிசி தமிழ் கேட்டது.
"அதற்கு சில காரணங்கள் உள்ளன. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் திருச்சி எம்.ஆர்.பாளையம் முகாமுக்கு மூன்று பெண் யானைகளும் வந்தன. அப்போது அவற்றுக்கு உடல்ரீதியாக பிரச்னைகள் இருந்தன" என்கிறார் அவர்.
"மருத்துவ அலுவலர் பரிந்துரைப்படி யானைகளை வாகனத்தில் கொண்டு செல்ல முடியாது" எனக் கூறும் டி.சீனிவாசன், "ஒரு யானைக்கு காலில் பிரச்னை (foot ulcer) உள்ளது. மற்றொரு யானைக்கு சுவாச பிரச்னை உள்ளது. இதனை உரிய சான்றுகளுடன் நீதிமன்றத்தில் தெரிவித்தோம்" எனக் கூறினார்.
"யானைகளின் உரிமையாளராக சங்கர மடம் உள்ளதை நாங்கள் மறுக்கவில்லை. அதேநேரம், யானைகளின் உடல்நலன் குறித்து மருத்துவரீதியான காரணங்களை முன்வைத்தோம்" என அவர் குறிப்பிட்டார்.
இதனை ஆய்வு செய்வதற்கு மூன்று மருத்துவ நிபுணர்களின் பெயர்களை நீதிமன்றம் குறிப்பிட்டதாகக் கூறும் டி.சீனிவாசன், "அவை வாகனத்தில் கொண்டு செல்லக் கூடிய அளவுக்கு தகுதியுடன் இல்லை என கால்நடை அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்" என்கிறார்.
ஆனால், தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்த பிறகு ஆய்வு நடத்தி அறிக்கை அளித்ததாகக் கூறி ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு, சங்கர மடத்திடம் யானைகளை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டதாக அவர் தெரிவித்தார்.

திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் கால்நடைகளுக்கு தேவையான நவீன மருத்துவ வசதிகள் உள்ளதாகக் கூறும் டி.சீனிவாசன், "அங்கு மேம்பட்ட வசதிகள் உள்ளன. ஆனால், கோனேரிபாளையத்தில் தற்போது தான் கால்நடை மருத்துவ சிகிச்சையை கொண்டு வரவுள்ளனர்" என்கிறார்.
"ஆகவே, யானைகளின் நலனுக்கு அந்த இடம் சரியாக இருக்காது என நீதிமன்றத்தில் கூறினோம். அதனை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஏற்கவில்லை" எனவும் அவர் தெரிவித்தார்.
"இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வதற்கு வாய்ப்புள்ளதா?" என பிபிசி தமிழ் கேட்டது. "அதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும்" என அவர் கூறினார்.
பெண் யானைகள் மீண்டும் மடத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருவது குறித்து, சங்கர மடத்தின் மேலாளர்களில் ஒருவரான வைத்தியநாதனிடம் பிபிசி தமிழ் பேசியது.
"யானைகளை எங்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றத்தில் முறையிட்டோம். அதையேற்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மடத்துக்குச் சொந்தமான இடத்தில் வைத்து அவற்றைப் பராமரிக்க உள்ளோம்" எனக் கூறிய அவர், "இதற்குமேல் ஊடகங்களிடம் வேறு எதுவும் பேச இயலாது" என்று மட்டும் பதில் அளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












