டிரம்பின் அமைதி வாரியத்தில் பாகிஸ்தான் இணைவது இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்?

டிரம்பின் அமைதி வாரியம், இந்தியா - பாகிஸ்தான், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை 'அமைதி வாரியம்' எனப்படும் முயற்சியைத் தொடங்கினார்.

காஸாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்தத்தை நிரந்தரமாக்குவதும், பாலத்தீனப் பகுதியில் ஒரு இடைக்கால அரசாங்கத்தைக் கண்காணிப்பதும் இதன் நோக்கம் என்று டிரம்ப் கூறுகிறார்.

இந்த வாரியத்தில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பல்வேறு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இருப்பினும், இந்தியா இதனை ஏற்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இஸ்ரேலும் ஆரம்பத்தில் இதற்கு உடன்படவில்லை என்றாலும், பின்னர் ஏற்றுக்கொண்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தனது 'அமைதி வாரியத்தை' முறைப்படி தொடங்கியபோது, அந்த நிகழ்வில் பங்கேற்காத நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இந்த வாரியத்தில் இணைவதற்காக டிரம்பால் அழைக்கப்பட்ட பல்வேறு உலகத் தலைவர்களில் பிரதமர் மோதியும் ஒருவர்.

டிரம்பின் அழைப்பை ஏற்றுக்கொண்ட நாடுகளில் பாகிஸ்தான், துருக்கி, சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அடங்கும்.

இந்த வாரியத்தில் இணைய 59 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளதாக டிரம்ப் கூறினார், ஆனால் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் போது நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் 19 நாடுகளின் பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அங்கு உரையாற்றிய டிரம்ப், "நீங்கள் உலகின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்கள். இதில் அஜர்பைஜான் முதல் பராகுவே மற்றும் ஹங்கேரி வரையிலான நாடுகள் அடங்கும். இது அமெரிக்காவிற்கானது மட்டுமல்ல, இது முழு உலகிற்குமானது. காஸாவில் நாம் வெற்றிகரமாகச் செய்தது போல, இதை மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்த முடியும் என்று நான் நினைக்கிறேன்," என்று கூறினார்.

டிரம்பின் அமைதி வாரியம், இந்தியா - பாகிஸ்தான், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுக்கு இக்கட்டான நிலை

'அமைதி வாரியத்தில்' இணைவது பற்றிய இந்தியாவின் முடிவெடுக்காத தன்மை குறித்து ஒரு விவாதம் நடந்து வருகிறது. சிலர் இதில் சேர வேண்டும் என வாதிடுகின்றனர், அதே நேரத்தில் பலர் அதை எதிர்க்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் சையத் அக்பருதீன், ஜனவரி 23 அன்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் எழுதிய கட்டுரையில், இந்தியா இதில் பங்கேற்கக் கூடாது என்பதற்கான மிக முக்கியமான காரணங்களை குறிப்பிட்டுள்ளார்.

"கடந்த ஆண்டு நவம்பரில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2803-லிருந்து டிரம்பின் 'அமைதி வாரியம்' முற்றிலும் மாறுபட்டது. அந்த ஐ.நா தீர்மானம், காஸாவின் இடைக்கால நிர்வாகத்தை மேற்பார்வையிட மட்டுமே ஒரு வாரியத்திற்கு அதிகாரம் அளித்தது"என அக்பருதீன் எழுதியிருந்தார்.

மேலும், "ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் தெளிவான வரம்புகளை நிர்ணயித்திருந்தது. அதன் காலக்கெடு டிசம்பர் 31, 2027 ஆகும். ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அது கட்டாயப்படுத்தியது. ஒரு தற்காலிகத் தீர்வு, நிரந்தரமான உலகளாவிய மாதிரியாக மாறிவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்தவே இந்த வரம்புகள் விதிக்கப்பட்டன"என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

"ஆனால் டிரம்பின் 'அமைதி வாரியத்திற்கு' கால வரம்பு எதுவும் இல்லை. இது காஸாவிற்கு அப்பாலும் பயன்படுத்தப்படலாம். இந்த வாரியம் அதன் தலைவரான டிரம்பையே பெரும்பாலும் சார்ந்துள்ளது. இதில் உறுப்பினராக நீடிப்பதற்கான கட்டணம், ஒருமுறை அளிக்கும் பங்களிப்புடன் முடிந்துவிடாமல், நிரந்தர உறுப்பினர் அங்கீகாரம் வரை நீடிக்கிறது. இது ஒரு பொது சர்வதேச நிறுவனத்தை விட ஒரு 'தனியார் கிளப்' போலவே செயல்படக்கூடும். இது டிரம்பின் அதிபர் பதவியை மேலும் வலுப்படுத்துகிறது" என்று அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

"இந்தக் கட்டமைப்பை மோதல் நடக்கும் மற்ற பகுதிகளுக்கும் பயன்படுத்தலாம் என்று ஐ.நா அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது, பலரும் இந்த அமைதி வாரியத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு மாற்றாகப் பார்க்க வழிவகுத்துள்ளது. இந்த வாரியத்தின் சாசனத்தில் கையெழுத்திடும் போது டிரம்ப் அளித்த விரிவான அறிக்கை, அமைதி காக்கும் பணியில் இந்த வாரியத்தின் பங்கு குறித்த வளர்ந்து வரும் சந்தேகங்களைப் பிரதிபலிக்கிறது."

டிரம்பின் அமைதி வாரியம், இந்தியா - பாகிஸ்தான், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

இந்தியா சேர வேண்டும் என்பதற்கான வாதங்கள்

பாலத்தீன அதிகார சபைக்கான இந்தியாவின் முதல் பிரதிநிதியாகவும், ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாகவும் பணியாற்றிய டி.எஸ். திருமூர்த்தி, இந்தியா இந்த வாரியத்தில் சேர வேண்டும் என்று கருதுகிறார்.

"அமைதி வாரியம் என்ற டிரம்பின் அமைப்பானது உண்மையில் ஐ.நா.வுக்கு சவால் விடவில்லை. மாறாக, அதன் வரையறுக்கப்பட்ட பிரதிநிதித்துவத்தைக் கருத்தில் கொண்டால், அது ஜி20 அமைப்புக்கு மட்டுமே சவாலாக இருக்க முடியும். ஜி20 அமைப்பு பொருளாதாரப் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதால், அமைதி வாரியம் உலக அரசியலில் முக்கிய பங்கு வகிக்கக் கூடும்" என்று ஜெர்மன் ஊடகமான டிடபுள்யூவிடம் திருமூர்த்தி கூறினார் .

"எந்தவொரு சர்வதேச தளத்திலும் இந்தியாவின் இருப்பு என்பது எப்போதும் நிதானமான மற்றும் நடைமுறையில் சாத்தியமான ஒன்றாகவே இருந்துள்ளது. இந்தியா தனது சொந்த நலன்களுக்காக வாதிடுவதுடன், பொதுவாக 'குளோபல் சவுத்' நாடுகளின் கவலைகளையும் முன்வைத்து வருகிறது. இந்தியா இந்த வாரியத்தில் சேர்ந்தால், அதன் பங்கு இதிலிருந்து வேறுபடாது என்று நான் நம்புகிறேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கான அச்சுறுத்தல்கள்

நேபாளம் மற்றும் வியட்நாமுக்கான இந்தியாவின் தூதராகப் பணியாற்றிய ரஞ்சித் ராய், டிரம்பின் அமைதி வாரியம் தொடர்பாக முடிவு எடுப்பது இந்தியாவுக்கு எளிதானது அல்ல என்று நம்புகிறார்.

ரஞ்சித் ராய் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், "இந்தியாவின் இக்கட்டான நிலை அதிகரித்துள்ளது. இந்தியா அதை ஏற்றுக்கொண்டாலும் அல்லது நிராகரித்தாலும் அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். டிரம்பின் அமைதி வாரியத்தில் சேருவதில் உள்ள அபாயங்கள் அதிகம் என்று நான் நினைக்கிறேன். முதலாவதாக, டிரம்ப் அதன் தலைவராக இருக்கிறார், அவருடைய செயல்பாடு பரிவர்த்தனை அடிப்படையிலானது என்பதால், அதிலிருந்து நீதியை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இதில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரே மாதிரியான அந்தஸ்து இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஐ.நா பொதுச் சபையில் இருப்பதைப் போல, ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு வாக்கு மட்டுமே உள்ளது. இது ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட போது, அது காஸாவிற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டது, ஆனால் இப்போது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், அது காஸாவிற்கு அப்பாலும் விரிவடையக் கூடும்"என்று விளக்கினார்.

"டிரம்ப் எப்போதும் அதன் தலைவராக இருப்பாரா அல்லது அமெரிக்கா எப்போதும் தலைவராக இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனவே, இதில் இணைவது இந்தியாவுக்கு ஆபத்தானது. முடிவெடுப்பதற்கு முன் இந்தியா இன்னும் பல நாடுகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். பிரதமர் ஏற்கனவே பிரேசில் அதிபருடன் பேசியுள்ளார்."

இந்தியா இதில் சேராவிட்டாலும், அதன் முடிவு மேற்கு ஆசியாவைப் பாதிக்கும் என்பதால் அதன் தாக்கம் இருக்கும் என்று ரஞ்சித் ராய் நம்புகிறார்.

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு, இந்திய புலம்பெயர்ந்தோரின் நலன்கள், கப்பல் போக்குவரத்து வழிகள் மற்றும் முதலீடு ஆகியவற்றிற்கு மேற்கு ஆசியாவில் நிலைத்தன்மை அவசியம்.

அமைதி வாரியத்தின் முடிவு மேற்கு ஆசியாவின் நிலைத்தன்மையைப் பாதித்தால், இந்தியாவின் நலன்கள் நேரடியாகப் பாதிக்கப்படும் என்று ரஞ்சித் ராய் குறிப்பிடுகிறார்.

"இதில் இணைவதன் மூலம், அமைதி வாரியத்தில் எடுக்கும் முடிவுகளை அங்கீகரிக்கும் ஒரு கருவியாக இந்தியா மாறிவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்," என்கிறார் ரஞ்சித் ராய்.

டிரம்பின் அமைதி வாரியம், இந்தியா - பாகிஸ்தான், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கா?

அமெரிக்கா பல ஐக்கிய நாடுகள் அமைப்புகளில் இருந்து வெளியேறி வரும் சூழலில் டிரம்பின் அமைதி வாரியம் வடிவம் பெற்று வருகிறது. இது ஐக்கிய நாடுகள் சபையை தேவையற்ற ஒன்றாக மாற்றுவதற்காக உருவாக்கப்பட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

அமைதி வாரியம் ஒரு ஒற்றை துருவ உலகத்தை (அமெரிக்காவின் ஆதிக்கம் கொண்ட கட்டமைப்பு) மட்டுமே வலுப்படுத்தும் என்ற கவலையும் உள்ளது.

மறுபுறம், இந்தியா அமெரிக்காவின் கூட்டாளியாக இருந்துவிடாமல், தனக்கென ஒரு நிலைப்பாட்டைக் கொண்ட பன்முகத்தன்மை கொண்ட உலகத்தையே ஆதரிக்கிறது.

இதுகுறித்து அக்பருதீன் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எழுதிய கட்டுரையில், "உறுப்பு நாடுகள் அமைதி வாரியத் தலைவரின் அதிகாரத்திற்கு சவால் விட முடியுமா? அழைப்புகள், பணம் மற்றும் தனிப்பட்ட செல்வாக்கின் அடிப்படையிலான ஒரு மாதிரியை இந்தியா ஆதரிக்குமா? இந்தியா இந்த வலையில் விழக்கூடாது. வேறொருவரின் திட்டத்தை வெறுமனே வழிமொழிபவராக மட்டுமே தனது பங்கை இந்தியா சுருக்கிக் கொள்ள அனுமதிக்க முடியாது" என்று கருத்து தெரிவித்திருந்தார்.

அமைதி வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர், டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர், அமெரிக்க பாதுகாப்பு துணை ஆலோசகர் ராபர்ட் கேப்ரியல், அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ரோவன் மற்றும் உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா ஆகியோர் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் அமெரிக்க குடிமக்கள் அல்லது டிரம்பிற்கு விசுவாசமானவர்களாகக் கருதப்படுபவர்கள்.

வெளியுறவு விவகார நிபுணரும் ஆய்வாளருமான நிருபமா சுப்ரமணியம், இந்தியா இதில் இணைந்தால் பல ஆபத்துகள் இருப்பதாக கூறுகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "அமைதி வாரியத்தைச் சுற்றி பல கேள்விகள் உள்ளன. இந்தியா இதில் அவசரமாக இணைய முடியாது. எந்த நிபந்தனைகளின் கீழ் உறுப்பு நாடுகள் அதன் சாசனத்திற்குக் கட்டுப்படும்? அதை விளக்கும் அதிகாரம் யாருக்கு இருக்கும்? பல நாடுகள் இந்த வாரியத்தில் சேருவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுள்ளன" என்றார்.

மேலும், "சிலர் டிரம்பின் அழைப்பைத் தங்கள் நாட்டின் முக்கியத்துவத்திற்கான அங்கீகாரமாகப் புரிந்து கொண்டுள்ளனர். மற்றவர்கள் அமெரிக்காவின் எதிர்ப்பிற்குப் பயந்து இணைவார்கள். ஒரு நாட்டின் நலன்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டாலும், வளர்ந்து வரும் சர்வதேச அரங்கிற்குள் நீடிப்பதற்காகவே பலர் இதில் இணைவார்கள்"என்றும் அவர் குறிப்பிட்டார்.

டிரம்பின் அமைதி வாரியம், இந்தியா - பாகிஸ்தான், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் இணைவது இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்?

ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இதில் இணைய எடுத்துள்ள முடிவு, இந்தியாவையும் அவ்வாறே செய்யுமாறு மோதி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கக்கூடும் என்று நிருபமா சுப்ரமணியம் கூறுகிறார்.

ஜனவரி 23-ஆம் தேதி இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழான தி இந்து, இந்த விவகாரம் குறித்து ஒரு தலையங்கம் எழுதியது.

"அமெரிக்க-இந்திய உறவுகளில் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் நுட்பமான நிலை ஆகியவையும், இந்த நிலையில் டிரம்பின் அழைப்பை நிராகரிக்காமல் இருப்பதற்கான காரணங்களாக இருக்கலாம். அவ்வாறு செய்வது பிரெஞ்சு அதிபர் மக்ரோங்கிற்கு நடந்தது போல, டிரம்பின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். கடந்த மாதம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தத் தீர்மானம் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது, ஆனால் ரஷ்யாவும் சீனாவும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை"என்று அந்த தலையங்கத்தில் கூறப்பட்டிருந்தது.

"நடைமுறைச் சாத்தியமோ அல்லது கொள்கையோ இத்தகைய முடிவை அவசரமாக எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை. இந்தியாவின் அந்தஸ்தில் உள்ள ஒரு நாடு, ஒரு செல்வாக்குமிக்க பதவியை இழந்துவிடுவோம் என்ற பயத்திலோ அல்லது அமெரிக்க கோபத்திற்கு இலக்காகிவிடுவோம் என்ற அச்சத்திலோ முடிவெடுக்க முடியாது" என்று அக்கட்டுரை கூறியது.

"ஆரம்பத்தில் அமெரிக்காவின் திட்டங்களுக்கு ஐ.நா ஆதரவு அளித்திருந்தாலும், கசிந்த சாசனத்தின்படி, 'அமைதி வாரியம்' மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதில் காஸா என்ற பெயரே குறிப்பிடப்படவில்லை. டிரம்ப் தன்னைத்தானே தலைவராக நியமித்துக் கொண்டதுடன், தனது தனிப்பட்ட நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை நிர்வாகக் குழுவில் சேர்த்துள்ளார். வெளியிடப்பட்ட சாசனம் மற்ற மோதல்களைத் தீர்ப்பதிலும் இந்த வாரியத்தை ஈடுபடுத்த முன்மொழிகிறது, இது ஐ.நா-விற்கு மாற்றாக இது அமையக்கூடும் என்பதைக் காட்டுகிறது."

"இந்த வாரியத்தில் சேருவதற்கான பாகிஸ்தானின் முடிவு இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும், குறிப்பாக காஷ்மீர் விவகாரத்தை இந்த வாரியம் தீர்க்க முயற்சிக்கும் அமைதித் திட்டங்களில் சேர்க்க டிரம்ப் முடிவு செய்தால் அது சிக்கலாகும். வாரியத்தில் இணைந்த பிறகு, சர்வதேச அமைதி படையில் தனது வீரர்களை அனுப்புவதை இந்தியா எதிர்ப்பதும் கடினமாகிவிடும்"என்றும் அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய டிரம்ப் பலமுறை முன்வந்துள்ளார், ஆனால் இந்தியா தொடர்ந்து எந்தவொரு மூன்றாம் தரப்பின் தலையீட்டையும் நிராகரித்து வருகிறது.

டிரம்ப் இதற்கு முன்பு இருந்த சர்வதேச அமைப்புகளைப் புறக்கணித்து வருவது மக்கள் மத்தியில் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மேற்கத்திய ராணுவக் கூட்டணியான நேட்டோவை நிராகரிக்கிறார். பல ஐக்கிய நாடுகள் அமைப்புகள் உட்பட 60-க்கும் மேற்பட்ட சர்வதேச அமைப்புகளில் இருந்து வெளியேற அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இவை திறமையற்றவை என்றும் அமெரிக்க இறையாண்மைக்கு எதிரானவை என்றும் டிரம்ப் கூறுகிறார். எனவே, அமைதி வாரியம் குறித்து இந்தியா முடிவெடுப்பது எளிதல்ல.

அமைதி வாரியத்தில் தனது விருப்பப்படி செயல்பட வேண்டும் என்ற டிரம்பின் எண்ணத்திற்கு ஒரு உதாரணம் வியாழக்கிழமை காணப்பட்டது.

கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு தனது அமைதி வாரியத்தில் இணைய விடுத்த அழைப்பை டிரம்ப் திரும்பப் பெற்றார்.

டிரம்பின் அமைதி வாரியம், இந்தியா - பாகிஸ்தான், அமெரிக்கா
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"காஸாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான அமைதி ஒப்பந்தத்தை மேற்பார்வையிட டிரம்ப் இந்த அமைப்பை உருவாக்கினார், ஆனால் இப்போது அவர் அதை ஐக்கிய நாடுகள் சபையுடன் போட்டியிடக் கூடிய ஒரு அமைப்பாக விரிவுபடுத்த முயற்சிக்கிறார்"என்று நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டது.

"கார்னியின் அழைப்பு திரும்பப் பெறப்பட்டது, இந்த அமைதி வாரியம் ஒரு சாதாரண சர்வதேச அமைப்பிலிருந்து மிகவும் மாறுபட்டதாக இருக்கும் என்பதற்கான சமீபத்திய அறிகுறியாகும். அங்கு ஒரு சாதாரண அமைப்பில் உறுப்பு நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் மற்றும் வெளிப்படையான விவாதங்கள் ஏற்கப்படும் அல்லது ஊக்குவிக்கப்படும்."

"இதன் சாசனம் அமைப்பின் தலைவரான டிரம்பிற்கு அசாதாரண அதிகாரங்களை வழங்குகிறது. இதில் முடிவுகளை வீட்டோ செய்யும் அதிகாரம், செயல்திட்டத்தை நிர்ணயித்தல், உறுப்பினர்களை நியமித்தல் மற்றும் நீக்குதல், முழு வாரியத்தையும் கலைத்தல் மற்றும் தனது வாரிசை பரிந்துரைத்தல் ஆகிய அதிகாரங்கள் அடங்கும்," என்றும் நியூயார்க் டைம்ஸ் கட்டுரை கூறுகிறது.

அமெரிக்கா வெளிநாட்டு அரசாங்கங்களைக் கவிழ்க்கவும், வெளிநாட்டுப் பகுதிகள் மற்றும் வளங்களைக் கைப்பற்றவும், அண்டை நாடுகளை "அவர்களின் விருப்பத்திற்கு மாறாக" ஆதிக்கம் செலுத்தவும் முடியும் என்ற அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் ஏகாதிபத்திய பார்வையை டிரம்ப் முன்னெடுத்து வரும் நேரத்தில் இந்த வாரியம் நிறுவப்படுகிறது.

அழைப்பை ஏன் ரத்து செய்தார் என்று டிரம்ப் விளக்கவில்லை, ஆனால் இந்த வார தொடக்கத்தில் மார்க் கார்னி டாவோஸில் ஆற்றிய உரையில், அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் உலக ஒழுங்கை விமர்சித்திருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு