"கடன் வாங்கி வீடு கட்டினோம்" கோவையில் இந்த நிலங்களை கைப்பற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது ஏன்?

- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
''எனக்கு இப்போது 82 வயது. கூட்டுறவு சொசைட்டியை நம்பி இடத்தை வாங்கினோம். இந்த தீர்ப்பால் எனது சேமிப்பு மொத்தமாகப் போகவுள்ளது. இனிமேல் உச்ச நீதிமன்றத்துக்குப் போய் மேல் முறையீடு செய்வதற்கு எங்களுக்கு தெம்பும் இல்லை, வசதியும் இல்லை. அரசு என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை. அதனால் நடப்பது நடக்கட்டும் என்று காத்திருக்கிறோம்.'' கோவை பீளமேடு ஆர்.கே.மில் காலனியைச் சேர்ந்த ஆண்டப்பன் கூறிய வார்த்தைகள் இவை.
கோவையில் சாலை, பூங்கா மற்றும் கட்டடம் கட்ட தடை செய்யப்பட்ட பகுதிகள் என ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்களை மனையிடங்களாக மாற்றி விற்பனை செய்வதற்கு தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
''இந்த முறைகேடு புகாரில் தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று'' நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இதில் தொடர்புடைய அலுவலர்கள் அனைவரும் ஓய்வு பெற்றுவிட்டதாகவும், பலர் இறந்துவிட்டதாகவும் கூட்டுறவு வீடு கட்டும் சங்கங்களின் மாவட்டப் பதிவாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.
'ஒரு வீடு...மாதம் 15 ரூபாய்...30 ஆண்டுகளுக்கு தவணை'
கோவை நகரின் மிக முக்கியமான குடியிருப்பு மற்றும் வணிகப்பகுதியாக உள்ள பீளமேடு புதுாரில், கடந்த 1968 ஆம் ஆண்டில் அப்போதிருந்த ராதாகிருஷ்ணன் மில் மற்றும் பயனீர் மில் ஆகிய மில்களில் பணியாற்றிய தொழிலாளர்களுக்காக பீளமேடு தொழிற்கூட பணியாளர்கள் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் என்ற சொசைட்டி உருவாக்கப்பட்டது. அந்த சங்கத்தின் சார்பில் 7.96 ஏக்கர் இடம் வாங்கப்பட்டு, 104 மனையிடங்களாகப் பிரித்து வீடுகள் கட்டி விற்பனை செய்யப்பட்டன.
ஏற்கெனவே மில் அதிகாரிகளுக்காக ஒரு மனைப்பிரிவு உருவாக்கப்பட்ட நிலையில், பணியாளர்களுக்காக அமைக்கப்பட்ட இந்த குடியிருப்புக்கு ஆர்.கே.மில் 'பி' காலனி என்று பெயரிடப்பட்டது. ஆனால், அன்றிருந்த பொருளாதாரச் சூழ்நிலையில் 96 பேர் மட்டுமே, வீடு கட்ட முன் வந்ததாகக் கூறுகிறார், ஆர்.கே.மில் பி காலனி குடியிருப்போர் நலச்சங்கத்தைச் சேர்ந்த மேகநாதன்.

பிபிசி தமிழிடம் பேசிய மேகநாதன், ''மில் தொழிலாளிகள் என்பதால் மாத தவணையில்தான் கூட்டுறவு சொசைட்டியால் வீடு கட்டித்தரப்பட்டது. ஆனால், 1981–82 ஆம் ஆண்டில் ராதாகிருஷ்ணன் மில் மூடப்பட்டது. வேலையிழந்த பலரால் அதை கட்ட முடியவில்லை.'' என்றார்.
''1989 ஆம் ஆண்டில் அப்போதிருந்த அரசு மீதித்தொகையை மானியமாக வழங்க முன்வந்தது. மில்கள் மூடப்பட்டதால் எல்லோரும் உறுப்பினர் ஆகலாம் என்று கூட்டுறவு சங்கத்தின் விதிமுறை மாற்றப்பட்டு, இங்கிருந்த அலுவலகமும் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. அதன்பின்பே சாலை, பொது ஒதுக்கீடு இடத்தை விற்கும் முறைகேடு துவங்கியது.'' என்கிறார் மேகநாதன்.
நகர ஊரமைப்புத்துறை விதிமுறைகளின்படி, மனைப்பிரிவின் மொத்தப் பரப்பளவில் 10 சதவிகித இடத்தை பொது ஒதுக்கீட்டு இடமாகவும், சாலைக்குரிய இடத்தை அதற்காகவும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். இந்த மனைப்பிரிவுக்கு நகர ஊரமைப்புத்துறை அனுமதி தரப்பட்டபோது, இந்த பகுதி சிங்காநல்லுார் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்தது.
''ஆனால், அந்த இடங்களை கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் முறைப்படி நகராட்சியிடம் ஒப்படைக்கவில்லை.''என்கிறார் மேகநாதன்
1981-ஆம் ஆண்டில், கோவை மாநகராட்சியாக அந்தஸ்து உயர்த்தப்பட்டு, கோவையுடன் சிங்காநல்லுார் நகராட்சி இணைக்கப்பட்ட பின்னும் மாநகராட்சி நிர்வாகத்திடம் இந்த இடங்கள் ஒப்படைக்கப்படவில்லை.
''சாலை, பூங்காவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடம், 1991–1996 ஆகிய ஐந்தாண்டுகளில் மனையிடமாக மாற்றப்பட்டு, 15 பேருக்கு முறைகேடாக விற்பனை செய்யப்பட்டது. சாலைக்குரிய இடத்தை வாங்கிய ஒருவர், வீடு கட்டுவதற்காக மாநகராட்சிக்குச் சென்றபோதுதான், அது சாலை இடம் என்று திட்ட அனுமதி வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறி, மாநகராட்சி அதை நிராகரித்தது. அப்போதுதான் அந்த இடம் சாலை இடம் என்பதும், அதேபோல, மற்ற இடங்களும் விற்கப்பட்டு இருப்பதும் குடியிருப்புவாசிகளுக்குத் தெரியவந்தது.'' என்கிறார் மேகநாதன்.
பூங்கா, சாலைக்குரிய இடங்களை விற்றுவிட்ட நிலையில், 2000 ஆம் ஆண்டில் உயர் மின்னழுத்தக் கம்பிகள் கடக்கும் பகுதியை பொது ஒதுக்கீட்டு இடமாகக் காண்பித்து, மாநகராட்சியிடம் தானப்பத்திரம் ஒப்படைக்கப்பட்டதாகவும், ஆனால் 1968 ஆம் ஆண்டு திட்ட அனுமதி வரைபடத்திலுள்ளபடி பொது ஒதுக்கீட்டு இடத்தை ஒப்படைக்குமாறு கூறி, அதை மாநகராட்சி திருப்பி அனுப்பியதாகவும் கூறும் தமிழ்நாடு ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்க செயலாளர் தியாகராஜன், அந்த ஆவணங்களையும் பிபிசியிடம் பகிர்ந்தார்.
''அதன்பின் மாநகராட்சி தீர்மானம், உள்ளூர் திட்டக்குழுமம் எதுவுமேயின்றி, நகர ஊரமைப்பு இயக்குநருக்கு சொசைட்டி சார்பில் 2003 ஆம் ஆண்டில் ஒரு கடிதம் தரப்பட்டது. ஏற்கெனவே 10 சதவிகித இடம் பொது ஒதுக்கீட்டு இடமாக தரப்பட்டுவிட்டதால், சமுதாயப் பயன்பாட்டுக்குரிய இடத்தை மனையிடமாக மாற்ற ஒப்புதல் கோரப்பட்டது.'' என்கிறார் தியாகராஜன்.
அந்த கடிதத்தை வைத்து நகர ஊரமைப்பு இயக்குநரால் திருத்திய வரைபடத்துடன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு அரசாணைக்குப் பரிந்துரைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் சமுதாயப் பயன்பாட்டுக்கான இடத்தை மனைப்பிரிவாக மாற்றிக்கொள்ள 2005 ஆம் ஆண்டில் ஓர் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணையில், ''சாலைக்குரிய இடங்கள், பூங்கா, விளையாட்டு மைதானம் ஆகிய பொது ஒதுக்கீட்டு இடங்கள் 1968 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட திட்ட அனுமதிப்படியே இருக்க வேண்டும். அதைத் தவிர்த்து, மீதமுள்ள சமுதாயப்பயன்பாட்டு இடத்தை மனையிடமாக மாற்றிக்கொள்ளலாம்.'' என்று கூறப்பட்டிருந்தது.

அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவு
இந்த அரசாணையை எதிர்த்து, ஆர்.கே.மில் பி காலனி குடியிருப்பைச் சேர்ந்த துரைராஜ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் 2007 ஆம் ஆண்டில் மனு தாக்கல் செய்தார். அவ்வழக்கில் 2019 ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தனி நீதிபதி தண்டபாணி வழங்கிய அந்த 62 பக்கத் தீர்ப்பில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்ட அரசாணை ரத்து செய்யப்பட்டது. அத்துடன் அந்த இடங்களை விற்ற கிரயப்பத்திரங்கள் செல்லாது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
நகர ஊரமைப்பு விதிகளுக்கு முரணாக அரசாணை வெளியிட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு அதிகாரமில்லை என்று அதில் குறிப்பிட்டுள்ள நீதிபதி, மனையிடங்களை வாங்கியவர்களுக்கு அதற்கான தொகையை கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் திரும்பித்தர வேண்டுமென்றும் கூறியிருந்தார்.
அரசாணையில் குறிப்பிடப்பட்ட சமுதாயப் பயன்பாட்டுக்குரிய இடத்தில் 7 மனையிடங்கள், சாலைப்பகுதி மற்றும் கட்டடம் கட்ட தடை செய்யப்பட்ட பகுதி என மொத்தம் 30 சென்ட் இடங்கள் விற்கப்பட்டிருந்தன. வழக்கு நடந்த காலகட்டத்தில் சாலைப்பகுதியில் 6 வீடுகளும், கட்டடம் கட்ட தடை செய்யப்பட்ட மின்னழுத்த கோபுரம் அமைந்துள்ள பகுதியில் ஒரு வீடும் கட்டப்பட்டுவிட்டன. வழக்கில் இந்த மனையிடங்களை வாங்கிய 14 பேரும் சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்கள் இந்த தீர்ப்புக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவை வாங்கியதுடன், அந்த தீர்ப்புக்கு எதிராக 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்தனர்.
தனித்தனி நபர்களால் போடப்பட்ட வழக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு, வழக்கு நடந்து வந்தது. அந்த வழக்கில் கடந்த நவம்பர் 18 ஆம் தேதியன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், முகம்மது சஃபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதி தண்டபாணியின் தீர்ப்பை உறுதி செய்துள்ள இந்த அமர்வு, பொது ஒதுக்கீட்டு இடத்தை மனையிடமாக மாற்றி விற்பனை செய்த கூட்டுறவுத்துறை மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது.

பொது பயன்பாட்டுக்குரிய இடங்களை 3 மாதங்களுக்குள் மாநகராட்சி நிர்வாகம் மீட்க வேண்டுமென்று கூறியுள்ள இந்த அமர்வு, இந்த முறைகேட்டால் கூட்டுறவு சங்கத்துக்கு ஏற்பட்ட நிதியிழப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து வசூலிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. இதனால் சாலை மற்றும் பூங்கா இடங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க வேண்டிய கட்டாயம் மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
மனைப்பிரிவு உருவாக்கிய காலத்தில் புறநகர் பகுதியாக இருந்த இந்த குடியிருப்புப் பகுதி, இப்போது நகரின் மிக முக்கியமான பகுதியாக மாறியுள்ளது. அப்போது 5 சென்ட் இடத்துக்கு ரூ.25 ஆயிரம் என்று மதிப்பு நிர்ணயித்து தவணை வசூலிக்கப்பட்டது. தற்போது வழிகாட்டி மதிப்பே அதிகமாக உள்ள நிலையில், இப்பகுதியில் ஒரு சென்ட் பரப்பின் மதிப்பு ரூ.25 லட்சத்துக்கும் அதிகம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த தகவலை பிபிசி தமிழால் சுயாதீனமாக உறுதி செய்ய இயலவில்லை.
பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்க செயலாளர் தியாகராஜன், ''இரு வழக்குகளும் மொத்தம் 18 ஆண்டுகள் நடந்துள்ளன. சாலை, பொது ஒதுக்கீட்டு இடம் போன்ற இடங்களை வாங்கினால் அரசாணையே இருந்தாலும் அந்த இடங்கள் எப்போதாவது கைவிட்டுப்போய்விடும் என்ற உண்மையை பொதுமக்களுக்கு இந்த தீர்ப்பு மீண்டும் உணர்த்தியுள்ளது.'' என்றார்.
நீதிமன்ற தீர்ப்பின்படி, கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் மனையிடங்களை விற்றபோது செலுத்திய தொகையை மட்டுமே, மனையிடங்களை வாங்கியவர்களுக்கு சங்கம் வழங்கவேண்டும். அப்போது 5 சென்ட் இடத்துக்கு ரூ.25 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டதால் அந்தத் தொகை மட்டுமே வழங்கப்படும் என்ற நிலையில், மனையிடங்களை வாங்கியவர்கள், வீடு கட்டியவர்கள் செய்வதறியாமல் உள்ளனர்.

சாலைக்குரிய இடத்தை மனையிடமாக மாற்றியதை வாங்கி வீடு கட்டியுள்ள மதன் இதுபற்றி பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசினார். அவர் கூறுகையில், ''நான் 1994 ஆம் ஆண்டில் 6 சென்ட் இடம் வாங்கினேன். கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் என்பது அரசின் அங்கீகாரம் பெற்ற அமைப்பு என்று நம்பி வாங்கியதோடு, உரிய கட்டணம் செலுத்தி பத்திரப்பதிவு செய்துள்ளேன். முறைப்படி மாநகராட்சியிடம் கட்டட அனுமதி பெற்று, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டியிருக்கிறேன்.'' என்றார்.
''அரசாணை வந்த பின்பு இடத்துக்கு பாதுகாப்பு கிடைக்குமென்று கருதினோம். தற்போது வந்துள்ள தீர்ப்பு, எங்கள் குடும்பங்களின் ஒட்டுமொத்த நிம்மதியையும் பறித்துள்ளது. பல நாட்களாக துாக்கமின்றித் தவிக்கிறோம். மேல் முறையீடு செய்வதற்கு யாரும் ஒருங்கிணைவதாகத் தெரியவில்லை. இப்போது வரையிலும் என்ன செய்வதென்று எந்த முடிவையும் எடுக்கவில்லை.'' என்றார் மதன்.
மதன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தற்போதைய நிலையே தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இருந்த போதிலும் வீடுகள் கட்டப்படாமல் இருந்த சுமார் 40 சென்ட் நிலத்தை கைப்பற்றி வேலியிட்ட மாநகராட்சி, இந்த நிலம் மாநகராட்சிக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகை வைத்துள்ளது.
மனையிடத்தை வாங்கி இதுவரை வீடு கட்டாமலிருக்கும் ஆண்டப்பன் என்ற 82 வயது முதியவரும் ஏறத்தாழ இதே கருத்தை பிபிசி தமிழிடம் பகிர்ந்தார். இவர்கள் உட்பட சாலை, பூங்கா, தடை செய்யப்பட்ட பகுதியில் வீடு கட்டியிருப்பவர்கள், மனையிடம் வாங்கியோர் பலரும், அடுத்தகட்டமாக என்ன செய்வதென்று முடிவெடுக்க முடியாமலிருப்பதாகத் தெரிவித்தனர்.
இந்த மனைப்பிரிவை உருவாக்கிய கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் இப்போது செயல்படவில்லை என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வேறு சங்கத்துடன் இணைக்கப்பட்டுவிட்ட நிலையில், ராமநாதன் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் பாலகிருஷ்ணன்தான், அந்த சங்கத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். அவரிடம் இதுபற்றி பிபிசி தமிழ் கேட்டபோது, ''நான் கூடுதல் பொறுப்பு வகிக்கிறேன். இந்த தீர்ப்பு குறித்து கூட்டுறவுத்துறை மாவட்டப் பதிவாளர்தான் முடிவெடுக்க வேண்டும்.'' என்றார்.

உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், இந்த முறைகேட்டில் ஈடுபட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் பிற அரசுத்துறை அதிகாரிகள் மீதும், துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1992-லிருந்து 1996 வரை பணியாற்றிய தனி அலுவலர் நடராஜன், செயலாளராக இருந்த சிவானந்தம் ஆகியோருக்கே இந்த முறைகேட்டில் அதிக பங்கு உள்ளது என்பது குடியிருப்போர் நலச்சங்கத்தினரின் குற்றச்சாட்டாக உள்ளது.
ஆனால், முறைகேடாக மனையிடங்கள் விற்ற காலத்தில் இருந்த யாருமே இப்போது பணியில் இல்லை என்கின்றனர் கூட்டுறவுத்துறை அதிகாரிகள்.
பிபிசி தமிழிடம் இதுபற்றி விளக்கிய கோவை மாவட்ட கூட்டுறவு வீடு கட்டும் சங்கங்களின் மாவட்டப் பதிவாளர் செந்தில்நாதன், ''அப்போது பணியிலிருந்த அலுவலர்கள் அனைவருமே ஓய்வு பெற்றுவிட்டனர். பலர் இறந்துவிட்டனர். சிவானந்தம் உட்பட 3 பேர் மட்டுமே இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஆனால் யாருமே இப்போது பணியில் இல்லை. அது மட்டுமின்றி, இவர்கள் மீது ஏற்கெனவே வணிக குற்றப்புலனாய்வுப் பிரிவு சார்பில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.'' என்றார்.
''தற்போது வந்துள்ள தீர்ப்பின்படி, இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. சட்டரீதியாக ஆலோசித்த பின்பே முடிவெடுக்க முடியும். அந்த மனைப்பிரிவை உருவாக்கிய சங்கம் இப்போது செயல்பாட்டிலேயே இல்லை. அதன் கணக்கு பூஜ்யமாகவுள்ளது. மனையிடத்தை விற்ற தொகையைத்தான் நீதிமன்றம் தர உத்தரவிட்டுள்ளது. அது குறைவாக இருந்தாலும் அந்த சங்கமே செயல்படாமலிருக்கும் நிலையில் அந்தத் தொகையையும் எப்படி திருப்பிக் கொடுப்பது என்பது பற்றியும் ஆலோசிக்க வேண்டியுள்ளது.'' என்றார் மாவட்டப் பதிவாளர் செந்தில் நாதன்.
கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் பிற அரசுத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். முறைகேடாக விற்கப்பட்ட மனையிடங்களுக்கு ஆதரவாக வெளியிடப்பட்ட அரசாணைக்கு பரிந்துரை செய்த அப்போதைய நகர ஊரமைப்பு இயக்குனரும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஜீவரத்தினம் கடந்த ஆண்டில் மரணமடைந்துவிட்டார்.

பட மூலாதாரம், UGC
இதே தீர்ப்பில் சாலை, பொது ஒதுக்கீட்டு இடம் மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கட்டியுள்ள கட்டடங்களை அகற்றி நிலங்களை 3 மாதங்களுக்குள் முழுமையாக மீட்க வேண்டுமென்று மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபற்றி கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனை பலமுறை தொடர்பு கொண்டபோதும் அவரிடம் பதில் பெற முடியவில்லை.
மாநகராட்சி நகர அமைப்பு அலுவலர் ராஜசேகரனிடம் இதுபற்றி பிபிசி தமிழ் கேட்டபோது, ''வாக்காளர் சிறப்பு திருத்தப்பணிகளில் எல்லோரும் பிஸியாக இருப்பதால் இந்த தீர்ப்பு பற்றி தெரியவில்லை. தீர்ப்பை முழுமையாகப் பார்த்துவிட்டு, தேவையான சட்ட ஆலோசனைகளைப் பெற்ற பின்பு, உரிய காலத்துக்குள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார்.
கோவையிலேயே இதுபோன்று கூட்டுறவு வீடு கட்டும் சங்கங்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு மனைப்பிரிவுகளிலும் பொது ஒதுக்கீட்டு இடங்கள் மனையிடங்களாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டுகிறார் ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்க செயலாளர் தியாகராஜன்.
''இந்த தீர்ப்பு, தமிழகம் முழுவதற்கும் பொருந்துமென்று கூறப்பட்டுள்ளது. கோவையில் ராமநாதபுரம், சிங்காநல்லுார், ராமலிங்க நகர், பாரதி நகர் என, 80க்கும் மேற்பட்ட கூட்டுறவு வீடு கட்டும் சங்கங்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு மனைப்பிரிவுகளிலும் முறைகேடாக மனையிடங்கள் விற்கப்பட்டுள்ளன. அந்த இடங்களையும் மாநகராட்சி நிர்வாகம் மீட்க வேண்டும். அரசு நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பு பூஜ்யம் என்று நிர்ணயிப்பதைப் போல ரிசர்வ் சைட்களுக்கும் நிரணயிக்க வேண்டும்.'' என்கிறார் தியாகராஜன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












