பாகிஸ்தானில் தயாராகும் போர் விமானத்தை வாங்க இந்த நாடுகள் ஆர்வம் காட்டுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஷயிஸ்டா பாரூக்கி
பாகிஸ்தான் தனது பாதுகாப்பு உபகரணங்களின் ஏற்றுமதி மற்றும் ராணுவக் கூட்டாண்மைகளைத் தீவிரப்படுத்தி வருவதாகத் தெரிகிறது.
இதன் மூலம் உலக அரசியல் சூழலில் செல்வாக்கையும் பொருளாதார ஆதாயங்களையும் பெற முடியும் என்று பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது.
முக்கிய பாகிஸ்தானிய ஊடகங்களின்படி, 2025-ஆம் ஆண்டில் லிபிய தேசிய ராணுவத்துடன் 4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தத்தை உறுதி செய்த பிறகு, தற்போது பல நாடுகளுடன் 13 முதல் 15 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் குறித்து பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பேச்சுவார்த்தையில் உள்ள ஒப்பந்தங்களில், சூடானுடனான 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் விமான ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் உள்ளதாக ஜனவரி 10-ஆம் தேதி வெளியான 'டெய்லி டைம்ஸ்' நாளிதழ் செய்தி கூறுகிறது.
ஆயுத விற்பனைக்கு அப்பாற்பட்டு, சௌதி அரேபியா, துருக்கி, லிபியா மற்றும் சூடான் உள்ளிட்ட பல இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளுடன் பயிற்சித் திட்டங்களை விரிவுபடுத்துதல் மற்றும் பரந்த ராணுவ ஒத்துழைப்பு கட்டமைப்புகள் மூலம் ஆழமான பாதுகாப்பு உறவுகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது.
என்ன நடக்கிறது?
பாகிஸ்தான் இதுவரை இல்லாத அளவில், மிகப்பெரும் திட்டங்களோடு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
சுமார் 13 முதல் 15 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதி ஒப்பந்தங்கள் மற்றும் ராணுவக் கூட்டாண்மை ஒப்பந்தங்கள் தற்போது பேச்சுவார்த்தை நிலையில் உள்ளன என்று அந்நாட்டின் ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
சௌதி அரேபியா, வங்கதேசம் மற்றும் இந்தோனீசியா போன்ற நாடுகளுடன் பாகிஸ்தான் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது.
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பல நாடுகள் பாகிஸ்தானின் போர் விமானங்கள், டிரோன்கள் மற்றும் பிற ராணுவ உபகரணங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன என்று உள்ளூர் மற்றும் பிராந்திய ஊடகங்களில் வெளியான சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு முக்கிய உந்துதலாக இருப்பது பாகிஸ்தான் மற்றும் சீனா இணைந்து தயாரித்த ஜேஎஃப் -17 போர் விமானங்கள் ஆகும்.
வங்கதேசம் சுமார் 48 ஜேஎஃப் - 17 போர் விமானங்களை வாங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது.
இந்தோனீசியா கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 40 போர் விமானங்களை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என சமீபத்திய செய்திகள் கூறுகின்றன.
ஏற்கனவே நெருங்கிய பாதுகாப்பு கூட்டாளியாக இருக்கும் சௌதி அரேபியா, தான் வழங்கி வரும் 2 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஆதரவை ஜேஎஃப் 17 போர் விமானங்கள் வாங்குவதற்காக மாற்றுவது குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் இதுகுறித்துப் பேசுகையில், போர் விமானங்களின் விற்பனைக்காக பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதை உறுதிப்படுத்தினார்,
இருப்பினும் அவர் கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை.
பாகிஸ்தானின் உந்துதலுக்குப் பின்னுள்ள காரணம் என்ன?
கடந்த ஆண்டு இந்தியாவுடன் ஏற்பட்ட ராணுவ மோதலின் போது பாகிஸ்தான் வெளிப்படுத்திய செயல் திறன், அதன் பாதுகாப்புத் தொழில்துறைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்ததுடன், உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் மீதான கவன ஈர்ப்பை அதிகரித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதலின் போது, பாகிஸ்தான் தனது சொந்த தயாரிப்புகள் மற்றும் சீனாவுடன் இணைந்து தயாரித்த ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுத அமைப்புகளைப் பயன்படுத்தியது.
பின்னர் இவை போர்க்களத்தில் சோதிக்கப்பட்டவை என்று விளம்பரப்படுத்தப்பட்டன.
"பாகிஸ்தான் இதுவரை பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்யக் கூடிய, பெரிய நாடாக இருந்ததில்லை. இருப்பினும், இந்தியாவுடனான சமீபத்திய மோதல் ஒரு எதிர்பாராத வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பாகிஸ்தான் தனது உள்நாட்டுத் தயாரிப்புகளை உலகிற்கு காட்சிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது" என்று முன்னணி ஆங்கில நாளேடான டான் ஜனவரி 19 அன்று வெளியிட்ட கட்டுரையில் கூறியது.
கராச்சியைச் சேர்ந்த 'கே-ட்ரேட் செக்யூரிட்டீஸ்' என்ற ஆய்வு நிறுவனம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், இந்த மோதலின் "வெற்றிக்குப் பிறகு", பாகிஸ்தானின் ராஜ்ஜீய அந்தஸ்து பெருமளவு உயர்ந்துள்ளதாகவும், இது உலக அரசியல் ஒப்பந்தங்கள் மற்றும் பாதுகாப்பு உடன்படிக்கைகளுக்கு வழிவகுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறைக்குக் கிடைத்துள்ள இந்த நற்பெயர் குறித்து ராணுவ சார்பு கொண்ட நாளிதழான 'பாகிஸ்தான் அப்சர்வர்' ஜனவரி 14-ஆம் தேதி கூறுகையில், "பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மீது சர்வதேச அளவில் அதிகரித்து வரும் ஆர்வம், அந்நாட்டின் பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிக்கும் திறன் மற்றும் தொழில்முறைத் தகுதிக்குக் கிடைத்த சான்றாகும்" என்று கூறியது.
"ஜனவரி 14-ஆம் தேதியிட்ட உருது நாளிதழான 'ஜஸாரத்' தனது செய்தியில், "சமீபத்திய ஆண்டுகளில், பாகிஸ்தான் விமானப்படையின் செயல்பாடுகளும், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நவீன தொழில்நுட்பங்களும் பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிக்கும் துறையில் பாகிஸ்தானை ஒரு வலிமையான நாடாக நிலைநிறுத்தியுள்ளன" என்று கூறுகிறது.
'தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்' நாளிதழின் ஜனவரி 14-ஆம் தேதி அறிக்கையின் படி, மற்ற நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் நாடுகள், தங்கள் விநியோகஸ்தர்களை மாற்றியமைக்க விரும்பினால், அவர்களுக்கு பாகிஸ்தானின் பாதுகாப்பு உபகரணங்கள் குறைந்த செலவு பிடிக்கும் சிறந்த மாற்றாக இருக்கும் என்று பாகிஸ்தான் சந்தைப்படுத்தி வருகிறது.
இதனை முக்கியமாகக் கருத வேண்டியதன் அவசியம் என்ன?
இந்த திட்டமிடப்பட்ட ஏற்றுமதிகள், ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலான ஆயுத உற்பத்தியாளராக இருந்த பாகிஸ்தான், பாதுகாப்புச் சந்தையில் அதிகச் செயல்பாடுடன் ஈடுபடும் நாடாக மாற முயல்வதை வெளிப்படுத்துகின்றன.
வரலாற்று ரீதியாகப் பார்த்தால், பாகிஸ்தான் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றுமதி செய்வதில் ஒரு சிறிய பங்கு வகித்து வந்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
2024ஆம் ஆண்டில் அதன் அதிகபட்ச ஆயுத ஏற்றுமதி மதிப்பு வெறும் 2.24 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்ததாக, சர்வதேச வர்த்தக மையத்தின் தரவுகளை மேற்கோள் காட்டி டான் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
ஜனவரி 6-ஆம் தேதி பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், பாதுகாப்பு உபகரணங்களுக்கான கொள்முதல் ஆணைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியுதவி பெற வேண்டிய அவசியம் நாட்டுக்கு வராமல் போகலாம் என்று ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தார்.
ஜனவரி 15-ஆம் தேதி வெளியான பிசினஸ் ரெக்கார்டர் நிதி நாளிதழ், எதிர்பார்க்கப்படும் 13 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள விற்பனை, பாகிஸ்தானின் வெளிநாட்டு நாணய கையிருப்பை 80 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்தக்கூடும் என்றும், 2029 ஆம் ஆண்டுக்குள் 60 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற தேசிய ஏற்றுமதி இலக்கை அடைய உதவக்கூடும் என்றும் குறிப்பிட்டது.
ஆனால், 'டான்' நாளிதழ் ஜனவரி 19-ஆம் தேதி வெளியிட்ட தனது தலையங்கத்தில் ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதில், "பாதுகாப்புத் துறை சார்ந்த ஏற்றுமதிகள் மட்டுமே சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு தேவையற்றது என்ற நிலையை உருவாக்கும் அளவிற்கு வருவாயை ஈட்டித்தரும் என்று நம்புவது, வெறும் பகற்கனவு மட்டுமே" என்று குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, இந்திய செய்தித் தளமான தி பிரிண்ட், பாதுகாப்பு தொடர்பான ராஜ்ஜீய முயற்சிகள் மூலம் தனது மூலோபாயச் செல்வாக்கை விரிவுபடுத்த பாகிஸ்தான் நோக்கம் கொண்டுள்ளதாக குறிப்பிட்டது.
அதேபோல், மற்றொரு இந்திய செய்தித் தளமான சிஎன்என் நியூஸ் 18 வெளியிட்ட செய்தியில், பெயர் குறிப்பிடாத பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி, பாகிஸ்தானின் புதிய "பாதுகாப்பு ராஜ்ஜீயம்" என்ற கொள்கை, நிச்சயமற்ற சூழ்நிலைகளை எதிர்கொள்கின்ற இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளுக்கு நம்பகமான ஆயுத சப்ளையராக தன்னை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டதாக தெரிவித்தது.
உலகளவிலான தாக்கங்கள் என்ன?
ஆயுத ஏற்றுமதி மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கான முன்னெடுப்புகள் உட்பட, பாகிஸ்தானின் விரிவடைந்து வரும் ராணுவ ரீதியான அணுகுமுறைகள் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் வேறு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த சில ஆய்வாளர்களும் பிராந்திய ஊடகங்களும் குறிப்பிட்டுள்ளன.
டிசம்பர் 2, 2025 அன்று டான் இதழில் வெளியான ஒரு கட்டுரை, மத்திய கிழக்கு பாதுகாப்பு கட்டமைப்பில் அந்த பிராந்தியத்தில் உள்ள "இந்திய செல்வாக்கிற்கு" ஈடுகொடுக்கும் வகையில், ஒரு "பெரிய மூலோபாய பங்கை" வகிப்பதை பாகிஸ்தான் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டது.
இருப்பினும், சிறிய அரபு நாடுகள் சௌதி அரேபியாவின் ஆதிக்கம் குறித்து கவலையடைந்துள்ளதாகவும், சௌதியுடன் பாகிஸ்தான் நெருக்கமாக இணைவது "பாகிஸ்தானுக்கு ராஜ்ஜீய மற்றும் பொருளாதார சிக்கல்களை உருவாக்கக்கூடும்" என்றும் அந்த கட்டுரை எச்சரித்துள்ளது.
அதேபோல், ஜனவரி 18-ஆம் தேதி பாகிஸ்தான் டுடே நாளிதழ் வெளியிட்ட கட்டுரை ஒன்று, சௌதி அரேபியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது "பாகிஸ்தான்-இரான் உறவுகளுக்கு ஆபத்தானது மட்டுமல்லாமல், பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு இல்லாத மத்திய கிழக்கு மோதல்களிலும் அதனை ஈடுபடுத்தும்" என்று எச்சரித்தது.
ஜனவரி 16-ஆம் தேதி இந்தியாவின் அரசு தொலைக்காட்சியான டிடி நியூஸ் செய்தி வாசிப்பாளர் ஒருவர் கூறுகையில், ஜேஎப்ஃ -17 போர் விமானங்களின் ராணுவ தாக்கம் "மிதமானது" என்று தெரிவித்தார்.
இருப்பினும், அரசியல் ரீதியாக இது "சீனா-பாகிஸ்தான் செல்வாக்கை விரிவுபடுத்துகிறது. ஏற்கனவே பலவீனமாக உள்ள பிராந்தியங்களில் நிலையற்ற தன்மையை அதிகரிக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல் லிபியா மற்றும் சூடான் போன்ற மோதல் நிலவும் பகுதிகளுக்கு பாகிஸ்தான் ஆயுதங்களை விற்பனை செய்வதாகக் கூறப்படும் தகவல்கள் குறித்தும் கவலைகள் எழுந்துள்ளன.

டிசம்பர் 26-ஆம் தேதி தி எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட ஒரு செய்தி, லிபியாவுடனான ஒப்பந்தம் மத்திய தரைக்கடல் பகுதியை மேலும் சீர்குலைக்கக்கூடும் என்றும், இது எகிப்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
ஹாங்காங்கின் ஆங்கில நாளிதழான சவுத் சைனா மார்னிங் போஸ்ட் ஜனவரி 15-ஆம் தேதி பாகிஸ்தானிய வெளியுறவுக் கொள்கை நிபுணர் ஃபஹத் ஹுமாயூனை மேற்கோள் காட்டி ஒரு செய்தியை வெளியிட்டது.
அதில், லிபியா அல்லது சூடான் பிரிவினருக்கு ஆயுதங்களை விற்பனை செய்வது பாகிஸ்தானுக்கு "சட்டம், நற்பெயர் மற்றும் உலக அரசியல் சூழலில் பாதிப்புகளை" ஏற்படுத்தும் என்று ஃபஹத் ஹுமாயூன் எச்சரித்துள்ளார்.
"இதன் விளைவாக, பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் இல்லாத மறைமுகப் போர் சூழலில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இழுக்கப்படும் அபாயம் உள்ளது," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












