பிரிட்டனிலிருந்து இலங்கையில் சட்டவிரோதமாக குவிக்கப்படும் குப்பைகள்

பட மூலாதாரம், SRI LANKA CUSTOMS
பிரித்தானியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான குப்பைகள் அடங்கிய கொள்கலன்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
2017ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு 247 கொள்கலன்கள் மூலம் இந்த குப்பைகள் கொண்டு வரப்பட்டுள்ளமை விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவிக்கின்றது.
குறித்த கொள்கலன்களில் பெரும்பாலும் மெத்தைகள் காணப்படுகின்றதுடன், மெத்தைகளுக்குள் மருத்துவ மற்றும் வேறு வகையிலான கழிவுப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
கொழும்பு துறைமுகத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட இந்த குப்பைகள், கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க பகுதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றின் வளாகம் ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட கொள்கலன்களில் 130 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் ஆராயப்பட்டு, கட்டுநாயக்க பகுதியிலுள்ள நிறுவனமொன்றின் வளாகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதுடன், எஞ்சியுள்ள 111 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுங்கப்பிரிவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

பட மூலாதாரம், SRI LANKA CUSTOMS
இந்த குப்பைகளிலுள்ள பெறுமதியான பொருட்களை பெற்று, அவற்றை மீள்ஏற்றுமதி செய்யும் வகையிலேயே இந்த குப்பைகள் கொண்டு வரப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சில நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமும், ஊடகப் பேச்சாளருமான சுனில் ஜயரத்ன, அந்த நிறுவனத்தின் அதிகாரிகளிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டுள்ள அனைத்து குப்பைகளும் சூழலுக்கும், சுகாதாரத்திற்கும் பெருமளவில் தீங்கு விளைவிக்கும் வகையிலான குப்பைகள் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவிக்கின்றது.
கட்டுநாயக்க பகுதியிலுள்ள களஞ்சியசாலையொன்றில் 130 கொள்கலன்களில் கொண்டு வரப்பட்ட 27,685 மெற்றிக் தொன் எடையுடைய குப்பைகள், 50,000 அடி நீளத்திற்கு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகார சபை சுட்டிக்காட்டுகின்றது.
நாட்டிற்குள் வெளிநாட்டு குப்பைகளை கொண்டு வர முடியுமா?
1980ஆம் ஆண்டு 47ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் பிரகாரம், ஏதேனும் பொருட்களை கொண்டு வர வேண்டும் என்றால், மத்திய சுற்றாடல் அதிகார சபையிடமிருந்து சுற்றாடல் தேசிய பாதுகாப்பு அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
எனினும், சுற்றாடல் அதிகார சபையிடமிருந்து குறித்த தனியார் நிறுவனங்கள் எந்வொரு அனுமதியையும் பெற்றுக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச சட்ட விதிமுறைகளை மீறி இந்த குப்பைகள் நாட்டிற்குள்கொண்டு வரப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
இலங்கை நிதிச் சட்டத்தில் 2013ஆம் ஆண்டு ஜுலை மாதம் 11ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் பிரகாரமே இந்த குப்பைகள் நாட்டிற்குள்கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நிதி அமைச்சர் என்ற விதத்தில் இந்த வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.
இந்த வர்த்தமானி அறிவித்தலை பயன்படுத்தி மீள் ஏற்றுமதி மத்திய நிலையம் என்ற போர்வையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை குறிப்பிடுகின்றது.

பட மூலாதாரம், SRI LANKA CUSTOMS
எவ்வாறாயினும், பாசல் சர்வதேச உடன்படிக்கையின் பிரகாரம், நாடொன்றிலிருந்து மற்றுமொரு நாட்டிற்கு குப்பைகளை அனுப்புவது சட்டவிரோதமானது என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவிக்கின்றது.
இந்த உடன்படிக்கைகளில் இலங்கை மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் கையெழுத்திட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு நாடொன்றிலிருந்து மற்றுமொரு நாட்டிற்குள் குப்பைகளை அனுப்பி வைப்பதற்கு உரிய நாட்டு அரசாங்கத்தின் அனுமதி அத்தியாவசியம் என குறிப்பிடப்படுகின்றது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையே அதற்கான அனுமதியை வழங்க வேண்டியது அத்தியாவசியமாகும். எனினும், மத்திய சுற்றாடல் அதிகார சபை அதற்கான அனுமதியை வழங்கவில்லை என தெரிவிக்கின்றது.
நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
இலங்கைக்கு குப்பைகளைகொண்டு வந்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சூழலை பாதுகாக்கும் கேந்திர நிலையத்தினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம், மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், SRI LANKA CUSTOMS
இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள குப்பைகளில் மருத்துவ கழிவுகளும் காணப்படுவதாக அந்த தரப்பினர் தனது மனுவின் ஊடாக தெரிவித்துள்ளனர்.
மருத்துவ கழிவுகள் காணப்படுகின்றமையினால், அது சூழலுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சாத்தியம் காணப்படுவதாக சூழலை பாதுகாக்கும் கேந்திர நிலையம் குறிப்பிடுகின்றது.
இந்த குப்பைகளை நாட்டிற்குள் கொண்டு வந்த தரப்பினர் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த மனுவின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
குப்பைகளை மீள ஏற்றுமதி செய்யுமாறு அறிவுறுத்தல்
கட்டுநாயக்க ஏற்றுமதி வளாகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள குப்பைகளை, தமது செலவிலேயே ஏற்றுமதி செய்த நாட்டிற்கே மீள் ஏற்றுமதி செய்யுமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
தேசிய சுற்றாடல் சட்டத்தின் பிரகாரம் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












