“இலங்கை அமைச்சு செயலாளர்களின் செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கியது சட்டவிரோதம்” - பதியுதீன்

பதியுதீன்

அமைச்சுக்களின் செயலாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை அழைத்துப் பேசி, அவர்களின் செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கியமை சட்ட விரோதமான செயற்பாடாகும் என்று, நாடாளுமுன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான அலறி மாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இதனைக் கூறினார்.

"அரசியலமைப்பை கையிலெடுத்துக் கொண்டு தவறுகள் செய்வதை தொடராமல், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் விரும்புகின்ற, ஏற்றுக்கொள்கின்ற, அவர்களால் வேண்டுகோள் விடுக்கப்படுகின்ற உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதிக்கு றிசாட் பதியுதீன் அப்போது வேண்டுகோள் விடுத்தார்.

"அரசிலமைப்பில் இல்லாத அதிகாரத்தை தான் விரும்பியவாறு அக்டோபர் 26ஆம் தேதி தொடங்கி, இன்று வரை ஜனாதிபதி செயல்படுத்தி வருகின்றார்.

மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன

பட மூலாதாரம், Getty Images

19வது திருத்தத்தில் 'பிரதமர் ஒருவரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை' என தெளிவாக கூறப்பட்டிருந்தும், அதனையும் மீறி கடந்த அக்டோபர் 26ல் பிரதமர் ரணிலை பதவி நீக்கினார்.

அதன் பின்னர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தார்.

இலங்கை
இலங்கை

நான்கரை வருட காலத்துக்குள் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது என்ற 19வது அரசியலமைப்பு திருத்த விதி முறைகளையும் மீறி, அதனையும் கலைத்தார். தனக்கு இவ்வாறான அதிகாரம் இல்லையெனத் தெரிந்தும் இதனை செயல்படுத்தியுள்ளார்.

அவரால் நியமிக்கப்பட்ட புதிய பிரதமர், அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் - சட்ட ரீதியாக கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளாமல், அவர்களின் சட்டபூர்வமற்ற நடவடிக்கைகளுக்கும் ஜனாதிபதி துணை போனார் என பதியுதீன் குற்றம் சாட்டியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி பிரமாணம்

சட்ட விரோத அரசாங்கத்தின் செயலாளர்களது சட்ட முரணான நடவடிக்கைகளுக்கும் ஜனாதிபதி அனுமதி அளித்ததுடன், தற்போது அவர்களை அழைத்து அமைச்சின் பணிகளை முன்னெடுத்துச் செல்லுமாறு இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.மேல்முறையீட்டு நீதிமன்றமானது நேற்று திங்கட்கிழமை பிரதமர், அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் செயற்பாடுகளுக்கு இடைக்கால தடையுத்தரவை விதித்து அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி தனது தவறுகளை தொடர்ந்தும் செய்யாது நிலைமையை உணர்ந்து ஜனநாயகத்துக்கு வழி விட வேண்டுமெனவேண்டுகோள் விடுக்கின்றோம்" என்றும் பதியுதீன் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: