இலங்கை ரக்பி வீரர்கள் மர்ம மரணம்: விசாரணை தொடக்கம்
இலங்கையில் மர்மமாக உயிரிழந்த பிரிட்டன் ரக்பி வீரர்களின் மரணம் குறித்து ஆட்டோ ஓட்டுநர்களிடம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பட மூலாதாரம், DCRFC
நட்பு ரீதியான ரக்பி போட்டிகளில் விளையாட கடந்த மே 10 அன்று பிரிட்டனைச் சேர்ந்த 'Clems Pirates Rugby' அணியினர் இலங்கை வந்தனர். இந்த அணியின் தாமஸ் ஹாவர்ட் ( 25 வயது ) மே 13ஆம் தேதியன்று உயிரிழந்தார்.
இதன்பின்னர் தாமஸ் பெட்டி ( 26 வயது) அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் மே 15ஆம் தேதியன்று உயிரிழந்தார். இவர்களின் மரணங்களில் மர்மம் நீடிக்கும் நிலையில் காவல் துறையினர் புலன் விசாரணைகளைத் தீவிரப்படுத்தினர்.
மரணத்தருவாயில் மருத்துவமனையில் இருந்தபோது தாமஸ் பெட்டி என்பவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை மையப்படுத்தி விசாரணைகளை நடத்துவதாக கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அளவுக்கு அதிகமான போதைப்பொருளே குறித்த ரக்பி வீரர்கள் இருவரும் உயிரிழக்க காரணமாக இருந்திருக்கலாம் என காவல் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மே மாதம் 13ஆம் தேதி , விடுதி அறையில் இருந்தபோது, திடீரென சுகயீனமடைந்து தாமஸ் பெட்டி என்ற வீரர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்றுவந்த தாமஸ் பெட்டியிடம் காவல் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த வாக்குமூலத்தில் ''மே 12ஆம் தேதி இரவு, தாம் தங்கியிருந்த விடுதியில் இருந்து இரவு நேர கேளிக்கை விடுதிக்குச் சென்று திரும்பிய போது, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தந்த 'பிரவுன் சுகர்' என்ற போதைப் பொருளைப் பயன்படுத்தியதாக'' அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், சிகிச்சைப் பலனின்றி இவர் மே 15ஆம் தேதியன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்நிலையில், ரக்பி வீரர்கள் சென்ற கேளிக்கை விடுதிக்கு அருகில் அன்றிரவு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் குறிப்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். எனினும், குறித்த வீரர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை இன்னமும் அடையாளம் காணவில்லை என காவல் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
உடலில் ஏற்பட்ட காயங்களினாலோ அல்லது இயற்கையாகவே இந்த வீரர்கள் உயிரிழக்கவில்லை என மரண விசாரணையின் ஆரம்ப அறிக்கையில் தெரியவந்தது. இதனையடுத்து. இவர்களின் உடற்பாகங்கள் ரசாயனப் பகுப்பாய்விற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கையை எதிர்வரும் 25ஆம் தேதி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிற செய்திகள்:
- மருத்துவமனையில் போராட்டம், தடியடி: தூத்துக்குடியில் தொடரும் பதற்றம்
- 'நிபா' நோயாளிகளுக்கு சேவை செய்ய அனுமதியுங்கள்: உ.பி மருத்துவர் கஃபீல் கான்
- ஒரு துக்க வீடாகச் சோகம் கப்பிக் கிடக்கும் தூத்துக்குடி நகரம்
- இந்தியாவில் தலித்துகள், முஸ்லீம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கிறதா?
- போராட்டத்தில் பங்கேற்காத ஜான்சி துப்பாக்கிச் சூட்டில் தலை சிதறி இறந்தாரா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












