போராட்டத்தில் பங்கேற்காத ஜான்சி துப்பாக்கிச் சூட்டில் தலை சிதறி இறந்தாரா? #Ground_Report

குடும்பப் படத்தில் ஜான்சி
படக்குறிப்பு, துப்பாக்கிச் சூட்டில் பலியான ஜான்சி கைக்குழந்தையுடன், குடும்பப் புகைப்படம்.
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

உடைந்த மண்டை ஓட்டின் ஒரு துண்டும், சிதறிய மூளையும் தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கிராமத்தின் நுழைவுப்பகுதியில் கிடந்தன.

அவை, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் மே22 நடந்த போராட்டத்தில் கலந்துகொள்ளாத ஜான்சியின் மண்டை ஓடும், மூளையும் என்கிறார்கள் திரேஸ்புர கிராமவாசிகள்.

தன்னுடைய வீட்டில் இருந்து அவரது சகோதரி வீட்டுக்கு செல்வதற்காக வெளியேவந்த சிலநிமிடங்களில் துப்பாக்கிச்சூட்டிற்கு ஜான்சி(48) பலியானார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

மாவட்ட ஆட்சியரின் இல்லம் அமைந்துள்ள இடத்தில் இருந்து வெறும் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் திரேஸ்புரம் ஒரு மீனவர் பகுதி. போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர், திரேஸ்புரத்திற்குள் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டின் நடுக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை என்கிறார்கள் மக்கள்.

''பத்து நிமிஷத்துல ஜான்சி கீழே கிடக்கு. போலீஸ் வண்டியில வந்த நாலு பேரு, நாயை தூக்கறமாதிரி இழுத்து வண்டியில போட்டுட்டு போய்டாங்க,'' என சம்பவத்தை நேரில் பார்த்த சுதாகர்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)அச்சத்துடன் தெரிவித்தார்.

காலை முதல் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சிலர் வீடு திரும்பிய நேரத்தில் போலீஸ் வாகனம் திரேஸ்புரம் வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், ஜான்சி தவிர மேலும் ஒரு இளைஞரையும் துப்பாகியால் சுட்டதாகவும் உள்ளுர்வாசிகள் கூறுகிறார்கள்.

ஸ்டெர்லைட்

அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் ஜான்சியின் கணவர் ஜெசுபாலனிடம்(50) பேசமுடியவில்லை. அவரது மூன்று மகள்களும் தாயை இழந்த தவிப்பில் அவரைக் கட்டி அணைத்துக் கதறிய காட்சி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

''போலீஸ் வந்து போன சில மணி நேரம் கழித்துதான் ஊர் மக்கள் வெளியே வந்தோம். ஜான்சியை காணலனு ஜேசுபாலன் சொல்லவும், பக்கத்துக்கு வீடுகள்ல விசாரிச்சோம். நேர்ல பாத்தவுங்க சொன்னப்பதான் ஜான்சி செத்திடுச்சு ஜேசுபாலனுக்கு தெரியும். ஜி எச்ல வச்சிருக்காங்கனு தகவல் வந்துச்சு. போய் பாத்தா, இறந்தது ஜான்சிதான். அவரோட தலையில் ஒரு பகுதி இல்லை. ஒரு கண் இல்லை,'' என சம்பவத்தை விவரித்தார் ஜான்சியின் உறவினர் ஜான்சன்.

ஜான்சி போரட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் அவர் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகிவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்கிறார் ஜான்சன்.

''ஜான்சி தலை சிதறிப்போனத பாத்தா, ரொம்பவும் பக்கத்தில் நின்னுதான் சுட்டுருக்காங்கனு தெரியும். நாங்க அமைதி முறையில போராட வந்தோம், எங்களை அடிச்சாங்க. ஜான்சி எதிலயும் கலந்துக்கிடல. ஆன அவுங்கள ஏன் சுட்டாங்க,'' என குடும்ப உறவினரை இழந்த வருத்தத்திலும், கோபத்திலும் ஜான்சன் பேசினார்.

பலர் கைது, காணவில்லை...

திரேஸ்புரம் பகுதியில் காவல்துறையினர் நுழைந்து பல இளைஞர்களை இழுத்துச் சென்றதாகவும் கிராமவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

தனது தம்பியை தேடிப் பல மணிநேரமாக அலைந்துவிட்டு, காவல்துறையிடம் புகார் கொடுக்க மனமற்றவராக இருக்கிறார் ராஜா(பெயர் மாற்றப்பட்டுள்ளது).

Facebook பதிவை கடந்து செல்ல, 1

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு, 1

Facebook பதிவை கடந்து செல்ல, 2

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு, 2

Facebook பதிவை கடந்து செல்ல, 3

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு, 3

Facebook பதிவை கடந்து செல்ல, 4

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு, 4

Facebook பதிவை கடந்து செல்ல, 5

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு, 5

''எங்க ஊர்ல பல பேரை காணல. போலீஸ் ஸ்டேஷன்ல இருப்பாங்கனு தகவல் வருது. நாங்க தேடி போன அவுங்கள அடிப்பாங்கனு பயமா இருக்கு. அமைதியா போராட்டம் நடத்தினோம். வன்முறையைத் தூண்டியது காவல்துறைதான்,'' என்கிறார் ராஜா.

திரேஸ்புரத்தில் நடந்த சாலை மறியல் மற்றும் கல்வீச்சு சம்பவங்களை தடுப்பதற்காகவே காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது என தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் டிகே ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

''ஒரு பகுதியினர் திரேஸ்புரம் சென்று சாலை மறியலில் ஈடுபட்டு பொது மக்களின் உடைமைக்கும், உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் கல் வீச்சில் ஈடுபட்ட போது, காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியும், கலைந்து செல்லாமல் வன்முறையில் ஈடுபட்டதால், தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பின் துப்பாக்கி பிரயோகம் செய்து கலைந்து போகச் செய்தனர்,'' என டிகே ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் பற்றிய அறிவிப்பை கொடுத்திருந்தால், போராட்டத்தில் ஈடுபடாத ஜான்சி நிச்சயம் வீட்டுக்குள் சென்றிருப்பார்; இன்று ஜான்சியின் இழப்பு அவரது குடும்பத்தில் மட்டுமல்ல, அந்த சம்பவத்தை நேரில் பார்த்த பலர், துப்பாக்கிச் சூட்டின் போது தவித்துபோன குழந்தைகள் என திரேஸ்புரத்தின் ஒவ்வொரு வீட்டிலும் உணரப்படுகிறது என்கிறார்கள் உள்ளுர்வாசிகள்.

(திரேஸ்புரத்தில் பிபிசி தமிழிடம் பேசிய பலரும் பாதுகாப்பு கருதி தங்களது பெயர்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்).

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: