ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக முதலமைச்சர் விளக்கம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால்தான் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்ததாகவும், திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தப்படவில்லை என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக முதலமைச்சரைச் சந்திக்க முயன்ற மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்கள் தலைமைச் செயலகம் முன்பாக வியாழக்கிழமை முற்பகல் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழக தலைமைச் செயலகத்தில் இன்று சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறிது நேரம் பங்கேற்ற தி.மு.கவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலினும் காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் ராமசாமியும் வெளிநடப்புச் செய்தனர்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமான முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும், டி.ஜி.பி. பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோரினார்.
இதற்குப் பிறகு, முதலமைச்சரின் அறைக்கு முன்பாக மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் குழுமினர். அவர்கள் முதல்வர் அறைக்கு முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்குப் பிறகு காவல் துறையினர் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். இதையடுத்து தலைமைச் செயலகத்திலிருந்து வெளியே வந்த மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.கவினர் தலைமைச் செயலகம் முன்பாக சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ராஜாஜி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதையடுத்து காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரை கைது செய்து ராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இதற்கு சில நிமிடங்களுக்குப் பிறகு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.

பட மூலாதாரம், M.K.STALIN
"இன்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவைத் தலைவர் அறையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் நான், காங்கிரஸ் கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இடம்பெற்றனர். ஸ்டாலின் ஒரு சில நிமிடம் அமர்ந்துவிட்டு சென்றுவிட்டார். 15 நிமிடங்கள் கழித்து ஊடகங்களில் பார்க்கும்போது எதிர்க்கட்சித் தலைவர் முதல்வரைப் பார்க்க வந்ததாகவும் முதல்வர் மறுத்ததாகவும் செய்தி வந்தது. அது உண்மையல்ல. சட்டப்பேரவைத் தலைவர் அறையில் எனக்கு எதிரில்தான் அவர் அமர்ந்திருந்தார். அப்போதே மனுவைக் கொடுத்திருக்கலாம். அல்லது அதற்குப் பிறகு அறையில் வந்து கொடுத்திருக்கலாம். ஆனால், வேண்டுமென்றே நான் இல்லாதபோது என் அறையில் வந்து அமர்ந்துகொண்டு தவறான செய்தியை தெரிவித்திருக்கிறார்" என்றார் முதலமைச்சர் கே. பழனிச்சாமி.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் இந்தப் போராட்டத்தில், சில அரசியல் கட்சித் தலைவர்களும் சில சமூக விரோதிகளும் ஊடுறுவி இதை தவறான பாதையில் அழைத்துச் சென்றதால்தான் இத்தகைய நிகழ்வு ஏற்பட்டது என்று
எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். மேலும் 144 தடை உத்தரவு இருக்கும்போது மு.க. ஸ்டாலின் அங்கு சென்றது தவறு என்றும் கூறினார்.
"துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு நடக்கவில்லை. ஒவ்வொரு முறையும் போராட்டம் நடக்கும்போது அமைதியாக செல்வார்கள். மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் குறைகளைச் சொல்வார்கள். அப்படித்தான் இந்த முறையும் எதிர்பார்க்கப்பட்டது. சில சமூகவிரோதிகள் ஊடுருவி போராட்டத்தை தவறாக வழிநடத்தியதால்தான் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்தன" என்றும் முதலமைச்சர் குற்றம் சாட்டினார்.
ஆனால், தாங்கள் முதலமைச்சரைப் பார்ப்பதற்காக அவரது அறைக்குச் சென்றதாகக் கூறப்படுவதை மு.க. ஸ்டாலின் மறுத்திருக்கிறார். அவரது அறையை முற்றுகையிடவே தாங்கள் சென்றதாக அவர் கூறியிருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












