வினோத சத்தம்: சீனாவில் உள்ள தங்கள் ஊழியர்களை எச்சரித்த அமெரிக்கா

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

வினோத சத்தம்:

சீனாவில் உள்ள தங்கள் ஊழியர்களை எச்சரித்த அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

சீனாவில் உள்ள அமெரிக்க அரசு ஊழியர் ஒருவர் மர்மமான ஒலிகளை எதிர்கொண்டதை தொடர்ந்து, அசாதாரண சத்தம் மற்றும் காட்சி தொடர்பாக சீனாவில் உள்ள தங்கள் ஊழியர்களை எச்சரித்துள்ளது அமெரிக்கா.

"நுட்பமான மற்றும் தெளிவற்ற, ஆனால் அசாதாரணமான, ஒலி மற்றும் அழுத்த உணர்வுகளை" அந்த ஊழியர் எதிர்கொண்டதாக அறிக்கை ஒன்று விளக்குகிறது.

பொறுப்பான முறையில் இதனை விசாரிப்பதாக சீனா கூறியுள்ளது.

வணிகம் தொடர்பான கருத்து வேறுபாடுகளினால், அமெரிக்க சீன உறவு அண்மையில் இறுக்கமடைந்துள்ளது.

Presentational grey line

டிரம்ப்பின் வழக்கறிஞர் பெற்ற ரகசிய நிதி

டிரம்ப்பின் வழக்கறிஞர் பெற்ற ரகசிய நிதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உக்ரேனியத் தலைவர் பெட்ரோ பொரோஷென்கோ- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையே 2017ம் ஆண்டு வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பு.

உக்ரைனிய அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய, டொனால்ட் டிரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கொஹன், 4 லட்சம் டாலர்களை ரகசிய நிதியாக பெற்று இருக்கிறார் என்று உக்ரைனிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிதியானது உக்ரைனிய தலைவர் பெட்ரோ பொரோஷென்கோவின் இடைதரகர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது என்கின்றன தகவல்கள். அமெரிக்க சட்டத்தின்படி கொஹன் உக்ரைனுக்கான பிரதிநிதி இல்லை என்றாலும், அவர் இப்படியான செயலில் ஈடுப்பட்டதாக மேலும் விவரிக்கின்றன அந்த தகவல்கள். ஆனால், கொஹன் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், வெள்ளை மாளிகையில் சந்திப்பு நடந்துள்ளது. அந்த சந்திப்புக்குப் பின் உக்ரைனிய அதிபர் நாடு திரும்பிய பின், உக்ரைனின் ஊழல் தடுப்பு பிரிவு டிரம்ப்பின் முன்னாள் பிரச்சார மேலாளர் பால் மானாஃபோர்ட்டுக்கு எதிரான விசாரணையை நிறுத்தி உள்ளது.

Presentational grey line

ஊடகங்களை வறுத்தெடுத்த முஸ்க்

முஸ்க்

பட மூலாதாரம், Getty Images

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயலாளர் எலான் முஸ்க் ஊடகங்களை கடுமையாக ட்வீட்டரில் சாடி உள்ளார்.

ஊடகங்கள் தரும் செய்திகளின் உண்மைதன்மையை மதிப்பிடுவதற்காக தாம் ஓர் இணையதளம் தொடங்க இருப்பதாக கூறி உள்ளார்.

அண்மையில் டெஸ்லா நிறுவனம் குறித்து ஊடகங்களில் வந்த செய்திகள் நியாயமற்றது என்று அவர் கருதியதைத் தொடர்ந்து அவர் இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிகிறது.

Presentational grey line

இரான் அணு ஒப்பந்தம்: கொமேனியின் நிபந்தனைகள்

இரான் அணு ஒப்பந்தம்: கொமேனியின் நிபந்தனைகள்

பட மூலாதாரம், AFP

உலக நாடுகளுடன் அணு ஒப்பந்தத்தை தக்க வைத்துக் கொள்ள பல நிபந்தனைகளை இரானின் அது உயர் தலைவர் அயதொல்லா கொமேனி விதித்துள்ளார்.

இரானின் எண்ணெய் விற்பனை மற்றும் வணிகத்தை பாதுகாப்பது உள்ளிட்டவையும் அந்த நிபந்தனைகளில் அடக்கம்.

"அமெரிக்காவின் பொருளாதார தடையிலிருந்து இரானை காக்க ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து இரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டும். ஐரோப்பிய வங்கிகள் இரானுடனான வர்த்தகத்தை பாதுகாக்க வேண்டும். பிரிட்டன், ஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனி இரானின் ஏவுகணை திட்டம் மற்றும் இரான் பிராந்திய நடவடிக்கைகளில் பேரம் நடத்தமாட்டோம் என்று வாக்குறுதி தர வேண்டும்" என்ற நிபந்தனைகளை அவர் விதித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: