வேலையில்லாத மகனை வீட்டைவிட்டு அனுப்ப நீதிமன்றம் சென்ற பெற்றோர்
தங்கள் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டதாக முதியோர் நீதிமன்றத்தை நாடுவது இந்தியாவில் வழக்கமான ஒன்று. ஆனால், அதற்கு நேர் எதிரான சம்பவம் ஒன்று அமெரிக்காவில் நடந்துள்ளது.

பட மூலாதாரம், cbs
30 வயதாகும் தங்கள் வேலையில்லாத மகனை வீட்டை விட்டு வெளியேற்ற நியூயார்க்கில் வாழும் ஒரு வயதான தம்பதி நீதிமன்றத்தை நாடினார்கள்.
அவர்கள் அந்த வழக்கில் வெற்றியும் பெற்றுள்ளனர். இப்போது அவர்கள் மகன் தனது பெற்றோரின் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிறிஸ்டினா மற்றும் மார்க் ரோடோண்டோ தம்பதி, தங்கள் மகன் மைக்கேல் ரோடோண்டோ வீட்டை விட்டு வெளியேறுமாறு கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி முதல் பல முறை ஆணையிட்டும் வெளியேறவில்லை என்று கடந்த வாரம் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு சிராகசில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் வெல்ல மைக்கேல் ரோடோண்டோ மேற்கொண்ட சட்ட ஆராய்ச்சிகளை நீதிபதி டொனால்டு கிரீன்வுட் பாராட்டினாலும், அவர் வீட்டைவிட்டு தாமாக முன்வந்து வெளியேற வேண்டும் என்று மைக்கேலுக்கு உத்தரவிட்டார்.
வழக்கறிஞர் யாரையும் நியமனம் செய்துகொள்ளாமல் தாமாக வாதாடிய அவர், தனது பெற்றோரின் வீட்டில் மேலும் ஆறு மாதங்கள் வசிக்க அனுமதி கோரியிருந்தார். எனினும், அவரது கோரிக்கையை நீதிபதி மறுத்துவிட்டார்.

பட மூலாதாரம், Reuters
"நான் வீட்டைவிட்டு வெளியேற இன்னும் கொஞ்சகாலம் அவகாசம் அளிக்க ஏன் மறுக்கின்றனர் என்று புரியவில்லை. அவர்களைச் சார்ந்து வாழும் ஒருவருக்கு ஆறு மாதங்கள் என்பது நியாயமான கால அவகாசம்தான்," என்று அவர் கூறியுள்ளார்.
எனினும் புன்னகைத்துக்கொண்டே, "உங்கள் பெற்றோருடன் பேசுங்கள். ஆனால், வீட்டை விட்டு வெளியேறுங்கள்," என்று கூறிவிட்டார் நீதிபதி.
மைக்கேலுடன் பேசிக்கொள்ளாத அவரது பெற்றோர், "உன்னைப்போன்ற மோசமான பணி அனுபவம் உள்ளவர்களுக்கும் நிறைய வேலைகள் உள்ளன," என்று பிப்ரவரி 18 அன்று எழுதிய ஒரு குறிப்பில் கூறியுள்ளனர்.
தங்கள் மகன் வீட்டிலிருந்து வெளியேற 1,100 டாலர் பணம் வழங்கிய அவர்கள், அவருக்கு சொந்தமான ஒரு கார் உள்ளிட்ட உடைமைகளையும் விற்குமாறு ஒரு குறிப்பில் வலியுறுத்தியுள்ளனர்.
அந்தப் பணத்தை செலவு செய்துவிட்ட மைக்கேல், தாம் அந்தப் பணத்தை அவர்களுக்கு திருப்பித் தர இருந்ததாக கூறியுள்ளார்.
செவ்வாயன்று தீர்ப்பு வெளியானதும் அவசரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய மைக்கேல், அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாகவும், மூன்று மாதங்களுக்குள் வீட்டை விட்டு வெளியேறி நியூயார்க்கில் உள்ள கமிலியஸ் பகுதியில் குடியேறப் போவதாகவும் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Google maps
அதுவரை அவர்களைப் பார்க்காமல் எவ்வாறு தவிர்ப்பீர்கள் என்ற கேள்விக்கு, அந்த வீட்டின் படுக்கை அரை ஒன்றில் தங்கிக்கொள்வதாகக் கூறிய அவர் மேலதிக தகவல் எதுவும் கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மைக்கேல் தான் பார்த்து வந்த வேலையை இழந்தபின், அவரைத் தங்களுடன் தங்கிக்கொள்ள அவரது பெற்றோர் அனுமதித்தனர்.
தற்போது தனக்கு வேலை உள்ளது என்று செய்தியாளர்களிடம் மைக்கேல் கூறினாலும், அது என்ன வேலை என்று கூற வேண்டிய அவசியமில்லை என்று கூறிவிட்டார்.
தனது தரப்பு வாதங்களை நீதிபதி சரியாகப் படிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்தபின் மைக்கேல் எங்கு சென்றார் தெரியுமா? அதே வீட்டுக்குத்தான்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












