இலங்கை: காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் மக்கள் சந்திப்பு

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் இரண்டாவது மக்கள் சந்திப்பு, இலங்கையின் மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
அப்போது யுத்தம், மற்றும் உள்நாட்டு கலவரங்களினால் காணாமல் போனோரின் உறவினர்கள், நேற்று (சனிக்கிழமை) மாத்தறை போதிய பிரதேசத்தில் இருந்து காணாமல் போனவர்களின் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு மாவட்ட செயலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.
அதன் பின்னர் காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை கேட்டறியும் அதிகாரிகளிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
எட்டு பேர் அடங்கிய குழுவில் உள்ள அந்த அலுவலகத்தில் அலுவலக தலைவரும், ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் ,மொஹாந்தி பீரிஸ்,நிமல்கா பெர்னாந்து,மிரான் ரஹி, ஜெயதீபா புண்ணிய மூர்த்தி ,சபாபதிபிள்ளை வேந்தன் ,எஸ் கே .லியனகே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் 150க்கும் அதிமானவர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தார்கள்.
இந்த மக்கள் சந்திப்பன் போது காணாமல் போன நபர்களின் உறவினர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஊடகப்பிரதநிதிகள் ஆகியோரிடமிருந்து கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது.
அப்போது, தமிழ்மொழி மூலம் சபாபதிபிள்ளை வேந்தன், ஜெயதீபா புண்ணிய மூர்த்தி ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.
2016ஆம் ஆண்டு இலக்கம் 14 இன் கீழ் காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சட்டத்தின் கீழ் இந்த பணியகம் அமைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய நல்லிணக்க பொறிமுறையாக இது சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அலுவலகத்தின் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ், காணாமல் போனோர் தொடர்பான குறித்த அலுவலகம் எந்தவித அரசியல் தொடர்பும் கொண்டதல்ல என்றும் இது சுயாதீன அலுவலகம் மட்டுமே என்றும் கூறினார்.
அத்துடன் இதன் கிளை அலுவலகங்கள் இந்த வருடத்தில் ஒவ்வொரு பிரதேச மட்டத்திலும் அமைக்கப்படும் என்றும் மாத்தறை மாவட்டத்திற்கான பிரதான அலுவலகம் மாத்தறை நகரில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
"1971 ஆம் ஆண்டில் இருந்து காணாமல் போன நபர்கள் குறித்த சரியான தகவல்களும் அவர்கள் கடத்தப்பட்ட இடங்கள் தொடர்பான தகவல்களும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன. இதனால் இவர்களது குடும்பங்கள் இது தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும். இந்த தகவல்களின் அடிப்படையில் விரிவான விசாரணைகளை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டதனால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் நலத்திற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானதல்ல. இதேபோன்று இந்த குடும்பங்களில் தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படும்." என்று அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












