இலங்கை: புதிய சட்டம் ஒழுங்கு அமைச்சர் நியமனம்

இலங்கையின் புதிய சட்டம், ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அம்பாறை மற்றும் கண்டி மாவட்டங்களில் வன்முறைகள் நடந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பும் வந்துள்ளது.

பதவியேற்கும் புதிய அமைச்சர்

பட மூலாதாரம், The Official government News Portal of Sri Lanka

படக்குறிப்பு, ரஞ்சித் மத்தும பண்டார பதவியேற்பு

சில தினங்களுக்கு முன்னதாக உள்ளூராட்சி சபை தேர்தலைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை அடுத்து அமைச்சரவை மாற்றத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சட்டம், ஒழுங்குக்கான பொறுப்பை தன்வசம் வைத்திருந்தார்.

அதனையடுத்து அம்பாறை மற்றும் கண்டி ஆகிய இடங்களில் நடந்த இன வன்முறைகளை அடுத்து சில அரசியல் தலைவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அதற்காக விமர்சித்து வந்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவும் அதில் அடக்கம்.

ஆனாலும் முந்தய அமைச்சரவை மாற்றத்தின் போது குறிப்பிட்ட குறுகிய காலத்துக்கு மாத்திரமே பிரதமர் அந்த பொறுப்பை தன்வசம் வைத்திருப்பார் என்று கூறப்பட்டிருந்தது.

இப்போது கண்டி மாவட்டத்தின் பெரும் வன்செயல்கள் நடந்துள்ள நிலையில் அதே மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் மத்தும பண்டார சட்டம், ஒழுங்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமரின் நம்பிக்கைக்கு உரியவர்

தற்போதைய நிலையில் ஒரு முழுநேர அமைச்சர் அந்தப் பதவிக்கு தேவை என்ற கருத்தும் அரசாங்க தரப்பில் காணப்படுகின்றது.

பிரதமரின் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த மத்தும பண்டார, ஒரு மூத்த உறுப்பினர் என்பதுடன், பிரதமரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராகவும் கருதப்படுகிறார்.

இதற்கிடையே பாதுகாப்பு தலைமை அலுவலகத்தில் 24 மணிநேர உதவிக்கான அழைப்பு வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதற்கான ஒரு தனி தொலைபேசி இலக்கமும் மின்னஞ்சலும் அறிவிக்கப்பட்டுள்ளன. வன்செயல்கள் மற்றும் அதற்கான சதி குறித்து மக்களின் உதவி நாடப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் தற்போது நடக்கும் ஐநா மனித உரிமைகள் கூட்டத்தில் மனித உரிமைகள் ஆணையர் இலங்கை நிலைமை குறித்து கண்டித்துள்ளதுடன், இது ஐநா உறுப்பு நாடுகள் சர்வதேச சட்ட தலையீட்டைக் கோர வழி செய்யும் என்றும் கூறியுள்ளார். அந்த தொடரின் தீர்மானங்கள் மார்ச் 21ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

கண்டி மாவட்டத்தின் பூஜாப்பிட்டிய எனும் இடத்தில் நேற்று ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் இறந்ததாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.

கலவரத் தீ

கண்டிக்கு நேற்று சென்ற ஜனாதிபதி, அங்கு மதத்தலைவர்களை சந்தித்துப் பேசியுள்ளார். அமைதியை ஏற்படுத்த மதத்தலைவர்களின் உதவியை அவர் கோரியுள்ளார்.

கண்டியில் கடந்த இரவு மேலும் சில சம்பவங்கள் நடந்துள்ளன. முஸ்லிம்களின் 4 வீடுகள் எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாத்தறை மாவட்டத்திலும் சிறிய அளவில் சில சம்பவங்கள் நடந்துள்ளன.

ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்து இல்லை

இதற்கிடையே, அம்பாறையில் தாக்கப்பட்ட முஸ்லிம் ஹோட்டலில் இருந்த உணவில் ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்து கலக்கப்பட்டதாக கூறப்பட்ட உணவை ஆராய்ந்த அரசாங்க பகுப்பாய்வாளர்கள், அதில் அப்படியான மருந்து எதுவும் கிடையாது என்றும், உணவில் இருந்தது அவியாதா மாவின் பகுதியே என்று போலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

கார்போஹைட்ரேட் பொருளே அதில் இருந்ததாக அரசாங்க பகுப்பாய்வாளர்கள் செய்தியாளர்களுக்கும் கூறியுள்ளனர்.

அந்த உணவில் ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்து இருந்ததாகக் குற்றஞ்சாட்டி தகறாறு செய்யப்பட்டதை அடுத்தே அன்றைய தினம் அந்த முஸ்லிம் ஹோட்டல் ஒரு கூட்டத்தால் தாக்கப்பட்டது.