மோசஸ் இல்லம் மீதான விமர்சனங்களுக்கு பாஸ்டர் மறுப்பு
மதுரையில் சிசுக்கொலையில் இருந்து தப்பியதாக சொல்லப்பட்ட 80க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளை கொண்டு செயல்பட்ட மோசஸ் கருணை இல்லம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் உயிர் பிழைத்த குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் உள்ளது என்ற குற்றச்சாட்டை அந்த நிறுவனம் முழுமையாக மறுத்துள்ளது.

1993ல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தொடங்கப்பட்ட நிறுவனத்தில் உள்ள குழந்தைகளில் இரண்டு குழந்தைகளைத் தவிர மற்ற குழந்தைகள் பிறந்தவுடன் மற்றவர்களால் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்ட குழந்தைகள் என்று அந்த இல்லத்தின் நிறுவனர் பாஸ்டர் கிடன் ஜேகப் தெரிவித்துள்ளார்.
'சிசுக்கொலையில் உயிர்தப்பிய மகள்களை பார்க்க துடிக்கும் மதுரை தாய்மார்கள்' என்ற அக்டோபர் 5ம் தேதி வெளியான இந்த செய்திக்கட்டுரையில் தனது தொண்டு நிறுவனத்தின் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, என்று அந்த நிறுவனத்தின் இயக்குநர் கிடென் ஜேக்கப் மறுத்துள்ளார்.
தற்போது வெளிநாட்டில் பயணம் செய்து கொண்டிருப்பதால் விளக்கமான பதிலை அளிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டதாகக் கூறும் ஜேக்கப், பிபிசி செய்தியில் குறிப்பிடப்பட்டதைப் போல அல்லாமல், இரண்டு குழந்தைகளைத் தவிர மற்ற எல்லாக் குழந்தைகளும் அப்போது உசிலம்பட்டியில் இயங்கிவந்த தனது "மோசஸ் கருணை இல்லம்" என்ற தொண்டு நிறுவன இல்லத்துக்கு, பிறந்தவுடன் கொண்டுவரப்பட்டதாகவும், இந்த இல்லம் நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்ததாகவும், அதன் இருப்பு நகரில் உள்ள எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றும் கூறினார்.
அவரது பதிலில் பிற அம்சங்கள்:
சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பின், குழந்தைகளுக்கு அங்கு கல்வி வாய்ப்புகள் அதிகம் என்பதால், இந்த இல்லம் திருச்சிக்கு மாற்றப்பட்டது. இது அரசு சமூக நல அதிகாரிகளுக்கு தெரிந்தே செய்யப்பட்டது.
தனது நிறுவனத்துக்கு தற்காலிக அங்கீகார சான்றிதழ், சமூக நல ஆணையர் அலுவலகத்தால் 2006ம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த தற்காலிக அங்கீகாரம் , 1960ம் ஆண்டு அனாதை இல்லங்கள் மற்றும் தர்ம இல்லங்கள் சட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் ஒரு கட்டுப்பாட்டு வாரியம் சான்றிதழ் அளிக்கும் வரை அமலில் இருக்கும் என்று அது மேலும் கூறியது என்கிறார் ஜேக்கப்.
எனவே தனது நிறுவனம் அங்கீகாரம் இல்லாமல் இயங்கியது என்பது முற்றிலும் தவறானது என்கிறார் அவர்.
மோசஸ் இல்லத்திற்கு அங்கீகாரம் கோரி அரசு அதிகாரிகளிடம் 2010, 11, மற்றும் 2013ம் ஆண்டுகளில் விண்ணப்பம் அளிக்கப்பட்டதாகவும், அது இன்னும் நிலுவையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

பாடம் நாராயணன் தொடுத்த வழக்கு காரணமாக சமூக நலத்துறை அதிகாரிகள் தனது இல்லத்தை மூட உத்தரவு அனுப்பினார்கள் என்றும், தன் மீது ஒரு முதல் தகவல் அறிக்கையும் ( எப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டது என்றும் , ஆனால் இந்த உத்தரவு உயர்நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டதால், தனது இல்லம் மூடப்படுவது தவிர்க்கப்பட்டது என்றும் ஜேக்கப் கூறினார்.
அதன் பின்னர் தொடுக்கப்பட்ட மற்றொரு வழக்கு காரணமாக, ஏற்கனவே பெற்றோர்களால் பெண் குழந்தைகள் என்ற காரணத்தால் நிராகரிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த, தனது இல்லக் குழந்தைகள் , 2015-ஆம் ஆண்டிலிருந்து அரசு அதிகாரிகளால், மேலும் மன வலியை தரும் விசாரணைகள் போன்றவற்றுக்கு உள்ளானார்கள் என்று அவர் கூறுகிறார்.
மேலும் இதில் 70 சதவீதமானவர்கள் ஏற்கனவே சட்டப்பூர்வமாக வயது வந்தவர்கள் என்றும் அவர் கூறுகிறார்.
இதனிடையே, இந்த இரு வழக்குகளும் ஒன்றாக நடத்தப்பட்டு இறுதியில் 2016ம் ஆண்டு நவம்பரில் , உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில், சமூக நலத்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் நான்கு வாரங்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டதாகக் கூறுகிறார் ஜேக்கப்.
தனது இல்லத்தில் இருந்த வயது வந்த பெண்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு அவர்களது எதிர்காலம் பற்றி திருச்சி பெண்கள் நீதிமன்றத்தின் முன் நிச்சயிக்கப்படவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்கிறார் ஜேக்கப்.
`பெற்றோருடன் இணைய விரும்பவில்லை'
இந்த உத்தரவு இன்னும் அமல்படுத்தப்படவில்லை. தற்போது இந்த இல்லத்தில் இருக்கும் அனைத்து 89 பெண்களும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதில் இரண்டு பேர்தான் கடந்த ஆண்டு இறுதியில் மைனர்களாக இருந்தவர்கள் என்பதால் அவர்கள் மட்டுமே உயர்நீதிமன்ற உத்தரவின்படி அவர்கள் சொந்த வீடுகளுக்கு திரும்ப அனுப்பப்படவேண்டியவர்கள். இப்போது அவர்களும் சட்டரீதியான வயது வந்தவர்களாகிவிட்டனர்.

பட மூலாதாரம், BBX
அந்த பெண்களில் இருவரைத் தவிர வேறு எந்தப் பெண்களும் அவர்களின் உயிரியல் ரீதியான பெற்றோர்களுடன் இணைய விரும்பவில்லை. இதை அவர்கள் திருச்சி பெண்கள் நீதிமன்றத்துக்குத் தெரிவித்துவிட்டனர். தங்களது விருப்பம் அமல்படுத்தப்படுவதை அவர்கள் எதிர்நோக்கியிருக்கிறார்கள்.
பிற குழந்தைகளில் பலர் 18 வயதை கடந்தவர்கள் என்பதால் அவர்கள் சுயமாக முடிவு எடுக்கும் உரிமையை பெற்றுள்ளதால் விருப்பம் இருப்பவர்கள் பெற்றோருடன் செல்லுவதற்கு எந்த தடையும் இருக்காது என்று ஜேகப் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:












