1,333 வெளிநாட்டவர்கள் இலங்கையில் தஞ்சம்: அமைச்சர் தகவல்

இலங்கையில் உள்ள ஐ .நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் பொறுப்பில் அகதிகளாகவும், அரசியல் தஞ்சம் கோருவோராகவும் 1,333 வெளிநாட்டவர்கள் தங்கியிருப்பதாக துறைமுகங்கள் மற்றம் கப்பல் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மகிந்த சமரசிங்க
படக்குறிப்பு, அமைச்சர் மகிந்த சமரசிங்க

"இந்த வெளிநாட்டவரில் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களே அதிகம் (1037 பேர்)" என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பொன்றில் இந்த தகவல்களை அமைச்சர் மகிந்த சமரசிங்க வெளியிட்டார்.

அந்த 1,333 பேரில் 728 பேர் அகதிகளாக தங்கியிருப்பதாகவும் ஏனைய 605 பேரும் அரசியல் புகலிடம் கோரி தங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

"அரசியல் தஞ்சம் கோருபவர்கள் தொடர்பாக ஐ.நா. அகதிகளுக்கான ஆணையம் விசாரனைகளை நடத்தி வருகின்றது. அரசியல் தஞ்சம் உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் வேறொரு நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் . இல்லையேல் சொந்த நாட்டிற்கு திருப்பி வைக்கப்படுவார்கள் " என்றும் அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.

பிற நாடுகளில் இருந்து வந்தோர்

ஆப்கானிஸ்தான் - 190 , மியன்மார் - 36 , ஈராக் -18 ,சோமாலியா 14 , ஏமன் - 13 , மாலத்தீவு -11 , பாலஸ்தீனம் - 10 , நைஜீரியா -02, சிரியா -01, நியுனேசியா -01 என்ற எண்ணிக்கையில் ஏனைய நாட்டவர்கள் இலங்கையில் ஐ.நா அகதிகளுக்கான ஆணையத்தின் பொறுப்பில் தங்கியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :