செஸ் ஒலிம்பியாட் 2022: இந்தியா வெற்றி வாகை சூட நல்ல வாய்ப்பு உள்ளது - ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சூசன் நைனன்
- பதவி, விளையாட்டு செய்தியாளர்
இந்தியாவில் கடந்த 2013ஆம் ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் நடந்தபோதுதான் 'சதுரங்க விளையாட்டு' தேசிய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு பிறகு, மீண்டும் இந்த விளையாட்டு மீதான அனைவரது பார்வையும் இந்தியா மற்றும் இந்திய அணி மீது திரும்பியிருக்கிறது.
இந்தியா முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துகிறது. இந்த போட்டி தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 10 வரை ஒலிம்பியாட் நடைபெறுகிறது.
இப்போட்டியில் பங்கேற்பதற்காக 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் மாமல்லபுரம் வந்தடைந்துள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட்டின் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் குழு போட்டியில் இந்தியா 2014ஆம் ஆண்டில் ஒருமுறை மட்டுமே வெண்கல பதக்கம் வென்றுள்ளது. அப்போது இந்தியா தர வரிசையில் 19ஆம் இடத்தில் இருந்தது. இளமையான மற்றும் வலிமையான கிராண்ட்மாஸ்டர்கள் கொண்ட இந்திய அணி, ஒலிம்பியாட் போட்டியில் தன் முழு திறமையை வெளிக்காட்ட தயாராக உள்ளது.
இந்திய அணி இந்த முறை வலுவான போட்டியாளராகக் கருதப்படுகிறது. ஒலிம்பியாட் போட்டியில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு இரண்டாவது இடம் பிடித்திருப்பது ஒருவேளை அதன் காரணமாக இருக்கலாம்.
வழிகாட்டியாக விஸ்வநாதன் ஆனந்த்

பட மூலாதாரம், Getty Images
இம்முறை இந்திய அணியின் வழிகாட்டியாக ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் இருக்கிறார். அவருடன் பல வெற்றிகரமான செஸ் பயிற்சியாளர்களும் இந்திய வீரர்களுக்கு ஆதரவாக உள்ளனர்.
அத்தகைய சூழ்நிலையில் இந்திய அணி ஒட்டுமொத்த ஒலிம்பியாட் போட்டியிலும் ஒரு ஈர்ப்பு மையமாக இருக்கும்.
ஆறு வெவ்வேறு அணிகளைச் சேர்ந்த மொத்தம் 30 வீரர்கள் (ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் தலா மூன்று பேர்) இந்த நிகழ்வில் இந்தியா சார்பில் விளையாடுகின்றனர்.
கடந்த சில வாரங்களாக நடக்கும் அணியின் பயிற்சி அமர்வுகள் அவர்களை ஒன்றிணைத்துள்ளன. நாட்டிற்கு வெளியே வேறு போட்டிகளில் விளையாடிக்கொண்டிருந்த சில வீரர்கள் இப்போதும் விமானப்பயணத்தின் சோர்வுடன் போராடிவருகின்றனர்.
ஒரு மாபெரும் உள்நாட்டுப் போட்டியின் உற்சாகமும் அழுத்தமும் இன்னும் தொடங்கவில்லை.
பென்டலா ஹரிகிருஷ்ணா, விதித் குஜராத்தி, கே சஷிகிரண், எஸ்எல் நாராயணன் மற்றும் அர்ஜுன் எரிகேசி போன்ற அனுபவமிக்க வீரர்கள் ஓபன் பிரிவில் இந்தியாவின் முதல் அணியில் இடம் பெறுவார்கள். அதே நேரத்தில், இளம் திறமைகளின் சுவாரஸ்யமான ஜுகல்பந்தி 'பி' அணியில் காணப்படும்.
ஒலிம்பியாட் விதிகள்

பட மூலாதாரம், Getty Images
• எந்த அணியும் ஒரே எதிரணிக்கு எதிராக ஒன்றுக்கு மேற்பட்ட முறை விளையாட முடியாது. மேலும் இரண்டு ஜோடி அணிகளுக்கிடையேயான மேட்ச் புள்ளிகளின் வித்தியாசம் 0 அல்லது முடிந்தவரை குறைவாக இருக்க வேண்டும்.
• 'A' அணி பொதுவாக ஒரு நாட்டின் தலை சிறந்த வீரர்களை உள்ளடக்கியதாக இருக்கும். 'B' அணிகள் இரண்டாம் நிலையில் இருக்கும் சிறந்த வீரர்களைக் கொண்டிருக்கும்.
• போட்டியில் புள்ளிகள் இந்த அடிப்படையில் வழங்கப்படும் - ஒரு வெற்றிக்கு இரண்டு புள்ளிகள் மற்றும் ஒரு சமநிலைக்கு ஒரு புள்ளி, தோல்விக்கு புள்ளிகள் இல்லை.
• போட்டி இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது - ஓபன் மற்றும் மகளிர். இரு பாலினத்தவர்களும் ஓபன் பிரிவில் பங்கேற்கலாம்.
'பி' அணியிடமிருந்தும் பதக்க எதிர்பார்ப்பு
11ஆம் நிலை 'பி' அணியில் இந்தியாவின் மிகவும் திறமையான டீனேஜ் கிராண்ட்மாஸ்டர்களான ஆர் பிரக்ஞானந்தா, டி குகேஷ், நிஹால் சரீன் மற்றும் ரவுனக் சாத்வானி ஆகியோர் உள்ளனர். 2014 ஆம் ஆண்டு வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த மூத்த வீரர் பி அத்பிபனும் இந்த அணியில் இருப்பார்.
பதக்கங்கள் கண்டிப்பாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இவ்வளவு வலுவான 'பி' அணி நம்மிடம் இருப்பது அரிது என்று இந்திய 'பி' அணியின் பயிற்சியாளர் ஸ்ரீநாத் நாராயண் கூறினார்.
கடைசி நிமிடத்தில் உடல்நலப் பிரச்சனை எதுவும் இல்லையென்றால் நாம் பதக்கம் வெல்லும் வாய்ப்பு அதிகம். 'வீரர்கள் இன்னும் முழு ஃபார்முக்கு வரவில்லை. அழுத்தம் அதிகரிக்கும் போது, அவர்கள் சிறந்த ஃபார்முக்கு வரத்தொடங்குவார்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.
ஜூலை 28 அன்று தொடக்கவிழா நடைபெற்றது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி நிறைவு விழா நடைபெறும். போட்டிகள் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறும். போட்டிகள் மொத்தம் 11 சுற்றுகளாக நடைபெறும் . நடுவில் ஒரு நாள் ஓய்வு நாளாக இருக்கும்.
ஒவ்வொரு அணியிலிருந்தும் நான்கு வீரர்கள் விளையாடுவார்கள் மற்றும் ஒரு வீரர் ரிஸர்வில் வைக்கப்படுவார்.
கோனேரு ஹம்பி மற்றும் ஹரிகா துரோணவல்லிக்கு தரவரிசையில் முதலிடம்
இந்திய மகளிர் அணியின் திறமையான வீராங்கனைகளான கோனேரு ஹம்பி மற்றும் ஹரிகா துரோணவல்லிக்கு தரவரிசையில் முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஹரிகா துரோணவல்லி கர்ப்பமாக உள்ளார். பல சர்வதேச போட்டிகளில் அவர் ஆதிக்கம் செலுத்தியுள்ளார். இது தவிர தானியா சச்தேவ், ஆர் வைஷாலி மற்றும் பக்தி குல்கர்னி ஆகியோரும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக ஒலிம்பியாட் போட்டிகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன. 2020 ஆம் ஆண்டின் ஆன்லைன் ஒலிம்பியாட்டில் இந்தியா தங்கப் பதக்கத்தை ரஷ்யாவுடன் பகிர்ந்து கொண்டது. 2021 இல் வெண்கலப் பதக்கம் பெற்றது. இருப்பினும் அதை ஆஃப்லைன் செஸ் ஒலிம்பியாட் உடன் ஒப்பிட முடியாது.
இந்தியா வெறும் நான்கு மாதங்களில் நிகழ்ச்சிக்கான ஆயத்தங்களைச் செய்தது
பொதுவாக, ஒரு பெரிய நிகழ்வுக்கு தயாராவதற்கு ஒரு நாட்டிற்கு சில வருடங்கள் வழங்கப்படும். ஆனால் இந்தியாவுக்கு நான்கு மாதங்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டது.
44 வது செஸ் ஒலிம்பியாட் ரஷ்யாவில் நடைபெறவிருந்தது. ஆனால் யுக்ரேன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவில் நடைபெறவிருந்த இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.
அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (AICF),இந்த 10 நாள் போட்டியை நடத்த 1 கோடி டாலர்களை தமிழக அரசுக்கு வழங்கியது. இதில்1700 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இங்கு நிறுவப்பட்டுள்ள மின்னணு சதுரங்கப் பலகைகளைச் சோதிக்கும்விதமாக ஞாயிற்றுக்கிழமை சுமார் 1,400 உள்நாட்டுப் பங்கேற்பாளர்கள் கொண்ட ஒரு திறந்த போட்டி நடத்தப்பட்டது.
உலகம் முழுவதிலுமிருந்து மாமல்லபுரத்தை வந்தடையும் அணிகளை வரவேற்க விமான நிலையத்தில் பாரம்பரிய உடை (வேட்டி-சட்டை) அணிந்த வரவேற்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
உலகின் தலைசிறந்த அணியான ரஷ்யா மற்றும் சீனாவும் இந்த ஒலிம்பியாடில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் ஏறக்குறைய எல்லா முன்னணி நாடுகளும் தங்கள் சிறந்த வீரர்களுடன் கலந்துகொள்ள இருக்கின்றன.
இவர்களில் உலகின் நம்பர் ஒன் வீரர் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனும் அடக்கம். தொடர்ந்து ஐந்து முறை உலக சாம்பியன்ஷிப்பை வென்ற அவர், அடுத்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் விளையாடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
கார்ல்சனுக்கு சென்னை ஸ்பெஷல்
2013 ஆம் ஆண்டில் அப்போதைய உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்து கார்ல்சன் தனது முதல் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இடம் சென்னை.
அந்த ஆட்டம் இளம் இந்திய செஸ் வீரர்களின் முழு தலைமுறை மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது ஏழு அல்லது எட்டு வயதாக இருந்த நாட்டின் தற்போதைய கிராண்ட்மாஸ்டர்கள் சிலர், அந்தப்போட்டியைப் பார்த்து பதற்றத்தில் கண்களை மூடிக்கொண்டனர்.
அந்த போட்டியின் போது, ஹயாட் ரீஜென்சி ஹோட்டலின் லாபி ஒரு சதுரங்கக் கண்காட்சி போல் இருந்தது. சதுரங்கப் பலகைகள் தரையிலும், சில பலகைகள் மக்களின் மடியிலும் வைக்கப்பட்டிருந்தன. குழந்தைகள் அதைப்பார்த்துக் கொண்டே நகர்வு புதிர்களைத் தீர்ப்பதில் மும்முரமாக இருந்தனர்.
இவர்களில் பிரக்ஞானந்தா மற்றும் நிஹால் ஆகியோர் அடங்குவர். அதே நேரத்தில் சென்னையில் நடந்த ஒன்பது வயதுக்குட்பட்டோருக்கான தேசிய சாம்பியன்ஷிப்பை நிஹால் வென்றிருந்தார். பெரிய போட்டி மற்றும் 20 வயதான கார்ல்சன் அவரை ஆழமாக பாதித்திருக்கலாம்.
1995 உலக சாம்பியன்ஷிப்பில் கேரி காஸ்பரோவ் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் இடையே நடந்த போட்டி கிராண்ட்மாஸ்டர் ஸ்ரீநாத்தின் வாழ்க்கையை மாற்றும் தருணமாக நிரூபிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
"என் தந்தை அந்த போட்டியை டிவியில் பார்த்தார். அவருக்கு செஸ் மீது காதல் ஏற்பட்டது. அப்போதுதான் அவர் எனக்கு செஸ் பயிற்சி அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அப்போது எனக்கு ஒரு வயது."என்று ஸ்ரீநாத் கூறுகிறார்.
இந்தியாவில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஒலிம்பியாட் போட்டிக்கு ஏற்பாட்டாளர்கள் விளம்பரப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். சென்னையின் புகழ்பெற்ற நேப்பியர் பாலம், இப்போது சதுரங்கப் பலகை போல் காட்சியளிக்கிறது. பால் பாக்கெட்டுகளில் செஸ் துண்டுகள் அச்சிடப்பட்டுள்ள. நிகழ்ச்சி தொடர்பான ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் ஆன்லைன் தளங்களில் சதுரங்கத்தின் புகழ் அதிகரித்துள்ளது. யூடியூப் மற்றும் ட்விட்ச் ஸ்ட்ரீம்கள் போன்ற ஆன்லைன் தளங்களில் மக்கள் இதை தீவிரமாக பின்தொடர்கின்றனர்.
இந்தியா உலக சாம்பியன்ஷிப்பை ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நடத்தியது. அதன் தாக்கம் மெதுவாக குறையத்தொடங்கியிருந்தது. அத்தகைய சூழ்நிலையில், ஒலிம்பியாட் நடத்திய பிறகு, நிச்சயமாக ஒரு புதிய ஆற்றல் உட்செலுத்தப்படும்.
இந்த ஒலிம்பியாட் இந்திய அணிக்கு வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும். கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்டத்தின் மீது பைத்தியமாக உள்ள இளம் தலைமுறையினர், அடுத்த ஒன்றரை வாரங்களுக்கு மட்டுமேயானாலும் ஒலிம்பியாட் போட்டியின் ஒவ்வொரு அப்டேட்டையும் கண்காணிப்பார்கள்.
நமது நாட்டின் சிறந்த செஸ் வீரர்களை நேரில் கண்டு அவர்களைப்பற்றித் தெரிந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












