தமிழ்நாட்டு வீரர் இடம் பெறும் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டி இன்று தொடக்கம்

பட மூலாதாரம், Mareeswaran sakthivel
ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான இந்திய அணிக்கு இரண்டு தமிழ்நாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் இன்று விளையாடும் அணியில் இடம் பெற்றுள்ளார்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய ஹாக்கி அணியில் தமிழ்நாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்கே நடக்கிறது ஆசிய கோப்பை ஹாக்கி?
11வது ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கிப்போட்டி இந்தோனீஷிய தலைநகர் ஜகார்த்தாவில் இன்று தொடங்குகிறது. இன்று (மே 23) தொடங்கி ஜூன்1ஆம் தேதி வரை நடக்க இருக்கும் இந்தப் போட்டிகளில், நடப்பு சாம்பியனான இந்தியா உட்பட 8 நாடுகள் களம் காண்கின்றன.
1982ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஹாக்கி சாம்பியன்ஷிப் இந்த ஆண்டுடன் 40ஆவது ஆண்டை எட்டுகிறது. இன்று 4 போட்டிகள் நடக்கவுள்ளன. மாலை 6.30 மணிக்கு நடக்கும் போட்டியில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளைப் பொறுத்தவரை இரண்டுமே இதுவரை 9 முறை பதக்கங்கள் வென்றுள்ளன.
இந்தியா, வங்கதேசம், மலேசியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தொடக்கம் முதலே பங்கேற்று வரும் நிலையில்,இந்தோனீஷியா இந்த ஆண்டுதான் முதன்முதலாக ஆசியக்கோப்பை ஆண்கள் ஹாக்கியில் பங்கேற்கிறது.
தமிழ்நாட்டு வீரர்கள் யார் யார்?
11ஆவது ஆசிய கோப்பைக்கான இந்திய ஹாக்கி அணியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன் சக்திவேல், அரியலூரை சேர்ந்த செ. கார்த்திக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
எளிய பின்னணியில் இருந்து வந்த இந்த இரண்டு பேரில், இன்று (மே 23) நடைபெற உள்ள ஆட்டத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்த மாரீஸ்வரன் விளையாட உள்ளார்.

பட மூலாதாரம், Muthukumar
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஹாக்கி சிறப்பு விளையாட்டு விடுதியின் பயிற்சியாளர் முத்துக்குமார் இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது, " இந்திய சீனியர் ஆண்கள் அணியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் தமிழ்நாட்டு வீரர்கள் இருவர் தேர்வாகியுள்ளனர். அவர்கள் இருவரும் எங்களது விடுதியில் பயிற்சி பெற்றவர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி, பெருமிதமாக இருக்கிறது. இவர்களைப் போல் இன்னும் பலர் வருவார்கள் என்கிற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.'' என்று தெரிவித்திருந்தார்.
எப்படி நடைபெறும்?

பட மூலாதாரம், FHI
பங்கேற்கும் 8 நாடுகளும் தலா 4 அணிகள் கொண்ட 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணிகளோடும் தலா ஒரு முறை மோதும்.
லீக் சுற்றின் முடிவில் இந்த 2 பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறும்.
இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணியுடன் தலா ஒருமுறை விளையாடும். அந்த சுற்றின் முடிவில் முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணிகள் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும். கடைசி 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 3,4வது இடங்களுக்கான போட்டியில் விளையாடும்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தமிழர் இந்திய ஹாக்கி அணியில் விளையாடும் நிகழ்வு இன்று மாலை இந்திய நேரப்படி 5 மணிக்கு இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடக்கவுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













