பிபிசி ISWOTY விருது: பிப்ரவரி 8ஆம் தேதி முதல் தகுதிபெறுவோரின் பெயர்கள் முன்மொழிவு, ஆன்லைனில் வாக்கெடுப்பு, மார்ச் 7இல் வெற்றியாளர்கள் அறிவிப்பு

பிபிசியின் பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கான விருது
படக்குறிப்பு, பிபிசியின் பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கான விருது

பிபிசியின் இந்திய விளையாட்டு வீராங்கனை விருது வழங்கும் நிகழ்ச்சியின் மூன்றாம் பதிப்பு, இந்த ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி விருதுக்கு தகுதி பெறுவோரின் பெயர் அறிவிப்புடன் மீண்டும் அறிமுகமாகிறது.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் இந்திய பெண்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

விளையாட்டுத்துறையைச் சேர்ந்த செய்தியாளர்கள், வல்லுநர்கள், எழுத்தாளர்கள் அடங்கிய நடுவர் குழுவால் ஐந்து பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களில் பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்த இந்திய விளையாட்டு வீராங்கனைக்கு வாக்களிக்க முடியும். இந்த வாக்களிப்பு, ஆன்லைன் முறையில் உலகளவில் பிபிசி இந்திய மொழிகளின் இணையதளங்களிலும் பிபிசி ஸ்போர்ட்ஸ் பக்கத்திலும் நடைபெறும்.

இந்திய செஸ் வீராங்கனையும், BBC ISWOTY 2020 விருதின் வெற்றியாளருமான கோனேரு ஹம்பி, இந்த விருது மீண்டும் அறிமுகமாவது குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

கோனேரு ஹம்பி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோனேரு ஹம்பி

"பிபிசி ISWOTY ஒரு அற்புதமான முயற்சி, இது இளைய தலைமுறையை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், பெண் வீராங்கனைகளின் அங்கீகாரத்துக்கும் உதவுகிறது. நான் ஒரு சதுரங்க வீராங்கனையாக பிபிசி ISWOTY விருதுக்கு தகுதியாளராக முன்மொழியப்பட்டபோது,​​ இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து எனக்கு நிறைய அங்கீகாரம் கிடைத்தது," என்று கோனேரு ஹம்பி தெரிவித்தார்.

பிபிசி இந்திய சேவையின் தலைவர் ரூபா ஜா கூறுகையில், "2022ஆம் ஆண்டு சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் நாங்கள் ISWOTYஇன் மூன்றாவது பதிப்பை வெளியிடுகிறோம். இதேவேளையில் நாங்கள் பிபிசியின் நூற்றாண்டை கொண்டாடுகிறோம். இந்த விருது, அச்சமற்ற மற்றும் துணிச்சலான வீராங்கனைகளைக் கொண்டாடும் பிபிசியின் உண்மையான உணர்வோடு நன்றாகப் பொருந்துகிறது. மீண்டும் ஒருமுறை, எல்லா முரண்களுக்கும் எதிராக வெற்றி பெற்று, உலகை சமமாகவும், நியாயமாகவும் மாற்றிய அந்த பெண்களை கௌரவிக்க நாங்கள் ஒன்று கூடுகிறோம்," என்று தெரிவித்தார்.

பிபிசி ISWOTY வெற்றியாளரின் பெயர் மார்ச் 7, 2022 அன்று அறிவிக்கப்படும். இத்துடன் மேலும் இரண்டு இந்திய விளையாட்டு நட்சத்திரங்களுக்கு அவர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் வகையில் பிபிசியின் 'வளர்ந்து வரும் வீராங்கனை விருது' மற்றும் இந்திய விளையாட்டுத் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் முன்னோடி விளையாட்டு ஆளுமைக்கு பிபிசியின் 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: