MI vs DC: டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி: மும்பை இந்தியன்ஸின் ப்ளே-ஆஃப் கனவு பலிக்குமா?

பட மூலாதாரம், BCCI / IPL
நடப்பு ஐபிஎல் தொடரின் 46வது ஆட்டமாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோற்றபின் ஒரு போட்டியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, தற்போது மீண்டும் தோல்வி கண்டுள்ளது.
ஐபிஎல் 2021இல் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் ஐந்தில் மட்டுமே வென்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. அதுவும் கடைசியாக அந்த அணி ஆடிய ஐந்து போட்டிகளில், இன்றைய போட்டி உள்பட நான்கில் தோல்வியையே சந்தித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் கடைசியாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு நுழைவதற்கான நம்பிக்கையை ரசிகர்களுக்கு விதைத்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அடுத்து இன்று டெல்லி அணியுடனும் அடுத்ததாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரண்டு அணிகளுடனும் நடக்க உள்ள போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் இருந்தது.
இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் வீழ்த்தியதன் மூலம் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு நுழைவதற்கான வாய்ப்பு மும்பை அணிக்கு மேலும் மங்கியுள்ளது.
ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்றாலும் ப்ளே-ஆஃப் செல்லும் என்று உத்தரவாதம் இல்லை.
ஏனெனில் அடுத்த இரு போட்டிகளிலும் மிகவும் அதிகமான அளவில் ரன்களை எடுக்க வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது.

பட மூலாதாரம், BCCI / IPL
போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் கிடைக்கும் புள்ளிகள் அடிப்படையில் மட்டுமல்லாமல் ஒவ்வொரு போட்டியிலும் எடுக்கும் ரன்கள் அடிப்படையில் கணக்கிடப்படும் நெட் ரன் ரேட் அடிப்படையிலும் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் பின்தங்கியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் செல்ல வேண்டுமானால் அந்த அணியை விடவும் புள்ளிப்பட்டியலில் மேலே உள்ள அணிகள், அவை அடுத்து ஆடவுள்ள போட்டிகளில் சொதப்பலாக ஆடவும் வேண்டும்.
இப்போதைய சூழலில் தமது பலத்தை மட்டுமல்லாது பிற அணிகளின் பலவீனத்தையும் மும்பை இந்தியன்ஸ் நம்பியுள்ளது.
இன்றைய போட்டி
ஷார்ஜாவில் நடைபெற்ற இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஆட்டத்தின் 10 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, 11-வது ஓவர் முதல் 20-வது ஓவர் வரை மளமளவென ஆறு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் யாரும் டக் அவுட் ஆகவில்லை என்றாலும் சொல்லிக்கொள்ளும்படி யாரும் ரன் எடுக்கவும் இல்லை.
சூரியகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக எடுத்த 33 ரன்கள் தான் இன்றைய ஆட்டத்தின் அந்த அணிக்கான அதிகபட்ச ஸ்கோர்.

பட மூலாதாரம், BCCI / IPL
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக பந்துவீச்சாளர்கள் அவேஷ் கான் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களம் இறங்கினாலும் அந்த அணிக்கு தொடக்கம் ஒன்றும் அவ்வளவு சிறப்பானதாக இல்லை.
தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் ஆறு மற்றும் மற்றும் எட்டு ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்ததாக வந்த ஸ்டீவ் ஸ்மித் ஒன்பது ரன்கள் மட்டுமே எடுத்தார்.
முதல் ஐந்து ஓவர்கள் முடிவதற்குள் டெல்லி கேப்பிடல்ஸ் மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது.
முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் யாரும் இரட்டை இறக்கங்களை எட்டவே இல்லை என்றாலும் அடுத்ததாக வந்த கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் ஓரளவு நிதானமாக ஆடினர்.
ரிஷப் பந்த் 22 பந்துகளில் 26 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 33 பந்துகளில் 33 ரன்களும் எடுத்தனர்.
ஆட்டம் முடிய ஐந்து பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இன்றைய போட்டியில் வென்றது.
பிற செய்திகள்:
- ராஜீவ் காந்தி படுகொலையும் போலீஸ் தொப்பியும் - ஓய்வுபெறும் நாளில் கலங்கவைத்த ஐ.பி.எஸ் அதிகாரி
- ஒரு நபர் வயிற்றுக்குள் இருந்து 1 கிலோ ஆணி, ஸ்குரூ, நெட்டுகள் அகற்றம்
- தைவான் "வான் பாதுகாப்பு மண்டலத்தில் 38 சீன படை விமானங்கள் நுழைந்ததாக" புகார்
- தமிழ்நாடு ரவுடி ஒழிப்பு நடவடிக்கையில் குறிவைக்கப்படுகிறதா விசிக?
- கிருஷ்ணர் படங்களை வரையும் முஸ்லிம் பெண்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












