கேரளாவில் கிருஷ்ணர் படங்களை வரையும் முஸ்லிம் பெண்

ஜஸ்னா சலீம்

பட மூலாதாரம், jasna saleem

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி ஹிந்தி

ஜஸ்னா சலீம் தனக்குப் பிடித்த ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசினால் குழந்தை போல துள்ளிக் குதித்து மகிழ்ச்சியாகி விடுகிறார். அந்த ஒரு விஷயம் குழந்தை கிருஷ்ணர். கைகளை வெண்ணைப் பானைக்குள் விட்டபடி, முகத்தில் வெண்ணெயைப் பூசிக் கொண்டிருப்பாரே, அதே கிருஷ்ணர்தான்.

ஜஸ்னா சலீமுக்கு 28 வயது. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாய். பால கிருஷ்ணரின் ஓவியங்களை கடந்த ஆறு ஆண்டுகளாக வரைந்து வருகிறார். இப்போது ஒரு கோயிலுக்கு தாம் வரைந்த கிருஷ்ணரின் ஓவியத்தை வழங்கியிருக்கிறார்.

கிருஷ்ணருக்கே நேரடியாக தாம் வரைந்த பால கிருஷ்ணரின் ஓவியத்தை வழங்கிவிட்டதாகப் பூரிக்கிறார். கனவு நிறைவேறிய பெருமிதம் அவருக்கு.

சில நாள்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள உலநாடு ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி கோயிலுக்கு கிருஷ்ணரின் படத்தை வழங்கினார் ஜஸ்னா. 80 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தக் கோயில் பத்தனம்திட்டை மாவட்டத்தில் உள்ள பந்தளத்தில் அமைந்துள்ளது. கோயிலின் மூலவர் குழந்தை கிருஷ்ணர்.

முதலில் அவரது ஓவியங்கள் குருவாயூரில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோயிலுக்கு வழங்கப்பட்டிருந்தன. அதை அறிந்து கொண்ட பந்தள கோயில் நிர்வாகத்தினர், தங்களுக்கு அப்படியொரு ஓவியம் வேண்டும் என்று கேட்டனர்.

இதற்கு முன்பு குருவாயூர் கோயிலுக்கு அவர் ஓவியங்களைக் கொடுத்திருந்தாலும், கோயிலுக்குள் சென்று நேரடியாக படங்களை வழங்கியது இதுதான் முதல்முறை.

ஜஸ்னா

பட மூலாதாரம், jasna saleem

ஓவியம் வரைவதற்காக எந்தவிதமான தொழில்முறை பயிற்சியும் ஜஸ்னா பெற்றதில்லை. ஜஸ்னாவின் கணவர் சலீம் அவருக்கு கிருஷ்ணரைப் பற்றிச் சொன்னார். அவரைச் சுற்றியிருக்கும் கதைகளையும் கூறத் தொடங்கினார்.

தடை சொல்லாத குடும்பத்தினர்

கோழிக்கோட்டில் உள்ள தனது வீட்டில் இருந்து பிபிசியிடம் தொலைபேசியில் பேசினார் ஜஸ்னா.

"அந்த நேரத்தில் நான் கருவுற்றிருந்தேன். கிருஷ்ணரின் அழகையும் துறுதுறுப்பையும் நான் உணர்ந்தபோது, அவருடைய வாழ்க்கையை ரசிக்கத் தொடங்கினேன். பின்னர் ஒருநாள் அவரது படத்தைப் பார்த்து வரையத் தொடங்கினேன். அதுவே எனது வாழ்க்கையின் முதல் படமாக அமைந்தது".

ஆனால், ஜஸ்னாவால் கிருஷ்ணரின் படத்தை வீட்டில் வைக்க முடியவில்லை. இதைப் பார்த்து அவரது வீட்டில் இருப்பவர்கள் கோபப்படுவார் என்று அவரது கணவர் சலீம் முதலில் நினைத்தார்.

ஆனால் ஜஸ்னா ஓவியம் வரைவதில் எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை. "நான் ஒரு பழமைவாத குடும்பத்தில் இருந்து வந்தவள். ஆனால் என் கணவர் வீட்டில் இருப்பவர்கள் நான் ஓவியம் வரைவதைத் தடுக்க வில்லை."

ஜஸ்னா

பட மூலாதாரம், jasna saleem

"நான் முதலில் உருவாக்கிய கிருஷ்ணர் ஓவியத்தை, என் நண்பரான நம்பூதிரி குடும்பத்துக்கு கொடுத்தேன். கிருஷ்ணரின் படத்தை ஒரு முஸ்லிம் உருவாக்கியதைக் கண்டு எனது நண்பரின் குடும்பத்தினர் ஆச்சரியப்பட்டனர். விருப்பங்கள் நிறைவேறும் என்றும் அவர்கள் கூறினர்."

அப்போதிருந்து அவர் தொடர்ந்து கிருஷ்ணரைத் தேர்ந்தெடுத்து ஓவியங்களாக வரைந்தார்.

குழந்தை கிருஷ்ணரை தேர்ந்தெடுத்தது ஏன்?

ஜஸ்னாவுக்கு கிருஷ்ணரின் முகம் உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருந்தது. கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டதாகவும் இருந்தது. முதல் படத்தில் கிருஷ்ணர் கைகளைக் கட்டியிருப்பது போலப் பார்த்தார். அதன் பிறகு வெண்ணெய்ப் பாத்திரத்தில் கையை விடுவது போன்ற படம் கிடைத்தது. பின்னர் கிருஷ்ணரைப் படங்களாக வரையத் தொடங்கிவிட்டார்.

வெண்ணெய்ப் பானைகளுடன் இருக்கும் கிருஷ்ணரின் படங்களை மட்டுமே ஏன் வரைகிறீர்கள் என்று ஜஸ்னாவிடம் கேட்கப்பட்டது.

"கைகளில் வெண்ணெய் இருக்கும் கிருஷ்ணரின் படம் மிகவும் அழகாக இருக்கிறது. ஏனெனில் தனக்குப் பிடித்தமான உணவில் திருப்தியடைந்த ஒருவர் அதில் இருக்கிறார்."

ஜஸ்னா படங்களை வரையத் தொடங்கியபோது, ​​அவருடைய தாய் மாமாதான் முதலில் குருவாயூர் கோவிலில் அவற்றைக் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். குருவாயூர் கோயிலில் இருந்து வந்தவர்கள் அங்கிருந்த ஜஸ்னாவின் பால கிருஷ்ணர் ஓவியத்தைப் பார்த்ததாகவும் அது மிகவும் அழகாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார்கள்.

ஜஸ்னா

பட மூலாதாரம், jasna saleem

"இந்த ஓவியத்தின் மிகவும் சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், குழந்தை கிருஷ்ணரின் குறும்புத்தனத்தை அவர் கச்சிதமாக வரைந்திருக்கிறார். இந்தப் படத்தை பார்த்தால், மகிழ்ச்சி கிடைக்கிறது" என்கிறார் புனேயைச் சேர்ந்த தத்வமசி சன்ஸ்தாவின் ஜே.பி.கே. நாயர்.

மெட்டாபிசிக்ஸ் கல்வி நிறுவனம் இந்த ஓவியத்துக்கு நிதியுதவி செய்திருக்கிறது.

இதுவரை நூற்றுக்கணக்கான படங்களை ஜஸ்னா வரைந்திருக்கிறார். கேரளா தவிர, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து படம் கேட்டு ஆர்டர்கள் வருகின்றன.

ஆனால் ஜஸ்னா பணத்தைப் பெரிதாகக் கருதவில்லை. "மன திருப்திதான் எனக்குக் கிடைக்கும் நன்மை" என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :