Kerri Strug: காலில் தசைநார்கள் கிழிந்த பின்னும் அமெரிக்காவுக்கு முதல் தங்கம் பெற்று கொடுத்த அசல் வீராங்கனை

கெர்ரி ஸ்ட்ரக்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கெளதமன் முராரி
    • பதவி, பிபிசி தமிழுக்காக

அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டால் விடுப்பு கிடைக்கும். ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டால் அவர்கள் வாழ்கையே இருண்டுவிடும்.

காயங்கள், அவர்களின் வாழ்வை சூறையாடும் தாயங்கள்.

ஒரு விளையாட்டு வீரனை உறுத்தும் சிறு காயம் போதும், பரமபதம் விளையாட்டில் பாம்பு கொத்தியது போல உச்சத்தில் இருப்பவரின் வாழ்கையை மீண்டும் ஒன்றாம் எண்ணுக்கு கொண்டு வந்துவிடும்.

அப்படிப்பட்ட இக்கட்டான காயத்தோடும், தன் நாட்டுக்காக பதக்கம் வென்ற அசல் வீராங்கனையைப் பற்றித் தான் இங்கு பார்க்கப் போகிறோம். அவர் பெயர் கெர்ரி ஸ்ட்ரக் (Kerri Strug). 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் பங்குபெற்ற அமெரிக்காவின் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் அணியைச் சேர்ந்தவர்

பல தசாப்தங்களாக ஒலிம்பிக்கில் சோவியத் ரஷ்யா தனிப் பெரும் தலைவனாக வலம் வந்து கொண்டிருந்த விளையாட்டு தான் ஜிம்னாஸ்டிக்ஸ்.

அதில், சோவியத்தை தோற்கடிக்க அமெரிக்க தொடர்ந்து முயற்சித்து வந்தது.

1996 அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளிலும் இதே கதை தான் தொடரும் என பலரும் எதிர்பார்த்தனர்.

கெர்ரி ஸ்ட்ரக்

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யா மற்றும் ரோமேனியா ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்கில் பிரமாதமாக போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். அமெரிக்காவும் விடாபிடியாக தன் இருப்பை நிலை நாட்டிக் கொண்டிருந்தது.

ஜிம்னாஸ்டிக்கில் ஒவ்வொரு போட்டியாக நிறைவடைந்து வந்தது. கடைசியாக வால்ட் ஜம்பிங் போட்டி மட்டுமே பாக்கி.

அதில் அமெரிக்கா சிறப்பாக செயல்பட்டால் தங்கம் நிச்சயம் என ஒட்டுமொத்த அமெரிக்க அணியும், அமெரிக்க மக்களும் இருக்கையின் நுனியில் அமர்ந்து இருந்தனர்.

டாமினிக் மோசியானோ என்கிற 14 வயது சிறுமி 9.43 புள்ளிகளை வென்றால் அமெரிக்காவுக்கு தங்கம் உறுதி என இருந்தது.

பாவம் அச்சிறுமி வால்டில் இருந்து சிறப்பாக தவ்விக் குதித்தாலும், அவரால் சரியாக தரையிறங்க முடியாமல் தடுமாறி விழுந்தார். அமெரிக்க ரசிகர்களுக்கு சப்த நாடிகளும் அடங்கிவிட்டன.

இப்போது ஒட்டுமொத்த பதக்க சுமையையும், கெர்ரி ஸ்ட்ரக்கின் தோளில் விழுந்தது.

தன் முதல் முயற்சியை பிரமாதமாகத் தொடங்கினார். வால்டில் இருந்து மிக அருமையாக குதித்த கெர்ரி, தரையிறங்கும் போது சொதப்பிவிட்டார்.

டாமினிக் மோசியானோவைப் போல கெர்ரியும் கீழே விழுந்தார்.

அவர் தன் இடது காலை நொண்டிக் கொண்டே ஒரு மாதிரி தாங்கலாக நடந்து வந்து கொண்டிருந்தார். அவருடைய கணுக்காலில் இரண்டு தசை நார்கள் கிழிந்திருந்தன என்கிறது ஒலிம்பிக்ஸ் சேனல்.

ஒரு சாமானியருக்கு இப்படி இரண்டு தசைநார்கள் கிழிந்தால், அவர்களின் விளையாட்டு வாழ்கையே முடிவுக்கு வந்துவிடும்.

கெர்ரி ஸ்ட்ரக்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவுக்கோ ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் தன் முதல் ஒலிம்பிக் தங்கத்தை வெல்ல, வால்ட்டில் ஒரு வலுவான செயல்பாடு தேவையாக இருந்தது.

அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் கண்டிப்பான பயிற்சியாளர் பெலா கரோலி, அத்தருணத்தில் ஒரு கடினமான முடிவை எடுத்தார்.

இரண்டு லிகமெண்ட் தசைகள் கிழிந்த கெர்ரி ஸ்ட்ரக்கை மீண்டும் வால்ட்டில் குதிக்கும் முயற்சியை மேற்கொள்ளச் சொன்னார் பெலா கரோலி.

அன்று அவர் கூறியதை இன்றளவும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

வால்ட் ஜம்பிங் ஓடுதளத்தில் வலது காலை மட்டும் வலுவாக ஊன்றிக் கொண்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்.

வெற்றி தோல்வி குறித்த எந்த பயமோ, நம்மால் செய்ய முடியுமா, முடியாதா, கால் என்ன ஆகும் என்கிற குழப்பமோ எதுவும் கெர்ரி ஸ்ட்ரக்கின் கண்ணிலோ, உடல் அசைவுகளிலோ தெரியவில்லை.

அமெரிக்க அணியில் இருந்தவர்கள் கெர்ரியின் துணிச்சலைப் பாராட்டுவதா? அவர் காலுக்கு என்ன ஆகும் என வருந்துவதா எனத் தெரியாமல் பதற்றத்தில் இருந்தனர்.

ஒரு பெருமூச்சோடு முழு வேகத்துடன் ஓடி வால்ட்டில் இருந்து பிரமாதமாக குதித்தார். நறுக்கென நங்கூரம் போட்டது போல தரையிறங்கினார் அந்த 1.41 மீட்டர் உயரமிருந்த பெண்மணி. அடுத்த நொடியே தன் இடது காலை தூக்கிக் கொண்டு அனைவருக்கும் நன்றி கூறினார்.

கெர்ரி ஸ்ட்ரக்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்கா மட்டுமின்றி, அரங்கில் கூடியிருந்த அனைவரும் கெர்ரியின் செயல்பாட்டைக் கண்டு ஆர்ப்பரித்தனர். எழுந்து நின்று கைதட்டி கெளரவப்படுத்தினர்.

ஆனால் கெர்ரியால் அடுத்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. அப்படியே தரையிறங்கிய இடத்திலேயே உட்கார்ந்துவிட்டார்.

அமெரிக்க அணியைச் சேர்ந்தவர்கள், கெர்ரியின் காலில் கட்டுப்போட்டனர். பெலா கரோலி தன் வெற்றி வீராங்கனையை அலேக்காகத் தூக்கிக் கொண்டு சென்றார்.

ஆம், கெர்ரியின் துணிச்சலால் ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்கா ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் தன் முதல் பதக்கத்தை வென்றது என்கிறது யூ எஸ் ஏ டுடே வலைதளம்.

கண்களில் தேங்கிய கண்ணீரோடு, அமெரிக்க தேசிய கீதத்தைப் பாட முடியாமல் தங்கப் பதக்கத்தின் நடுநாயகியாக பதக்க மேடையில் நின்று கொண்டிருந்தார் கெர்ரி ஸ்ட்ரக்.

அந்த ஒரு அசாத்தியமான முயற்சியில், அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஒலிம்பிக் வரலாற்றிலும் நீங்கா இடம்பிடித்துவிட்டார்.

"Pain is Temporary, Pride is Forever" என ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு. அன்றும், இன்றும், என்றும் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான கெர்ரி ஸ்ட்ரக் அவ்வாசகங்களுக்கு பொருத்தமானவராகிவிட்டார்.

1992 பார்சிலோனா ஒலிம்பிக்கிலும் அமெரிக்காவுக்கு வெண்கலம் வாங்கிக் கொடுத்த அணியில் 15 வயது இளம் வீராங்கனையாக கெர்ரி இருந்தார் என்கிறது யுஎஸ்ஏ டுடே வலைதளம்.

8 வயதில் தன் சகோதரர் மற்றும் சகோதரியைப் பார்த்து ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாடத் தொடங்கியவர் மூன்று முறை உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றிருக்கிறார்.

துரதிர்ஷ்டவசமாக, கெர்ரி ஸ்ட்ரக் 1996 அட்லாண்டா ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு பெரிய சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வெல்லவில்லை.

இந்தியர்கள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டிகள்

ஆகஸ்ட் 3 - செவ்வாய்கிழமை

  • காலை 5.50 மணிக்கு - பெண்கள் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றி - அன்னு ராணி
  • காலை 7.00 மணிக்கு - ஆண்கள் ஹாக்கி போட்டி - அரையிறுதி - பெல்ஜியத்துடன்
  • மாலை 3.45 மணிக்கு - ஆண்கள் குண்டு எறிதல் - தகுதிச் சுற்று - தேஜிந்தர் பால் சிங் தூர்
  • பெண்கள் ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தம் 62 கிலோ எடைப்பிரிவு - சோனம் - மங்கோலியாவின் குரெல்கு உடன் 1/8 இறுதிச் சுற்று.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :