பாப் பீமன்: 52 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ஒலிம்பிக் சாதனைக்கு சொந்தக்காரர்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கெளதமன் முராரி
- பதவி, பிபிசி தமிழுக்காக
1968 ஒலிம்பிக் போட்டிகள் மெக்சிகோவில் நடந்தது. அதோ பாப் பீமன், நீளம் தாண்டுதலில் இறுதிப் போட்டிக்கு தேர்வு பெற முடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறார். முதல் இரு முயற்சிகளும் ஃபவுலாகிவிட்டன.
தன் மூன்றாவது முயற்சியை சரியாக மேற்கொள்ள தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார் அந்த அமெரிக்க வீரர்.
பீமனோடு போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த சக அமெரிக்க வீரரான ரால்ஃப் பாஸ்டன், அவரை சமாதானப்படுத்தி சில அறிவுரைகளை வழங்கினார்.
மூன்றாவது முயற்சியில் 8.19 மீட்டர் தூரம் தாண்டி, ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள் இரவு, அவருக்கு மனமே சரியில்லை. தன் வாழ்வில் எல்லாமே தவறாக நடப்பதாக வருத்தப்பட்டார்.
பிரிகம் யங் என்பவரின் இனவாத கொள்கைகளுக்கு எதிராக, கருப்பினத்தவர்களோடு சேர்ந்து சில புறக்கணிப்பு போராட்டங்களில் கலந்து கொண்டதால் டெக்ஸாஸ் எல் பசோவில் அவருக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை இழந்திருந்தார் என்கிறது இ.எஸ்.பி.என் வலைதளம். மேலும் அன்று இரவு, அவர் டகிலா மதுபானத்தை அருந்தியதாகவும் குறிப்பிடுகிறது.

பட மூலாதாரம், Getty Images
அடுத்த நாள் எல்லா சுக துக்கங்களையும் மறந்து, தெளிந்த நீரோடை போல் களத்துக்கு வந்தார்.
அப்போட்டியில் அமெரிக்காவின் ரால்ஃப் பாஸ்டன். சோவியத்தின் இகோர் டெர் ஓவனேசியன் போன்ற சாதனை படைத்த வெற்றியாளர்கள் இருந்தனர்.
இந்த இரு வீரர்களும் 1960 - 1967 வரை பல்வேறு சாதனைகளை முறியடித்திருக்கிறார்கள். அப்போது பாப் பீமன் ஓர் இளங்கன்று, அவ்வளவு தான். அவர் தங்கம் வெல்வார் என்று எல்லாம் யாரும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை.
அவருக்கான வாய்ப்பு வந்தது. ஓடத் தொடங்கியதிலிருந்து ஆறே நொடி தான் பறந்து வந்து விழுந்தார். பீமனுக்கே அவர் சிறப்பாக தாண்டியதாகத் தோன்றியது.
அந்த நேரத்தில் ஓர் அசாதாரண பிரச்னை எழுந்தது. 1968 ஒலிம்பிக்கில் நீளம் தாண்டும் வீரர்களின் தூரத்தை அளக்க புதிய தொழில்நுட்பக் கருவி பயன்படுத்தத் தொடங்கி இருந்தனர். அக்கருவி, பாப் பீமன் தாண்டிய தூரத்தை அளக்க முடியாமல் திணறியது.
ஒலிம்பிக் நீளம் தாண்டுதல் போட்டி சில நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் பழைய படி மீட்டர் டேப்பை வெளியே எடுத்து, பாப் பீமன் தாண்டிய தூரத்தை அளக்கத் தொடங்கினர். ஒன்றுக்கு, இரு முறை, மூன்று முறை... என பல முறை தூரத்தை அளந்தனர். பாப் பீமன் தாண்டிய தூரத்தை அளக்கும் நடவடிக்கை சுமார் 20 நிமிடங்களுக்கு நீடித்தது என்கிறது ஒலிம்பிக்ஸ் சேனல்.

பட மூலாதாரம், Getty Images
கிட்டத்தட்ட எல்லா தடகள ஒலிம்பிக் அதிகாரிகளும் கூட கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுப் பார்த்து அதிர்ந்து போயினர். பாப் பீமன் 8.90 மீட்டர் தூரம் தாண்டி இருந்தார்.
அந்த காலகட்டத்தில் 8.35 மீட்டர் தான் உலக சாதனையாக இருந்தது. அச்சாதனையை 55 சென்டிமீட்டர் தூரம் கூடுதலாகத் தாண்டி, நீளம் தாண்டுதலில் ஒரு பிரும்மாண்ட ஒலிம்பிக் சாதனையைப் படைத்தார் என்கிறது ஒலிம்பிக்ஸ் சேனல்.
பாப் பீமன் ஒரு குழந்தை போல மைதானத்திலேயே சுருண்டு கண்ணீர் விட்டு அழுதார். சக வீரர்கள் தேற்றி சமாதானப்படுத்தினர்.
இந்த 8.90 மீட்டர் தான் இன்று வரை ஒலிம்பிக் சாதனையாக இருக்கிறது. தற்போது உலக அளவில் மைக் பவல் என்கிற அமெரிக்க வீரர் 8.95 மீட்டர் தூரத்தைத் தாண்டி உலக சாதனை படைத்து இருக்கிறார்.
ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் யாரும் இதுவரை 8.90 மீட்டரைத் தாண்டவில்லை என்கிறது உலக தடகள சம்மேளனத்தின் தரவுகள்.
இதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்ன என்றால், அந்த ஒரு முறைக்குப் பிறகு பாப் பீமனாலேயே, 8.90 மீட்டர் தூரத்தைத் தாண்ட முடியவில்லை.
அவ்வளவு ஏன்..? 1968 ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு பாப் பீமனால் அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைக் கூட வெல்ல முடியவில்லை.
அவருக்கு தொடர்ந்து காலில் காயம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது என பாப் பீமன் கூறியதாக இ.எஸ்.பி.என் வலைதள செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
யார் இவர்?

பட மூலாதாரம், Getty Images
15 வயதிலேயே 7.34 மீட்டர் தூரம் தாண்டிய பாப் பீமன், உடல் ரீதியாகவே நீளம் தாண்டும் திறனோடு இருந்தார் என்கிறது ஒலிம்பிக் சேனல். போல தன் 22ஆவது வயதில் 8.33 மீட்டர் தூரம் தாண்டி எல்லோர் கவனத்தையும் ஈர்த்தார் நியூ யார்க் மாகாணத்தைச் சேர்ந்த பாப் பீமன்.
அவரது தாயார் சிறுவயதிலேயே காச நோயால் இறந்துவிட்டார். தாயை இழந்த, தாயின் அன்புக்கும் கவனிப்புக்கும் ஏங்கிய சிறுவன், தொல்லை கொடுப்பவனாக கொஞ்சம் காலம் கழித்தான்.
அவர் கவனம் மெல்ல விளையாட்டின் மீது திரும்பியது. சரியான பயிற்சிகள் கிடைக்க மெல்ல தன் திறனை வளர்த்துக் கொண்டு 1968 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு ஒரு பிரம்மாண்ட உலக சாதனை படைத்தார்.
பாப் பீமனின் 8.90 மீட்டர் சாதனை, புராணக் கதைகளில் வரும் பீமனைப் போல கடந்த 52 ஆண்டுகளாக யாராலும் உடைக்க முடியாத அளவுக்கு வலுவாக இருக்கிறது.
டோக்யோ ஒலிம்பிக்கிலாவது யாரேனும் இவர் சாதனையை உடைப்பார்களா? பொருத்திருந்து பார்ப்போம்.
பிற செய்திகள்:
- காஷ்மீர் ப்ரீமியர் லீக்: 'வெளிநாட்டு வீரர்களை பிசிசிஐ மிரட்டுகிறது ' - பாகிஸ்தான்
- "பெட்ரோல் பாண்டுகளால்தான் பெட்ரோல் விலை உயர்வதாகச் சொல்வது பொய்" - ஆனந்த் ஸ்ரீநிவாசன்
- ஆப்கானிஸ்தானில் 3 முக்கிய நகரங்களில் நுழைந்த தாலிபன்கள்
- நரபலி கொடுக்கும் ஆஸ்டெக் பேரரசு: மத்திய அமெரிக்காவை ஆட்டிப்படைத்த பழங்குடிகளை பற்றி தெரியுமா?
- பாதாள சாக்கடை சுத்தம் செய்த யாரும் இறக்கவில்லை என இந்திய அரசு சொல்வது உண்மையா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












