CSK Vs MI: சென்னை அணி ரசிகர்கள் நேற்றைய போட்டியை மறக்க முடியுமா? தோல்விக்கு தோனி சொன்ன காரணம் என்ன?

தோனி

பட மூலாதாரம், BCCI/IPL

    • எழுதியவர், விவேக் ஆனந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

உலகளவில் மிகச்சிறந்த டி20 அணிகளில் ஒன்றாக கருதப்பட்டு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த முறை கிட்டத்தட்ட பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. அது மட்டுமல்ல, புள்ளிப்பட்டியலிலும் தற்போது கடைசி இடத்தில் இருக்கிறது.

இதைவிட மோசமான ஒரு விஷயம் என்னவென்றால், ஆரம்பத்தில் கடைசி ஓவர்களில் தோல்வியை தழுவத் துவங்கிய சென்னை தற்போது மிக மோசமான தோல்விகளைச் சந்தித்து வருகிறது.

அந்த வகையில் அக்டோபர் 23-ம் தேதி இரவு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை அணி விளையாடிய விதம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வரலாற்றில் மிக மோசமான பக்கங்களில் ஒன்றாக பதிந்துள்ளது.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான கடந்த போட்டியின் முடிவில் தோனி இளைஞர்கள் குறித்து பேசிய 'Spark' என்ற விஷயம் சமூக வலைத்தளத்தில் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

அதனை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கடுமையாக கண்டித்தனர். இந்த நிலையில் இன்றைய போட்டியில் வாட்சன், கேதர் ஜாதவ், கரண் ஷர்மா ஆகியோர் நீக்கப்பட்டு இளம் வீரர்கள் ருதுராஜ், நாராயண் ஜெகதீசனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. இம்ரான் தாஹீரும் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

மும்பை அணியில் காயம் காரணமாக ரோஹித்துக்கு பதில் பொல்லார்டு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் மும்பை - சென்னை அணிகள் மோதும் போட்டி சிறிய மைதானமான ஷார்ஜாவில் நடைபெறுகிறது என்பதால் மிகப்பெரிய ரன் விருந்து காத்திருக்கிறது என விமர்சகர்கள் கருதினர்.

அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டுகள்

மும்பை அணி

பட மூலாதாரம், BCCI/IPL

சென்னை அணி டாஸை இழந்தது, ஃபாப் டு பிளஸிஸுடன் களமிறங்கும் வாய்ப்பு ருதுராஜுக்கு வழங்கப்பட்டிருந்தது. போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆனார் ருதுராஜ். முதல் ஓவரையே மெய்டனாக வீசி மிரட்டினார் போல்ட். இரண்டாவது ஓவரில் ராயுடுவையும், ஜெகதீசனையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி அசத்தினார் பும்ரா. கொல்கத்தாவை போல 3 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது சென்னை.

ஆனால் போல்டின் அடுத்த ஓவரில் ஃபாப் டு பிளஸிஸூம் அவுட் ஆக மூன்று ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலைக்குச் சென்றது சென்னை. ஐபிஎல் வரலாற்றிலேயே இவ்வளவு குறைந்த ரன்களுக்கு ஒரு அணி 4 விக்கெட்டுகளை இழப்பது இதுவே இரண்டாவது முறை. அதுவும் சென்னைக்கு இதுதான் முதல் முறை.

பின்னர் ஜடேஜாவும் வீழ்ந்தார், தோனியும் ஒரு சிக்ஸர் விளாசிய பின்னர் சாகர் பந்தில் வீழ்ந்தார். அப்போது சென்னை அணியின் ஸ்கோர் ஏழு ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு வெறும் 30 ரன்கள்.

பொறுப்பாக செயல்பட்ட சாம் கரண்

ஐபிஎல் வரலாற்றில் மிக குறைந்த ரன்கள் எடுத்திருப்பது பெங்களூரு அணிதான். 49 ரன்கள். பெங்களூரு அணியின் 49 ரன்களையாவது சென்னை அணி அடிக்குமா என்பது சந்தேகம் என்ற நிலை உருவானது. ஆனால் சாம் கரண் பொறுப்பாக விளையாடினார். தேவையில்லாமல் பந்துகளை விளாச முற்படாமல் ரன்களை சிறுக சிறுகச் சேர்த்தார். மீதமிருந்த பந்துவீச்சாளர்களை வைத்துக்கொண்டு சிறப்பாக விளையாடிய சாம் கரணால் சென்னை அணி 100 ரன்களை தாண்டியது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்திருந்தது.

சாம் கரண் போல்ட் வீசிய கடைசி ஓவரில் மூன்று பௌண்டரிகள் விளாசினார். கடைசி பந்தில் போல்ட் வீசிய யார்க்கரில் வீழ்ந்தார். சாம் கரண் 47 பந்துகளில் 4 பௌண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 52 ரன்கள் எடுத்தார்.

சென்னை அணிக்காக சாம் கரண் விளாசும் முதல் அரை சதம் இதுதான். 22 வயதாகும் சாம் கரண் குவித்த கௌரவமான ரன்களால் சென்னை அணி மிக குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆகும் அபாயத்தில் இருந்து தப்பித்தது. மும்பை அணியில் போல்ட் 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன்பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு பந்தில் கூட திணறவில்லை, சிக்சரும் பௌண்டரியுமாக நொறுக்கியெடுத்து 13 ஓவரிலேயே போட்டியை முடித்தது. இஷான் கிஷன் 37 பந்துகளில் 5 சிக்ஸர்கள் ஆறு பௌண்டரிகள் விளாசி 68 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் மும்பை முதலிடம் பிடித்தது.

46 பந்துகள் மீதமிருக்கும் போதே சென்னை அணியை வீழ்த்தியது மும்பை. ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து இவ்வளவு மோசமாக தோற்பது இதுவே முதல் முறை.

சென்னை அணி

பட மூலாதாரம், BCCI/IPL

என்ன சொன்னார் தோனி?

போட்டி முடிந்த பிறகு பேசிய தோனி, "இந்த தோல்வி காயப்படுத்துகிறது, எங்கே சறுக்குகிறோம் என்பதை பார்க்கவேண்டும், இது எங்களுக்கான ஆண்டாக அமையவில்லை, ஓரிரண்டு போட்டிகளில் மட்டும் இதுவரை பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டோம்."

"ராயுடுவுக்கு காயம் ஏற்பட்ட பின்னர் மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படவில்லை. பேட்டிங் ஆர்டர் மீது நாங்கள் அழுத்தத்தை அதிகரித்துக்கொண்டே இருந்தோம். எப்போதெல்லாம் எங்களுக்கு நல்ல தொடக்கம் அமையவில்லையோ அப்போது மிடில் ஆர்டர் மீது அழுத்தம் கூடியது. கிரிக்கெட்டில் உங்களுக்கு கடினமான கட்டம் வரும்போது உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் அமையவேண்டும். ஆனால் இந்த தொடரில் அது எங்களுக்கு அமையவில்லை. பனி இல்லாத சமயத்தில் நாங்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்தபோது நாங்கள் டாஸ் வென்றிருக்கவில்லை. ஆனால் நாங்கள் பேட்டிங் செய்த போட்டிகளில் எல்லாம் திடீரென பிற்பாதியில் பனி இருந்தது. எப்போதெல்லாம் நீங்கள் சரியாக செயல்படாமல் இருக்கிறீர்களோ அப்போதெல்லாம் அதற்கு காரணமாக 100 விஷயங்களை சொல்லமுடியும். நம்மால் இயலக்கூடிய முழு பலத்தை திரட்டி விளையாடுகிறோமா என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். மூன்று அல்லது நான்கு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை எனில் கஷ்டம் தான்," என்றார் தோனி.

மும்பை அணி

பட மூலாதாரம், பொல்லார்டு

சாம் கரணை பாராட்டிய பொல்லார்டு

பொல்லார்டு கேப்டனாக பொறுப்பேற்ற போட்டிகளில் தொடர்ந்து 15வது முறையாக சம்பந்தப்பட்ட அணி தோல்வியடையாமல் இருக்கிறது. வெற்றி குறித்து பேசிய பொல்லார்டு "சென்னையை 100 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும் என நினைத்தோம். ஆனால் சாம் கரண் சிறப்பாக விளையாடினார்" என புகழ்ந்தார்.

இந்த போட்டியில் ஆட்டநாயகனாக ட்ரென்ட் போல்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: