ஐபிஎல் 2020: RCB Vs RR - ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

கோலி

பட மூலாதாரம், BCCI / IPL

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 15ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

இதன்மூலம் இந்த தொடரில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது பெங்களூரு அணி.

போட்டியில் சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் தனது திறமையை வெளிப்படுத்தியது.

ராஜஸ்தான் அணியை 154 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்கள் ஐந்து பந்துகள் முன்னதாகவே 155 ரன்கள் என்ற இலக்கை எட்டினர்.

பெங்களூரு அணியின் கேப்டன் கோலி 72 ரன்களையும் படிகல் 63 ரன்களையும் எடுத்தனர்.

போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அந்த அணியில் அதிகபட்சமாக மஹிபால் 47 ரன்களை எடுத்தார்.

கேப்டன் ஸ்மித் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடர்ந்து பெரும் ஏமாற்றத்தையே தந்தனர்.

தொடக்கத்தில் சோபிக்காத பெங்களூரு

பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஃபிஞ்ச் மூன்றாவது ஓவரில் வெறும் எட்டு ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, அவருக்கு அடுத்தபடியாக வந்த படிகல் கேப்டன் கோலியுடன் சேர்ந்து அணிக்கு 99 ரன்களை சேர்த்தனர்.

படிகல் 34 பந்துகளில் அரை சதம் கண்டார். விளையாடிய நான்கு போட்டிகளில் இதுவரை மூன்று போட்டிகளில் அரை சதம் எடுத்துள்ளார்.

அதேசமயம் முந்தைய ஆட்டங்களில் பெரிதாக ரன் குவிக்காத கோலி இந்த போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார்.

பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள்

பட மூலாதாரம், BCCI/IPL

கோலி 41 ரன்களை அரை சதம் கண்டார். அணியின் வெற்றிக்கு 31 ரன்கள் தேவை என்ற நிலையில் படிகல் அவுட் ஆனார்.

இருப்பினும் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் கோலி. அவர் 7 பவுண்டரிகள், இரு சிக்ஸர்கள் என 53 பந்துகளில் 72 ரன்களை எடுத்தார்.

டாஸ் வென்ற ராஜஸ்தான்

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ராஜஸ்தான் அணி எளிதான இலக்கை பெங்களூரு அணிக்கு நிர்ணயித்தது.

அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக உருவெடுத்துள்ள டெவாட்டியா ஏழாவது இடத்தில் களமிறங்கினார். ஆட்டமிழக்காமல் 12 பந்துகளில் மூன்று சிக்ஸர்களை அடித்து 24 ரன்களை சேர்த்தார். இருப்பினும் வேறு எந்த ஆட்டக்காரர்களாலும் சிறப்பான ரன் எதையும் எடுக்கவில்லை.

கேப்டன் ஸ்மித் ஐந்து ரன்களையும், சஞ்சு சாம்சன் நான்கு ரன்களையும் எடுத்தனர். ஜோஸ் பட்லர் 22 ரன்களை எடுத்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: