`சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் கொலையல்ல` - எய்ம்ஸ் அறிக்கை

சுஷாந்த் சிங்

பட மூலாதாரம், Getty Images

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம், தற்கொலையால் ஏற்பட்டதுதான் என எய்ம்ஸ் மருத்துவமனையால் அமைக்கப்பட்ட தடயவியல் குழு தெரிவித்துள்ளது.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து அறிவதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையால் தடயவியல் மருத்துவ குழு ஒன்று அமைக்கப்பட்டது.

"எங்களது முடிவான அறிக்கையில், இது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மரணம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்," என அந்த குழுவின் தலைவர் சுதிர் குப்தா தெரிவித்துள்ளார்.

தூக்கிடப்பட்டதால் ஏற்பட்ட காயத்தைத் தவிர உடம்பில் வேறெந்த காயங்களும் இல்லை என்றும், இறந்தவரின் உடலிலோ அல்லது ஆடையிலோ சண்டையிட்டது போன்ற எந்த தடயமும் இல்லை எனவும் எய்ம்ஸ் தடயவியல் குழுவின் தலைவர் சுதிர் குப்தா தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. எனவே தனது இந்த அறிக்கையை சிபிஐயிடம் வழங்கியுள்ளது அந்த குழு.

மும்பை தடயவியல் ஆய்வகத்திலும், எய்ம்ஸின் நச்சுயியல் ஆய்வகத்திலும் எந்த ஒரு போதைப்பொருளும் கண்டறியப்படவில்லை என்றும் சுதிர் குப்தா தெரிவித்துள்ளார்.

இருப்பினும் வழக்கு விசாரணையில் இருப்பதால் மேற்கொண்டு எந்த தகவலையும் மருத்துவக் குழு பகிர்ந்து கொள்ள இயலாது எனத் தெரிவித்துள்ளது.

யார் இந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்?

1986ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி பீகார் மாநிலத்தின் பாட்னாவில் பிறந்தார் சுஷாந்த். பிறகு, பீகாரின் பூர்ணியா மாவட்டத்தில் வசித்து வந்த இவர், பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நடிக்கத் தொடங்கினார்.

திரையுலகில் முதலில் நடனக் கலைஞராக தன் பயணத்தை தொடங்கினார். பின்னர் அவருக்கு 'கிஸ் தேஷ் மே ஹை மேரா தில்' என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் 'பவித்ர ரிஷ்தா' என்னும் தொடரின் மூலம் அவர் பிரபலமடைந்தார்.

அதோடு நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

2006ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் தொடக்க விழாவில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்ற நடன நிகழ்ச்சி ஒன்றில் பின்னணி நடன கலைஞராக இருந்தார்.

'காய் போ சே' என்னும் படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆமிர் கான் படமான பிகேவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் மூலம் பரந்துபட்ட ரசிகர்களுக்கு இவர் அறிமுகமானார். சமீபத்தில் 'சிசோரே' என்னும் பாலிவுட் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் சுஷாந்த்.

'தோனி அண்டோல்ட் ஸ்டோரி' என்னும் படத்திற்காக இவர் சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.

'கிஸ் தேஷ் மே ஹை மேரா தில்' என்னும் தொலைக்காட்சி தொடர் மூலம் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கினார் சுஷாந்த் சிங் ராஜ்புத். அவர் கதாநாயகனாக நடித்த 'பவித்ர ரிஷ்தா' என்னும் தொலைக்காட்சி தொடர் மிகவும் பிரபலமானது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: