பிபிசி வாழ்நாள் சாதனையாளர் பி.டி.உஷா: 103 சர்வதேசப் பதக்கம் பெற்றவர் - ஒலிம்பிக் விதைகளை தூவுகிறார்

``அந்த போட்டியில் இந்தியா ஐந்து தங்கப்பதக்கம் வென்றது. அதில் நான்கு பதக்கம் நான் வென்றது. பதக்கம் பெறும் போது ஒலிக்கும் இந்திய தேசிய கீதத்தை கேட்கும் போதெல்லாம், என் நாட்டிற்காக என்னால் முடிந்ததை செய்துவிட்டேன் என்ற திருப்தி கிடைத்தது. என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் அது``
வென்றவர் நினைவில் நிற்பார்; தோற்றவர் மறக்கப்படுவார். இதுதான் விளையாட்டு உலகின் அழிக்க முடியாத விதி.
ஆனால் இதில் விதிவிலக்காக திகழ்ந்தவர் இந்தியாவின் தங்க மங்கை பி.டி.உஷா.
1984-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தடகள போட்டியில் நான்காம் இடம் பெற்றாலும், இன்று வரை இந்திய தடகளத்தில் மறக்கமுடியாத இடத்தை பெற்றிருக்கிறார் உஷா.
ஆனால் இந்திய தடகள அரங்கில் தனக்கான இடத்தை அவ்வளவு எளிதாக உஷா பெற்றுவிடவில்லை. ``1980 காலகட்டம் வித்தியாசமானது. நான் அப்போது தடகள வீராங்கனையாக இருந்தாலும், ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் என நினைத்து கூட பார்த்ததில்லை`` என நினைவு கூர்கிறார் பி.டி. உஷா.
பய்யோலியில் துவங்கிய ஓட்டம்
பிலவுளகண்டி தெக்கேபரம்பில் உஷா, கேரள மாநிலம் கோழிக்கோடில் உள்ள பய்யோலி என்ற குக்கிராமத்தில் வளர்ந்தார். அதனால்தான் பின்னர் அவருக்கு பய்யோலி எக்ஸ்பிரஸ் என்ற பட்டப்பெயர் வந்தது.
மிகப்பெரிய வெற்றியோடுதான் பி.டி.உஷா தடகள உலகில் காலடி எடுத்து வைத்தார். அப்போது நான்காம் வகுப்பு படித்து வந்த பி.டி.உஷாவை, அதே பள்ளியில் படித்து வந்த மாவட்ட சாம்பியனுடன் போட்டியிட வைத்தார் அவரது உடற்பயிற்சி ஆசிரியர். இந்த போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றி பெற்று, தடகளத்தில் தனக்கான பாதையை உருவாக்க தொடங்கினார் உஷா. அடுத்த சில ஆண்டுகள், மாவட்ட தடகள போட்டிகளில் உஷாவை தோற்கடிக்க ஆளே இல்லை.
அடுத்த கட்டமாக தனது 13-வது வயதில், கேரள அரசு தொடங்கிய பெண்களுக்கான விளையாட்டு மையத்தில் உஷா இணைந்தார். முதலில் தங்களுடைய பெண்ணுக்கு தடகளம் எல்லாம் ஒத்துவருமா என தயங்கிய உஷாவின் பெற்றோர், பின்னர் அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கத் தொடங்கினர். `` நான் அதிகாலை ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளும் போது, நாய் தொல்லை அதிகமாக இருக்கும். இதற்காகவே என்னுடைய அப்பா தினந்தோறும் ஒரு குச்சியோடு மைதானத்திற்கு வந்து அமர்ந்திருப்பார்.`` என்கிறார் பி.டி.உஷா.
மைதானம் மட்டும் அல்லாது, சில நேரம் ஓடும் ரயில்களை சக போட்டியாளராக கருதி ஓட்டப்பயிற்சி எடுத்துள்ளார் உஷா. 1978-79 காலகட்டத்தில் ஒரு பெண் அரைக்கால் சட்டை அணிந்து கொண்டு ஓடுவதை பலரும் ஆச்சர்யமாக பார்த்துள்ளனர். பலர் இதற்காகவே உஷா பயிற்சி செய்வதை பார்ப்பதற்காகவே பலரும் வந்துள்ளனர்.
சாதாரணமாக சென்று கொண்டிருந்த உஷாவின் தடகள வாழ்க்கை, கேரள விளையாட்டுப்பள்ளியின் ஆசிரியர் ஓம் நம்பியார் என்பவரால் அடுத்த தளத்திற்கு சென்றது. உஷாவிடன் இருக்கும் திறமையை கண்டுகொண்ட அவர், தடகள போட்டிகளுக்காகவே அவரை வடிவமைக்க தொடங்கினார்.
மாவட்டம் தொடங்கி மாநில போட்டிகள், தேசிய போட்டிகளில் உஷா ஜொலிக்கத் தொடங்கினார். 1980-ஆம் ஆண்டு தனது 16 வயதில் மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் உஷா கலந்து கொண்டார். அந்த ஒலிம்பிக் போட்டி அவருக்கு கை கொடுக்காவிட்டாலும், 1984-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் தடகள இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனையாக உஷா முத்திரை பதித்தார். வினாடிக்கும் குறைவான நேர வித்தியாசத்தில் வெண்கலப்பதக்கத்தை தவறவிட்டு நான்காம் இடம் பிடித்தார்.

பட மூலாதாரம், Getty Images
அரை இறுதியில் உஷாவின் ஓட்டத்திறனை பார்த்த பலரும், கண்டிப்பாக தங்கம் வெல்லும் வாய்ப்பு உஷாவுக்கு உள்ளது என கணித்திருந்தனர். ஆனால் இறுதி போட்டியில் நடந்த சில எதிர்பார்க்காத சம்பவங்கள், உஷா மட்டுமல்லாது பல லட்சம் இந்தியர்களின் மனதையும் நொறுங்கச் செய்தது.
துப்பாக்கி குண்டு விண்ணில் பாய்ந்ததும், சிறப்பாக ஓட்டத்தை தொடங்கியதாகவே உஷா நினைத்தார். ஆனால் அடுத்த சில விநாடிகளில் ஆஸ்திரேலியா வீராங்கனை டெபி ஃபிளிட்டாஃப் களத்தில் தவறி விழ, எல்லாம் ஒரு கணத்தில் மாறிப்போனது.
``நான் பதற்றமடைந்துவிட்டேன். என்னுடைய மன ஒருங்கிணைப்பு எல்லாம் போய்விட்டது. பயத்தில் என் கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. எனவே அரை இறுதியை விட மெதுவாகவே நான் ஓட்டத்தை தொடங்கினேன்.`` என்றார் உஷா.
துவக்கம் சரியாக அமையவில்லை என்றாலும், கண்டிப்பாக முதல் மூன்று இடங்களுக்குள் உஷா வருவார் என பலரும் நம்பினார்கள். `` இறுதிக்கோட்டுக்கு அருகில் என் கால் முன்னால் இருந்தது. ஆனால் என்னுடைய மார்பை நான் முன்னால் சாய்க்கவில்லை. ஒருவேளை நான் அதை சரியாக செய்திருந்தால், கண்டிப்பாக பதக்கம் வென்றிருப்பேன்.`` என ஒலிம்பிக்கில் தான் நான்காம் இடம்பெற காரணமான தருணத்தை நினைவு கூர்ந்தார் உஷா
ஒலிம்பிக்கில் நான்காம் இடம் பெற்றாலும், இந்தியாவின் தங்கமங்கையாகவே உஷா கருதப்பட்டார்.
வீழ்ச்சியும் மீட்சியும்
ஒலிம்பிக் தோல்விக்கு பிறகு கலந்து கொண்ட அடுத்த சில போட்டிகளில் உஷாவால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. விமர்சனங்களுக்கு உள்ளானார் உஷா. ஆனால் தன்னால் மீண்டெழ முடியும் என்பதில் மட்டும் உஷா உறுதியாக இருந்தார்.
1986-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகளப்போட்டிகளில் தன் திறமையை நிரூபித்தும் காட்டினார். 400 மீட்டர் தடை தாண்டும் போட்டி, 400 மற்றும் 200 மீட்டர் தடகளம், 400 மீட்டர் தொடர் ஓட்டம், ஆகியவற்றில் தங்கம் வென்றார். 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

பட மூலாதாரம், Getty Images
``அந்த போட்டியில் இந்தியா ஐந்து தங்கப்பதக்கம் வென்றது. அதில் நான்கு பதக்கம் நான் வென்றது. பதக்கம் பெறும் போது ஒலிக்கும் இந்திய தேசிய கீதத்தை கேட்கும் போதெல்லாம், என் நாட்டிற்காக என்னால் முடிந்ததை செய்துவிட்டேன் என்ற திருப்தி கிடைத்தது. என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் அது``
அதன் பின்னர் 1983-ஆம் ஆண்டு அர்ஜுனா விருதும், 1985-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் அளித்து உஷா கெளரவிக்கப்பட்டார்.
திருமண வாழ்க்கையும், தடகளமும்
சர்வதேச தடகள அரங்கில் தன் பெயரை நிலைநாட்டிய உஷா, திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தார். 1991-ஆம் ஆண்டு குழந்தை பெற்றுக்கொள்வதற்காக தடகள அரங்கிலிருந்து தற்காலிக ஓய்வை எடுத்தார் உஷா.
ஆனால் உஷாவின் கணவரும் , கபடி வீரருமான ஸ்ரீனிவாசம் அளித்த ஊக்கத்தினால் குழந்தை பேறுக்கு பிறகு மீண்டும் தடகள அரங்கில் நுழைந்தார். 1997-ஆம் ஆண்டு தடகள அரங்கில் ஓய்வை அறிவிக்கும் போது, உஷா பெற்றிருந்த சர்வதேச பதக்கங்களின் எண்ணிக்கை 103.
நிறைவேறாத ஒலிம்பிக் கனவு
நூற்றுக்கணக்கில் பதக்கங்களை குவித்திருந்தாலும், நூலிழையில் தவறிவிட்ட ஒலிம்பிக் பதக்கம் உஷாவின் மனதில் நிறைவேறாத ஆசையாகவே இருந்து வந்தது. தன்னால் ஒலிம்பிக்கில் வெல்ல முடியாவிட்டாலும், தன் பயிற்சி மையம் மூலமாவது இந்தியாவுக்கு ஒலிம்பிக் பதக்கம் பெற வேண்டும் என தொடங்கப்பட்டதுதான் உஷா தடகளப்பள்ளி.
``லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் தோற்றதும், பயிற்சிக்காக ஒவ்வொரு ஆண்டும் லண்டன் செல்வேன். அங்கு தடகளத்திற்காக இருக்கும் வசதிகளை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும். நான் எப்போது தடகள பயிற்சிப்பள்ளி தொடங்கினாலும், இப்படிப்பட்ட வசதிகளை கொண்டுவர வேண்டும் என்பது என் மனதில் இருந்து வந்தது.`` என்கிறார் உஷா.
பிற செய்திகள்:
- நாக் அவுட்டும், இந்தியாவும் - தொடரும் ஏமாற்றங்கள், காரணம் என்ன?
- கொரோனா வைரஸ்: சீனாவில் இடிந்த விடுதி, மூடப்படும் தேவாலயங்கள், 1 லட்சம் பேர் பாதிப்பு - நீளும் துயரம்
- ஹாலிவுட்டில் பாலுறவு காட்சிகள் எப்படி படமாக்கப்படுகிறது தெரியுமா?
- அவசரநிலை காலத்தில் அருண் ஜெட்லி ரகசியமாக பிபிசி ரேடியோ கேட்டதாக சொன்னார்: டோனி ஹால்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












